செவ்வாய் தோஷம் நீக்கும் ஸ்ரீ கல்யாண முருகர்!

செவ்வாய் தோஷம் நீக்கும்
ஸ்ரீ கல்யாண முருகர்!

புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ தொலைவில் தேனிமலையில் அழகிய முருகன் கோயில் உள்ளது. செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் செவ்வாய் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும் என்பது ஐதீகம். அதேபோல், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், இத்தல முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும். பங்குனி உத்திர நாளில் புதுக்கோட்டை திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், முதலான பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்து வந்தும் இக்கோயில் முருகப்பெருமானை வழிபாடு செய்கின்றனர்.

இந்த மலையின் அடிவாரத்தில் சுனை ஒன்று உள்ளது. இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால் சகல தோஷங்களும் நீங்கும். கார்த்திகை நட்சத்திர நாளில் இந்த முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷம். வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு மாலை சாத்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், நீண்ட நாட்களாக தடைபடும் திருமணம் விரைவில் கைகூடும்.

இங்குள்ள மலையின் உச்சியில் தேனீக்கள் பெரிய தேன் கூடுகளைக் கட்டுவது வழக்கம். ஆனால், இப்பகுதி மக்கள் அந்தத் தேன் கூடுகளை சேதப்படுத்துவதோ, அதிலிருந்து தேன் எடுப்பதோ இல்லை. காரணம் அந்தத் தேன்கூடு வழிபாட்டுக்கு உரியதாகவும், விவசாயிகளின் நம்பிக்கைச்சின்னமாகவும் இருந்து வருகிறது. இதன்படி, இந்த மலையில் மூன்று பெரிய தேன்கூடுகள் கட்டியிருந்தால் அந்த வருடம் விவசாயம் சிறப்பாக இருக்கும் என்றும், இரண்டு கூடுகள் கட்டியிருந்தால் விளைச்சல் சுமாராக இருக்கும் என்றும், ஒரே ஒரு கூடு மட்டும் கட்டியிருந்தால் அந்த வருடம் போதிய விளைச்சல் இருக்காது என்பதும் நம்பிக்கை. இந்த மலையில் சித்தர்கள் பலர் தங்கி இருந்து முருகனின் அருளைப் பெற்று, முக்தி அடைந்ததாகவும், அந்த சித்தர்கள் இன்றும் முருகனை தரிசித்து வருவதாகவும் இப்பகுதியில் நம்பிக்கை நிலவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com