ஸ்ரீராமரின் தந்தையில்லா குறையைப் போக்கிய திரேதா யுக குசேலன்!

Pattabhisheka Ramar
Pattabhisheka Ramar
Published on

‘குசேலன் யார்?’ என்று கேட்டால் உடனே எல்லோரும், ‘கிருஷ்ணனின் ஆத்மார்த்த தோழன்’ என்று சொல்லிவிடுவார்கள். கிருஷ்ணருக்கு எப்படி குசேலன் ஆத்மார்த்த நண்பராக இருந்தாரோ, அதேபோல் திரேதா யுகத்தில், ராமருக்கு அனந்தன் என்கிற ஒரு ஏழை நண்பன் குசேலனாக இருந்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ராமர், லட்சுமணர், பரதர், சத்ருக்கனர் நால்வரும் வசிஷ்டரிடம் பாடம் பயில குருகுல வாசம் இருந்து வந்தார்கள். அங்கு அனந்தன் என்னும் ஏழை மாணவன் ஒருவனும் இருந்தான். அவன் குருவுக்கு சேவை செய்து வந்தான். சேவை செய்வதோடு இல்லாமல், காட்டுக்குச் சென்று தர்ப்பை புற்களை எடுத்து வருவதும் அவனுக்கு ஒரு வேலையாக இருந்தது.

அவன் ராமனிடம் அதீத அன்பு கொண்டிருந்தான். ராமருடைய வில்லை துடைத்து வைப்பது, அஸ்திரங்களை எடுத்து வைப்பது, உணவு பரிமாறுவது போன்று ராமர் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் அனந்தனே செய்து வந்தான். ஒரு நாள் கூட ராமரை பார்க்காமல் அனந்தனால் இருக்க முடியாத நிலைமையில், அவன் இருந்தான். ராமரும் அவனிடம் மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் இருந்து வந்தார்.

நாட்கள் கடந்து போயின. ராமருக்கு குருகுல வாசம் முடிந்துபோனது. குருவிடம் அனுமதியும், ஆசியும் பெற்று எல்லோரும் அயோத்திக்கு திரும்பத் தயாரானார்கள்.  அந்தச் சமயம் குருகுலத்தில் அனந்தன் இல்லை. அவன் காட்டிற்கு தர்ப்பை சேகரிக்கச் சென்றிருந்தான். அவன் குருகுலத்திற்கு திரும்பியபொழுது தசரத மைந்தர்கள் அயோத்திக்கு சென்று இருந்தார்கள். 'ராமரை பார்க்காமல் நான் எப்படி இனிமேல் இருப்பேன்? என்னால் முடியாது. நான் ராமரை பார்த்தே தீர வேண்டும்'  என்று புலம்பியபடி, குரு வசிஷ்டரிடம் கூட கூறிக்கொள்ளாமல் அயோத்தியை நோக்கிப் பயணப்பட்டான்.

வழியில் அடர்ந்த காட்டினை கடக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அவன்  மிகவும் சோர்வாகி விட்டான். மேலும், இருட்டி விட்டதால் திசை தெரியாமல் மிகவும் அவதிப்பட்டு, ‘ராமா ராமா ராமா’ என்று கூக்குரல் இட்டபடியே ஓரிடத்தில் அமர்ந்து  ராமரைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி விட்டான். நீர், ஆகாரம் எதுவும் இன்றி அங்கேயே தியானம் செய்யத் தொடங்கினான். அவனைச் சுற்றி புற்று மூடியது  கூட அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், ராம ஜபம் மட்டும் செய்துகொண்டே இருந்தான்.

காலம் உருண்டோடியது. ராமாயண சம்பவங்கள் அனைத்துமே நடந்து முடிந்து இருந்தன. இராவண வதத்திற்குப் பின்பு  ராமர் அயோத்தி திரும்ப, அவர் பட்டாபிஷேகத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பிரஜைகள் அயோத்தியை நோக்கி வந்தவண்ணம் இருந்தார்கள். அப்பொழுது சிலர் அனந்தன் இருந்த காட்டுப் பகுதி வழியாக ராம நாமத்தை கூறிக் கொண்டே வந்தபொழுது, ஒருவரின் கால் பட்டு புற்றானது இடிந்து போனது. ஆனால், அனந்தனின் ராம நாமம் மட்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது. அப்பொழுது திடுக்கிட்டு எழுந்த அனந்தன், நடந்த விபரங்களை அறிந்து கொண்டான். தானும் அவர்களுடன் அயோத்தியாவுக்கு  பயணப்பட்டான்.

அயோத்தியாவில் ராமர் பட்டாபிஷேகத்திற்கு உண்டான அலங்காரங்களுடன் கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும், “அடேய் ராமா, நீ எப்படியடா இருக்கிறாய்?” என்று தழுதழுத்த குரலில் கேட்ட அனந்தன், ஓடிச் சென்று ராமரை இறுக அணைத்தான். கந்தல் ஆடையுடனும் ஜடாமுடியுடனும் இருந்த அனந்தனைப் பார்த்து அனைவரும் மன நலம்  பாதிக்கப்பட்டவன் என நினைத்து திகைத்து நின்றனர். காவலர்கள் அனந்தனை இழுக்கப்போனபொழுது, ராமர் அவர்களைத் தடுத்து, அனந்தனிடம் நலம் விசாரித்தார். “உன்னிடம் கூறாமல் நான் இங்கு வந்தது தவறுதான் அனந்தா. என்னைப் பார்க்காமல் நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாய் என்பது எனக்குப் புரிகிறது. என்னை மன்னித்துக் கொள்.  என்னை எல்லோரும் பிரபு என்று அழைக்கும்பொழுது, ‘அடேய் ராமா’ என்று என்னை அழைக்க என் தந்தை இல்லையே என்று நான் ஏங்கினேன். நல்லவேளை என் ஏக்கத்தை நீ தீர்த்து விட்டாய்” என்றார்.

அருகில் இருந்த அனுமனிடம், “குருகுலத்தில் என்னுடன் பயின்ற என் ஆத்மார்த்த தோழன். என்னைக் காணாமல் எப்படி ஆகிவிட்டான். இவருக்கு எப்படி நான் மரியாதை செய்ய வேண்டும் என்று நீ கூறு” என்றார். அனுமன் சிறிதும் தயங்காமல், “உங்கள் தந்தை ஸ்தானத்தில் அவர் இருப்பதால், நீங்கள் அமர வேண்டிய ஆசனத்தை முதலில் அவருக்கு அளியுங்கள்” என்று கூறினார்.

ராமரும், தான் அமர வேண்டிய சிம்மாசனத்தில் அனந்தனை அமர்த்தி, உபச்சாரம் செய்து அதன் பின்னரே தான் அமர்ந்தார். வந்திருந்த மக்கள் அனைவரும் மகிழ்ந்து ராமரை வாழ்த்திப் போற்றினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com