பதில் கூற முடியாமல் நின்ற ஸ்ரீராமர்!

வாலி வதம்
Vaali Vadhamhttps://selliliar.live

கிஷ்கிந்தையின் மன்னரான வாலியை வதம் செய்யும் பொருட்டு ராமச்சந்திர மூர்த்தியானவர், லக்ஷ்மணன், சுக்ரீவன் மற்றும் படைகளுடன் கிஷ்கிந்தையை அடைந்தார். வாலியை போருக்கு அழைக்க  சுக்ரீவனை தூது அனுப்பினார். முதல் முறை சுக்ரீவன், வாலியிடம் அடிபட்டு, உயிர் பிழைத்து, மதங்க முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்தார்.

இரண்டாம் முறையும் ஸ்ரீ ராமர் சுக்ரீவனையே தூது அனுப்பினார். தனது சகோதரனின் மேல் கடும் கோபம் கொண்ட வாலி போருக்கு ஆயத்தமாகி கிஷ்கிந்தையை விட்டு வெளியே வந்தார். தன் சகோதரன் சுக்ரீவனுடன் கடும் போர் புரிந்தார். இரண்டாம் முறையும் சுக்ரீவன் போரில் நலிவடைந்து வீழ்ச்சியுறும் சமயத்தில், மரங்களுக்குப் பின்னால் மறைந்திருந்த ராமர், சக்தி மிகுந்த அன்பு ஒன்றை வில்லின் நாணில் ஏற்றி வாலியை நோக்கிச் செலுத்தினார். அந்த அம்பு வாலியின் மார்பை துளைக்க, அவர் கீழே விழுந்தார்.

கீழே விழுந்த வாலி,  தனது மார்பைத் துளைத்த அம்பை எடுத்துப் பார்த்தபொழுது அதில் ராமரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டார். ராமபிரானே போரிட வந்திருக்கிறார் என்று அறிந்து கொண்டார்.

"நீங்கள் நேரிடையாக போருக்கு வந்திருந்தால் நான் விழுந்திருக்க மாட்டேன். நீங்கள்தான் விழுந்திருப்பீர்கள். என்னை ஏன்  தாக்கினீர்கள்? நான் தங்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்கவில்லையே" என்றார் வாலி.

"இந்த மொத்த பூமியும் இஷ்வாகு  வம்சத்தினரின் ஆளுகைக்கு உட்பட்டது. இங்கு எந்தத் தவறு நேர்ந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது நியதி. நீ உனது சகோதரனின் மனைவியை அபகரித்தாய். இந்த இழிவான செயலுக்காக உன்னை நான் கொல்லத் துணிந்தேன். சுக்ரீவனின் மனைவியை அவனுக்கு மீட்டுத் தந்து நாட்டையும் திரும்பப் பெற்றுத் தருவதாக வாக்களித்து இருக்கிறேன்" என்றார் ராமர்.

"விலங்கினங்களுக்கு ஒரு கணவன் ஒரு மனைவி என்று வாழ வேண்டும் என்கிற நியதி கிடையாது. நான் ஒரு குரங்கு. நான் விலங்கினமாக இருப்பதால், இந்தக் கட்டுப்பாட்டுக்கு நான் உட்பட்டு இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை" என்றார் வாலி.

"இத்தனை நியாய தர்மங்கள், விதிமுறைகள் அறிந்து கொண்டு இருக்கும் உன்னை ஒரு விலங்கினம் என்று கூற முடியாது. நீ ஒரு மானுடனாகவேதான் எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் விதி மீறிய உன் செயலுக்காக உன்னை கொல்லத் துணிந்தேன்" என்றார் ஸ்ரீராமர்.

இதையும் படியுங்கள்:
நமது மகிழ்ச்சியைப் பறிக்கும் தேவையில்லாத 10 பழக்கங்கள் தெரியுமா?
வாலி வதம்

ஸ்ரீராமர் தன்னை விலங்கினம் அல்ல, மானுடன் என்று கூறியதற்காக வாலி ஒரு நிமிடம் மிகவும் சந்தோஷம் அடைந்தாலும் அடுத்த நிமிடம், "என்னை மானுடன் என்று நினைத்த நீங்கள் நேரடியாக போருக்கு வராமல், விலங்கினங்களைத் தாக்குவது போல் மறைந்திருந்து தாக்கினீர்கள். இந்த இழிவானச் செயலுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? இது தர்மம் அல்லவே" என்றார் வாலி.

வாலியின் இந்த கேள்விக்கு ராமரால் பதில் கூற முடியவில்லை. லட்சுமணன் குறுக்கிட்டு, "உனது சகோதரன் ராமரைப் பார்த்தவுடன், தன்னுடைய பிரச்னைகளைக் கூறி எங்கள் கூட்டத்தில் சேர்ந்து விட்டார். அதனால் மீண்டும் அவர் உனக்கு முன்னால் நேரில் வந்தால்,  ராமரிடம் நீ சரணடைந்து விடுவாய். உன்னைத் தண்டிக்க முடியாமல் போய்விடும். தர்ம நெறியைக் காப்பாற்றாதவர் என்கிற அவ பெயரும் அவருக்கு ஏற்பட்டுவிடும். அதனால்தான் அவர் மறைந்திருந்து உங்களைத் தாக்கினார்"  என்றார்.

இந்த பதிலால் வாலி சமாதானம் அடைந்தாரா இல்லையா என்பது தெரியாது. ஆனால் ராமரிடம், "நான் செய்தது தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன். என் அறியாமையினால் நான் உங்களைக் கடுமையாகப் பேசியதை மன்னித்துக் கொள்ளுங்கள். என் மகன் அங்கதனுக்கு அடைக்கலம் கொடுத்து உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள். என்றைக்கும் அவன் உங்களது  நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பான்" என்று கூறியபடி உயிர் துறந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com