சரஸ்வதி தேவிக்கு குருவாகத் திகழும் ஸ்ரீ ஹயக்ரீவர்!

சரஸ்வதி தேவிக்கு குருவாகத் திகழும் ஸ்ரீ ஹயக்ரீவர்!

ல்விக்கான தெய்வமாகத் திகழ்பவர் சரஸ்வதி தேவி. சரஸ்வதி தேவிக்கே குருவாகத் திகழ்பவர் ஸ்ரீ ஹயக்ரீவர். தமிழில் இவர், ‘பரிமுகன்’ என்று அழைக்கப்படுகிறார். மேலும், இவர் ஹயமுகன் என்றும் அழைக்கப்படுகிறார். பரி  மற்றும் ஹயம் என்ற சொற்களுக்கு குதிரை என்று பொருள். ‘க்ரீவ’ என்றால் கழுத்துப் பகுதி. கழுத்துப் பகுதிக்கு மேலே குதிரை முகத்துடனும் மனித உடலுடன் கூடிய இவர் ஹயக்ரீவர் என்று அழைக்கப்படுகிறார். ஹயக்ரீவரின் அவதாரம் எப்படி நிகழ்ந்தது என்பதை இப்போது தெரிந்து கொள்ளுவோம்.

ஒரு சமயம் மது, கைடபர் என்ற அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்து வேதங்களைத் திருடிக் கொண்டு பாதாள லோகத்திற்குச் சென்று அதை ஒளித்து வைத்தனர். தொலைந்துபோன வேதங்களை மீட்டுத்தரும்படி பிரம்மா மகாவிஷ்ணுவிடம் வேண்டிக் கொண்டார். மகாவிஷ்ணு குதிரை முகத்துடன் மனித உடலுடன் கூடிய ஹயக்ரீவ அவதாரம் செய்து அவர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு அவற்றை பிரம்மனிடம் ஒப்படைத்தார். வேதங்களை மீட்டெடுத்த மகாவிஷ்ணு என்பதால் இவரைத் துதித்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம். தனது இடது தொடையின் மீது மகாலக்ஷ்மியை அமர்த்தி லக்ஷ்மி ஹயக்ரீவராகக் காட்சி அளிக்கிறார்.  மகாலக்ஷ்மி உடனிருப்பதால் செல்வத்துக்கான தெய்வமாகவும் ஹயக்ரீவர் விளங்குகிறார்.

ஹயக்ரீவர் ஸ்லோகம்:

‘ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே’

இதன் பொருள்: ‘ஞானத்தில் சிறந்து விளங்குபவரும் தூய்மையான தேகத்தைக் கொண்டவரும் அனைத்து விதமான கல்வி கலைகளுக்கு ஆதாரமாக விளங்குபவருமான ஸ்ரீ ஹயக்ரீவரை வணங்குகிறேன்.

ஹயக்ரீவர் படத்திற்கு ஏலக்காய் மாலை சூட்டி மேற்காணும் ஸ்லோகத்தை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் 108 முறை உச்சரித்து வணங்கினால் வாழ்வில் மேன்மை ஏற்படும் என்பது ஐதீகம். ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர தினத்தன்று ஹயக்ரீவர் ஜயந்தி கொண்டாடப்படுகிறது.

கடலூருக்கு அருகில் அமைந்துள்ள திருவஹீந்திரபுரம், செங்கற்பட்டிற்கு அருகில் அமைந்துள்ள செட்டிபுண்ணியம் ஆகிய இடங்களில் ஹயக்ரீவர் கோயில்கள் அமைந்துள்ளன. இந்த சரஸ்வதி பூஜை திருநாளில் ஹயக்ரீவரை வணங்கி, கலை மகளாம் சரஸ்வதியோடு ஹயக்ரீவர் அருளையும் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com