ஒரு நாள் தேவகி, கிருஷ்ணருடன் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தாள். அப்பொழுது அவள், கிருஷ்ணனிடம் ஒரு வேண்டுகோளை வைத்தாள். "கண்ணா! நீ சாந்திப முனிவர் மனைவிக்கு குரு தட்சணையாக இறந்த அவர்களது மகனை உயிருடன் மீட்டுக் கொடுத்தாய். அதுபோல உனது தாய்மாமன் கம்சனால் கொல்லப்பட்ட உனது ஆறு சகோதரர்களையும் மீட்டு வர வேண்டுகிறேன்" என்றாள்.
தாயின் விருப்பம் நிறைவேற பகவான் கிருஷ்ணர் பாதாள உலகிற்குச் சென்றார். அங்கு பலிச்சக்கரவர்த்தி பகவானை பூஜித்து வரவேற்றார். அதோடு, "என்னால் ஆக வேண்டிய காரியம் என்ன? அதைக் கூறுங்கள்" எனக் கேட்டுக் கொண்டார்.
உடனே பகவான், "சுவாயம்பு மனுவந்தரத்தில் பிரஜாதிபதிக்கு உஷ என்பவரிடம் ஆறு புத்திரர்கள் பிறந்தார்கள். பிரம்ம தேவன், சரஸ்வதியை மணந்து கொண்டதைக் கண்டு அவர்கள் பரிகாசமாக சிரித்தார்கள். இதனால் பிரம்ம தேவன் கோபம் கொண்டு அவர்களை அசுரர்களாக பிறக்கும்படி சபித்தார். அவர்கள் பிரகலாதவனுக்கு சகோதரர்களாகவும், இரணிய கசிபுவின் குமாரர்களாகவும் ஜனித்தனர். அவர்கள் மூவுலகங்களையும் வென்று அரசாள எண்ணம் கொண்டு கடும் தவம் செய்தனர்.
அதைக் கண்ட தேவர்கள், அவர்களின் ஆசை நிறைவேறக் கூடாது என்று எண்ணி, அவர்களின் தவத்தைக் கலைத்து பாதாள உலகிற்குள் அழுத்தி விட்டார்கள்.
அவர்களை நான் தேவகி புத்திரர்களாகப் பிறக்கும்படி செய்தேன். அவர்களின் விதிப்படி கம்சன் அவர்களை கொன்று விட்டான். அதன் பின் அவர்கள் இப்போது இங்கே இருக்கிறார்கள். அவர்களை மீட்டு அழைத்துச் செல்லவே நான் வந்திருக்கிறேன்” என்றார் பகவான்.
பகவான் கூறியதைக் கேட்ட பலிச்சக்கவர்த்தி அந்த ஆறு பேர்களையும் அங்கு வரவழைத்து கிருஷ்ணனிடம் சேர்ப்பித்தார். அவர்களை அழைத்துக் கொண்டு தேவகியிடம் வந்ததும், அந்த ஆறு பேர்களுடன் கண்ணனைக் கண்டதும் தேவகி அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.