நரசிம்ம பெருமானை சாந்தப்படுத்திய ஸ்ரீ சரபேஸ்வரர்!

நரசிம்ம பெருமானை சாந்தப்படுத்திய ஸ்ரீ சரபேஸ்வரர்!

ஸ்ரீசரபேஸ்வரர் திருவுருவத்தை சில சிவத்தலங்களில் பார்த்திருப்பீர்கள். சரபேஸ்வரர் யார்? அவருடைய அவதார நோக்கம் என்ன? என்பதைப் பற்றி இப்போது அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

மகாவிஷ்ணு இரணியன் என்ற அசுரனை வதம் செய்ய மனித உடலும் சிங்க முகமும் உடைய நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்தார். அதன் பின்னும் அவருடைய கோபம் தணியாமல் மிகவும் உக்கிர மூர்த்தியாய் காணப்பட்டார். இதைக் கண்டு அஞ்சி நடுங்கிய தேவர்கள், முனிவர்கள் முதலானோர் நரசிம்மரின் உக்கிரத்தைத் தணித்துத் தங்களைக் காத்தருளும்படி சிவபெருமானிடம் வேண்டிக்கொள்ள அவர்களைக் காக்க சிவபெருமான் எடுத்த ஒரு வடிவமே சரபேஸ்வர அவதாரமாகும். சிவபெருமான் நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிக்க பறவை, மிருகம், மனித ரூபம் என மூன்றும் சேர்ந்த உருவமாக எடுத்த அவதாரமே
ஸ்ரீ சரபேஸ்வர அவதாரமாகும். மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் செய்தபோது அவருடைய உக்கிரத்தைத் தணிக்க அவரை விட உக்கிரமாக வெளிப்பட்ட ஈசனின் வடிவமே ஸ்ரீ சரபேஸ்வரராகும். நரசிம்மம் என்பது மனிதன், சிம்மம் என இரண்டும் கலந்த ஒரு உருவமாகும். சரபம் என்பது மனிதன், யாளி, பட்சி என மூன்றும் கலந்த ஒரு உருவமாகும்.

தேவர்களையும் முனிவர்களையும் காக்க திருவுளம் கொண்ட சிவபெருமான் உடனே வீரபத்திரரை அழைத்து நரசிம்மரின் கோபத்தைத் தணிக்குமாறு கட்டளையிட்டார்.  வீரபத்திரர் இதை ஏற்று நரசிம்மரை நெருங்கினார். ஆனால் அவரால் நரசிம்மரை நெருங்க முடியவில்லை. ஆனால் நரசிம்மரின் உக்கிரமோ பன்மடங்கு கூடிக்கொண்டே போனது. இதனால் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்த வீரபத்திரர் ஈசனை நினைத்து தவமியற்றினார். ஈசன் அவருக்குக் காட்சி தர, வீரபத்திரர் தன்னால் நரசிம்மரை நெருங்கக்கூட முடியவில்லை என்று தெரிவிக்க, அக்கணமே ஈசனின் அருளால் வீரபத்திரரை ஒரு ஜோதிப்பிழம்பு தழுவ அவர் உருவமே மாறியது.

தலை சரப உருவம், அதாவது பயங்கரப் பட்சியும் யாளியும் கலந்த உருவம், கழுத்து முதல் இடுப்பு வரை சர்வேஸ்வரர் போன்ற அம்சம், ஸ்ரீ துர்கா மற்றும் ஸ்ரீ பிரத்யங்கரா தேவியரின் அம்சமாக இரண்டு இறக்கைகள், சந்திரன் சூரியன் மற்றும் அக்னி என மூன்று கண்கள்,  மழு, மான், சர்ப்பம், தீ ஆகியவற்றைத் தாங்கிய நான்கு கரங்கள், வஜ்ர நகங்களுடன் கூடிய சிங்கத்தின் கால்களைப் போன்ற எட்டு கால்கள், சிங்கத்தின் வால் என பயங்கரப் பட்சியும் பயங்கர மிருகமும் மனித உருவமும் கலந்த அவதாரமானது சரபேஸ்வரரின் திருவுருவம். ஸ்ரீ சரபேஸ்வரர் தன் இறக்கைகளாலும் கால்களாலும் நரசிம்மத்தைக் கட்டியணைத்து சினத்தையும் உக்கிரத்தையும் தணித்தார். சரபேஸ்வரர் தன் சிறகுகளால் விசிறி நரசிம்மத்தை சாந்தப்படுத்தினார். இவ்வாறு சரபேஸ்வரர் நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிக்க ஆவேசத்தில் இருந்த நரசிம்மர் மெல்ல மெல்ல அமைதியானார். சாந்த சொரூபியானார். நரசிம்மமாகிய விஷ்ணு சக்தி கட்டுக்குள் அடங்காதபோது மற்றொரு சக்தியாகிய சிவசக்தி அதைக் கட்டுப்படுத்த எடுத்த அவதாரமே சரபேஸ்வர அவதாரமாகும்.

ஒரு பிரதோஷ நேரத்தில்தான் ஈசன் ஸ்ரீ சரபேஸ்வரராக அவதாரம் செய்து நரசிம்மரின் உக்கிரத்தைத் தணியச் செய்தார். இதனாலேயே பிரதோஷ நேரத்தின்போது ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட்டால் அதிக பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். நித்யப் பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை
ஸ்ரீ சரபேஸ்வரரை வணங்குவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

சிவத்தலங்களில் சரபேஸ்வரருக்கு சன்னிதிகள் அமைந்துள்ளன. குறிப்பாக திருபுவனம் தலத்தில் ஸ்ரீ கம்பகரேஸ்வரர் ஆலயத்தில் சரபேஸ்வரர் பிரமாண்டமாக காட்சி தருகிறார். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள துக்காச்சி என்ற ஊரில் அமைந்துள்ள விக்ரமசோழீச்வரம் என்ற ஆலயத்தில் சரபேஸ்வரர் சிற்பம் அமைந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள குறுங்காலீஸ்வரர் கோயிலில் சரபேஸ்வரருக்கு சன்னிதி அமைந்திருக்கிறது. இத்தலத்தில் சரபேஸ்வரர்  வழிபாடு பிரதி ஞாயிறுதோறும் மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது. மேலும், சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஸ்ரீ சரபேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது. சக்திமிக்க சரபேஸ்வரரை வணங்கி வாழ்வில் மேன்மை அடைவோமாக.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com