ஸ்ரீராமரை விட அவரது நாமத்துக்கு வலிமை அதிகம்!

Sri Ramarai vida Avarathu Namathukku Valimai Athigam
Sri Ramarai vida Avarathu Namathukku Valimai Athigamhttps://www.youtube.com

போர் முடிந்து அயோத்தி திரும்பிய ஸ்ரீராமன், சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்ட பின்னர், அசுவமேத யாகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார்! இராமனின் அரசவையை வசிட்டர், விசுவாமித்திரர் போன்றோர் அலங்கரித்திருந்தனர். அந்த சமயத்தில் அரசன் ஒருவன் ஸ்ரீராமரின் அரசவைக்கு வந்து ஸ்ரீராமரை வணங்கிச் சென்றான். அங்கிருந்த நாரதர் கலகமூட்டும் நோக்கத்துடன் விசுவாமித்திரரிடம், ‘அந்த அரசன் உங்களை வணங்காமல் அவமதித்து விட்டான்’ என விசுவாமித்திரரை கோபம் கொள்ள செய்தார்.

வெகுண்டெழுந்த விசுவாமித்திரர், ‘இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக அந்த அரசனின் தலையை என் காலில் கொண்டு வந்து போடவேண்டும்’ என ஸ்ரீராமனிடம் ஆணையிட்டார். குருவின் கட்டளையை சிரமேற்கொண்ட ஸ்ரீராமனும் போருக்குக் கிளம்பி விட்டான். இதற்கிடையில் நாரதர் அந்த அரசனையும் சந்தித்து விசுவாமித்திரரின் கோபத்தையும் அதன் விளைவையும் கூறிவிட, அந்த அரசன் பயந்து நாரதரின் காலில் விழுந்து காப்பாற்ற வேண்டினான்.

‘இராம பாணத்திற்கு முன்னால் தன்னால் ஏதும் செய்ய இயலாது’ எனக் கூறிய நாரதர், ‘இந்த உலகில் உன்னைக் காப்பாற்றும் வல்லமை ஒரே பெண்ணுக்குத்தான் இருக்கிறது. அவள் பாதங்களை சரணடைந்து விடு. அவள் உனக்கு அபயமளித்தேன் எனச் சொல்லும் வரை அவள் பாதத்தில் வீழ்ந்து கிட’ என்று கூறினார். அவள்தான் அனுமனின் தாய் அஞ்சனா தேவி.

அஞ்சனா தேவியில் காலில் வீழ்ந்து கதறியழுத மன்னனை காப்பாற்றுவதாக கூறிய அஞ்சனா தேவி, தனது மகன் அனுமனை அழைத்து, ‘இவனைக் காப்பாற்று’ எனக் கூறினாள். தாயின் கட்டளையை மீற இயலாத அனுமன், தனது வாலை சுருட்டி மலை போல அமைத்து அதன் நடுவில் அந்த அரசனை உட்கார வைத்து விட்டு, மேலே அமர்ந்து ராம நாமம் ஜபிக்க ஆரம்பித்தார்.

போருக்கு வந்த ஸ்ரீராமன், அனுமனிடம் அரசனை வெளியே அனுப்புமாறு கூற, அனுமன் தனது தாயின் கட்டளையைக் கூறி தனது இயலாமையை கூறினார். கோபமுற்ற ஸ்ரீராமன், ‘உன் மீது பாணம் தொடுக்க வேண்டி இருக்கும்’ என எச்சரித்ததையும் அனுமன் ஏற்காமல் ராம நாம ஜபத்தில் ஈடுபட்டார்.

இதையும் படியுங்கள்:
பெருமாள் கோயிலில் தைப்பூச திருவிழா: எங்கு தெரியுமா?
Sri Ramarai vida Avarathu Namathukku Valimai Athigam

ஸ்ரீராமனும் ஆவேசமாக அம்புகளைத் தொடுக்க அவை அனுமனை தாக்காது, அவர் காலடியில் விழத் துவங்கின. தொடரும் ராமனின் அம்பு மழையின் உக்கிரத்தால் உலகமெல்லாம் நடுங்கத் துவங்கியது. தேவர்கள் சிவபெருமானை அணுகி இந்த யுத்தத்தினை நிறுத்திட வேண்டினர். அவரோ இதை முடிக்க விசுவாமித்திரனால் மட்டுமே முடியும் என கூறிவிட்டார்.

தேவர்கள் விசுவாமித்திரரை சரணடைய, அவர் மனமிறங்கி போர்களம் வந்தார், அவருடன் நாரதரும் வந்தார். விசுவாமித்திரரின் வார்த்தையை ஏற்று ஸ்ரீராமரும் போரை நிறுத்தினார். நாரதர் அனுமனின் வாலுக்குள் மறைந்திருந்த அரசனை அழைத்து விசுவாமித்திரரின் காலில் விழச்செய்தார். அப்போது விசுவாமித்திரரிடம், ‘இவன் தலை இப்போது உங்கள் காலடியில் விழுந்துவிட்டது. இவனை மன்னித்து விடுங்கள்’ எனக் கோரிக்கை வைக்க, விசுவாமித்திரும் மனமிறங்கி மன்னனை மன்னித்தார்.

அப்போது அங்கு வந்த ஸ்ரீராமன், ‘எப்படி எனது பாணங்கள் வலுவிழந்தன’ என நாரதரிடம் கேட்டதற்கு நாரதர், ‘ராமா, உன் பாணங்களை விட, உனது நாம ஜபம் சக்தி வாய்ந்தது என்பதை புரிய வைக்கவே இத்தனையும் நடத்தினேன்’ என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com