ஸ்ரீராமர் வழிபட்ட வியாபார விருத்தி சொர்ணபுரீஸ்வரர்!

ஸ்ரீராமர் வழிபட்ட வியாபார விருத்தி சொர்ணபுரீஸ்வரர்!

ஸ்ரீராமர், லட்சுமணர், சீதா தேவி மூவரும் காட்டில் பர்ணசாலை அமைத்து தங்கியிருந்த சமயம், அசுரன் ராவணன் சீதையை வஞ்சகமாகக் கடத்திச் சென்றான். மனைவியைப் பிரிந்த ஸ்ரீராமர், சீதா பிராட்டியைத் தேடி அலைந்தார். அப்படி தெற்கு நோக்கி வரும்போது, ஓரிடத்தில் இறக்கை வெட்டப்பட்ட நிலையில் ஜடாயுவைக் கண்டார். புஷ்பக விமானத்தில் ராவணன் சீதையைக் கடத்திய செய்தியை ஜடாயு பறவை மூலம் ஸ்ரீராமர் கேள்விப்பட்டார். ஜடாயு சிறகினை இழந்த தலம் என்பதால் இத்தலத்துக்கு, ‘சிறகிழந்தநல்லூர்’ என்ற பெயர் உண்டானது.

ஸ்ரீராமனின் கண்ணில் பட்ட நாரை ஒன்றும், அவரிடம் சீதா பிராட்டி விமானத்தில் தெற்கு நோக்கிச் சென்ற செய்தியை ஸ்ரீராமனுக்குத் தெரியப்படுத்தியது. அந்த நாரைக்கும் ஸ்ரீராமர் மோட்சம் கொடுத்து அருள்புரிந்தார். அவ்விடம் திருநாரையூர் ஆனது. அங்கிருந்து சற்றுத் தொலைவு, ஓரிடத்தில் புஷ்பக விமானத்தில் சென்ற ஒரு பெண், தான் அணிந்திருந்த பூவினைத் தரையில் போட்டுச் சென்றதாகக் கூறி ஸ்ரீராமபிரானிடம் சிலர் கொடுத்தனர். அவ்விடம் பூவிழந்தநல்லூர் ஆனது.

பின்பு, கடம்ப மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியான கடம்பூர், வேல மரங்கள் அடர்ந்த வேலம்பூண்டி வந்தனர். அங்கிருந்து, ஈச்ச மரக்காடான ஈச்சம்பூண்டியைக் கடந்து சிறுகாட்டூர் தலத்தை அடைந்தனர். அங்குள்ள மக்கள், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், வெள்ளஅபாயம் நீங்கும் வரை அவ்வூரில் தங்கும்படியும் ஸ்ரீராம, லட்சுமணரை வேண்டினர். அவர்கள் ஆற்றங்கரையில் இருந்த சிவலிங்கத்தின் மேல் பகுதி வரை வெள்ள நீர் செல்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

நேரம் செல்லச்செல்ல வெள்ள அபாயம் அதிகரித்தது. ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடும் நிலைமை உண்டானது. வெள்ளத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றவும், தண்ணீர் வற்றினால்தான் தங்கள் பயணம் தடையின்றி தொடரும் என்பதாலும் ஸ்ரீராமபிரான் தனது வில்லை எடுத்து அம்பைத் தொடுத்தார். அதுகண்டு நடுங்கிய கொள்ளிடம் ஆற்றின் வெள்ளம் கட்டுப்பட்டது. சிவலிங்கத்தின் அடிப்பகுதி வரை வெள்ளம் குறைந்தது. பின், அங்குக் கிடைத்த மலர்களைத் தூவி சிவலிங்கத்துக்கு ஸ்ரீராம, லட்சுமணர் பூஜை செய்தனர். சீதா தேவியை மீட்டு வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டு நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடர்ந்தனர். இழந்த நம்பியதை ஸ்ரீராமர் மீண்டும் எய்தியதால் இத்தலம், ‘எய்யலூர்’ என்றானது. தற்போது இத்தல பெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற திருநாமத்தோடு விளங்குகிறார்.

திரேதா யுகத்தில் ஸ்ரீராமன் வழிபட்ட மூர்த்தி என்பதால், புராதன கடவுளாக ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் திகழ்கிறார். திருமணம், குழந்தைப்பேறு, வியாபார விருத்திக்காக பக்தர்கள் இவரிடம் பிரார்த்தனை செய்கின்றனர். ‘வேண்டும் வேண்டுதல்கள் யாவையும் வேண்டியபடி நிறைவேற்றித் தரும் ஈசன் இவர்’ என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அமைவிடம்: சிதம்பரத்தில் இருந்து 24 கி.மீ தொலைவிலுள்ள காட்டுமன்னார்கோயில் சென்று, அங்கிருந்து மேலக்கடம்பூர் வழியாக 12 கி.மீ. சென்றால் எய்யலூர் சிவன் கோயிலை அடையலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com