தற்கொலை எண்ணத்தில் இருந்து தப்பிக்க ஆன்மிகம் காட்டும் வழி!

தற்கொலை எண்ணத்தில் இருந்து தப்பிக்க ஆன்மிகம் காட்டும் வழி!

ற்கொலை எண்ணம் என்பது ஒரு மனப் பிறழ்வு நோயாகும். இந்த நோயை ஒருவர் ஆரம்பத்திலேயே குணப்படுத்த வேண்டும். இல்லையெனில் அது அவரை நிச்சயம் பதம் பார்த்தே செல்லும். ஒவ்வொரு மனிதனையும் இறைவன் ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டே இந்த பூமியில் படைக்கின்றான். படைத்த அவனுக்கே அந்த உயிரை எடுக்கவும் உரிமை உண்டு. அதை விடுத்து, தன்னைத்தானே மாய்த்துக்கொள்வதை எந்த வகையிலும், ஏன் அந்த இறைவனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சமீப காலமாக இந்தக் கலியுகத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருவதைக் காண்கிறோம். அதிலும் இளம் வயதினர் அதிகம் தற்கொலை செய்துகொள்வது வருத்தத்துக்குரிய விஷயமாகும். இதற்குக் காரணம், தற்போதுள்ள வேகமான வாழ்க்கை முறைதான். அவசியமாக செய்து முடிக்க வேண்டிய பணிகளை வேகமாக செய்து முடிக்க வேண்டும்தான். அதற்காக வாழ்க்கையையும் வேகமாக முடித்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை.

காலையில் தாமதமாக எழுவது, அவசர அவசரமாக இயந்திர கதியில் தத்தம் பணிகளுக்குச் செல்வது, வேகவேகமாக அன்றையப் பணிகளை முடிப்பது, இரவு நெடுநேரம் கழித்து உறங்குவது என ஒரு நாள் பொழுதை இப்படித்தான் பெரும்பாலானோர் கழிக்கின்றனர். இதில் ஒருவர் மற்றவரோடு பழகுவதற்கான சந்தர்ப்பத்தையே ஏற்படுத்தக்கொள்வதில்லை. தங்கள் மனதிலுள்ள சுக, துக்கங்களை மற்றவரோடு பகிர்ந்து கொள்வது என்பதும் இல்லை.

இன்றைய இளைஞர்கள் தனிமையைத்தான் அதிகம் விரும்புபவர்களாக உள்ளனர். தனிமையும், தற்கொலையும் பஞ்சும் நெருப்பும் போலத்தான். இந்த நிலை நீண்ட காலம் நீடித்தால் அதன் முடிவு பெரும்பாலும் தற்கொலையாகத்தான் முடியும்.

தற்கொலைக்குத் தீர்வாக ஆன்மிகம் செல்வதெல்லாம், அமைதி, தியானம் மற்றும் இறைவனை மட்டும் நம்புவதுதான். இறைவன் எப்போதும் நமக்குள்ளேதான் இருக்கிறார் என்பதை உணர்ந்தாலே இதுபோன்ற தற்கொலை எண்ணங்கள் தலைதூக்காது. ‘இறைவா நீயே கதி’ என இறைவனின் பாதத்தை சரணடைந்து அமைதியாக தியானம் செய்தாலே அனைத்தும் மாறும். அனைத்தும் நன்மைக்கே என எடுத்துச் செல்லும் மனமிருந்தால் ஒருவரும் தற்கொலை முடிவை கைக்கொள்ள மாட்டார்கள். இறைவன் நம்மை சோதிப்பதெல்லாம் நாம் அடுத்தடுத்த அனுபவங்களை தைரியமாக கடந்துசெல்ல வேண்டும் என்பதற்காகதான். சிற்பியின் செதுக்கல்களைத் தாங்கும் கருங்கல்தான் அனைவராலும் வணங்கப்படும் இறை மூர்த்தமாகிறது. ஆனால், இவற்றையெல்லாம் புறந்தள்ளி அந்த நேர மனப் பிறழ்வாலேயே ஒருவர் தற்கொலை முடிவை எடுத்து அதை நிறைவேற்றியும் கொள்கிறார்.

தாங்க முடியாத துயரங்கள் தனலாய் ஒருவரைத் தாக்கும்போது எவ்வளவு மன தைரியம் கொண்டவருக்கும் ஒரு கணமாவது தற்கொலை எண்ணம் தலைதூக்குவது இயல்புதான். ஆனால், தற்கொலை செய்துகொள்ள விரும்புவர், ‘தாம் ஒருவர் தற்கொலை செய்துகொள்வதால், இந்த உலகு ஒரு கடுகளவும் மாறாது என்பதையும், அதனால் இந்த உலகில் எந்த மாற்றமும் நிகழாது’ என்பதை உணர்ந்தாலே அந்தத் தற்கொலை சிந்தனையைப் போக்கி விடலாம். அதுமட்டுமின்றி, தற்கொலை சிந்தனை என்பது ஒரு கணப் பொழுதில் முடிவெடுத்து, அடுத்த கணப்பொழுதில் நிகழ்த்திக்கொள்வதுதான். அந்த ஒரு கண நேரத்தை நேர்மறையான சிந்தனைகளால் நிறைத்து, அந்த எண்ணத்தில் இருந்து விடுபட்டாலே இதுபோன்ற தற்கொலையை தவிர்த்து விடலாம்.

ஒருவேளை எதை எதிர்பார்த்து, அது கிடைக்காததால் நீங்கள் தற்கொலை செய்து கொண்டீர்களோ, அது உங்கள் தற்கொலையின் அடுத்த நொடிப் பொழுதில் கூட நிகழக் காத்திருக்கலாம். ஒரு புத்தகத்தைப் படிக்கையில் நீங்கள் எதை எதிர்பார்த்து அதை வாசிக்கிறீர்களோ, அது அடுத்த பக்கத்தில் வருவதற்குள் அந்தப் புத்தகம் தம்மை ஏமாற்றி விட்டதாக நினைத்து அதை மூடி வைத்துவிடுவதற்கு சமம்தான் இதுபோன்ற தற்கொலை செயல்கள். வாழ்க்கை என்ற புத்தகத்தை முழுவதும்தான் படித்துப் பாருங்களேன். உங்கள் எதிர்பார்ப்பையும் மீறிய அற்புதங்களும் ஆச்சரியங்களும் அதில் நிறைந்திருப்பதை நீங்கள் நிச்சயம் உணரலாம்.

Summary

வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். அல்லது தன்னார்வ தற்கொலை தடுப்பு மையமான சிநேகா தொண்டு நிறுவனத்திதை Contact: இ மெயில் help@snehaindia.org, தொலைபேசி மூலமாக +91 44 2464 0050  +91 44 2464 0060  தொடர்புகொள்ளமுடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com