மகம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்ரீ ஜெகதீஸ்வரர்!

மகம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்ரீ ஜெகதீஸ்வரர்!

லகமே சிவஸ்வரூபம் என்றபோதிலும் அன்பர் பொருட்டு தனது அருவுருவ வடிவான லிங்கத் திருமேனியோடு உலகமெங்கும் வியாபித்திருக்கின்றார் பரமேஸ்வரன். அப்படிப்பட்ட ஈசன், சோழ மண்ணிலே காவிரி தென்கரை திருப்பேரெயில் என்று போற்றப்படும் தலத்தில் ஸ்ரீ ஜெகதீசன் என தனது திருநாமத்தை ஏற்றிருப்பது ஹரப்பிரியர்களுக்கு அளவில்லா ஆனந்தம்தான்.

சோழ தேசத்தின் தலைநகராக திருவாரூர் விளங்கியபோது, அதைச் சார்ந்த கோட்டை இருந்த ஊர் இந்த பேரெயிலூர். எயில் என்றால் கோட்டை சுவர் எனப் பொருளாகும். இந்தப் பெயரே நாளடைவில் மருவி பேரையூர் என்றானது. தற்போது வங்காரப் பேரையூர் என்றும் ஓகைப் பேரையூர் என்றும் அழைக்கப்படுகின்றது.

சங்க காலத்துப் பெண் புலவரான, ‘பேரெயில் முறுவலார்’ இங்கு வாழ்ந்துள்ளார். இவரது பாடல்கள் புறநானூறு மற்றும் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன. அப்பர் பெருமான் இத்தலம் மீது பதிகம் ஒன்றினை பாடியுள்ளார். ராமலிங்க வள்ளலார் இப்பதி மீது பாடல் புனைந்துள்ளார்.

சிவபெருமானின் தன்மைகளை அப்பர் இப்பதி பாடல்களில் மிக நேர்த்தியாக பாடியுள்ளார். அளவுகோலால் அறிய முடியாதவர் ஈசன் என்றும், அன்பர்கள் எத்தகைய துன்பத்தில் சிக்குண்டிருந்தாலும் அதிலிருந்து மீட்பார் என்றும் போற்றுகின்றார். சூரியனைப் போல் ஒளிரும் சிவனார் ஊழியிலும் அழியாது நிலைத்திருப்பார் என்றும், எல்லா பொருள்களையும் நிலையற்ற தன்மைக்கு ஆக்கும் இயல்புடையவர் என்றும் மேலும் புகழ்கின்றார் நாவுக்கரசர். அதோடு, தம்மையும் அறியாது பிழை செய்பவர்களாயின் அதை குற்றமாகக் கொள்ளாமல் அருள் செய்பவர் என்றும் மேலும் மெருகூட்டுகின்றார்.

திருப்பேரெயில் உள்ளடங்கிய சிறு கிராமம். அதன் வடபுறத்தில் இந்த சிவாலயம் திகழ்கிறது. இக்கோயில் 2008ம் ஆண்டு குடமுழுக்குக் கண்டுள்ளது. ஆலயத்தின் முன்னே அக்னி தீர்த்தம் அமைந்துள்ளது. மூன்று நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்க, மூடுதள அமைப்புடன் சன்னிதிகள் நடுநாயகமாக விளங்குகின்றன.

நாட்டுக்கோட்டை நகரத்தார் இக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர். ‘யான் எமனை வென்றவள்’ என தெற்கே முகம் காட்டி அபயமளிக்கின்றாள் அன்னை ஸ்ரீ ஜெகன்நாயகி. ஜெகமாளும் ஈசனது துணைவியென தன்னை வெளிக்காட்டி அருளுகின்றாள். பிரதான கருவறையில் அருள்புரிகின்றார் ஸ்ரீ ஜெகதீஸ்வரர்.

நிருதியில் கற்பக விநாயகரும், மேற்கில் கந்தக் கடவுளும், வாயு பாகத்தில் கஜலட்சுமியும் தனித்தனி சன்னிதிகளில் குடிகொண்டுள்ளனர். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் காலை 9 முதல் 12 மணி வரையும், மாலை 5 முதல் 7 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும். பல நோய்களுக்கு மருந்தாக விளங்கும் குளிர்ந்த நாரத்தை மரம் இத்தலத்தின் விருட்சமாக உள்ளது. அநேக சிவாலய விசேஷங்களும் இங்கும் சிறப்புடன் அனுசரிக்கப்படுகின்றன.

இக்கோயில் தீர்த்தத்தில் நீராடி, சுவாமி - அம்பாளுக்கு பன்னீர் மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்து, குளிர்ந்த பழங்களை நிவேதனம் செய்து வழிபடுவோர், வாழ்வில் சிறந்த இல்லற சுகத்தை பெறுவர். அதோடு, நாட்பட்ட நோய்களும் தீரும். மக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாக இது திகழ்கிறது.

அமைவிடம்: திருவாரூர் - மன்னார்குடி பேருந்து சாலையில், வடபாதிமங்கலம் சாலையில் திரும்பி ஓகைப்பேரையூரை அடையலாம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com