வரம் தரும் வரப்ரசாதியாய் கடச்சனேந்தல் ஸ்ரீ ஷீரடி சாய் பாபா!

வரம் தரும் வரப்ரசாதியாய் கடச்சனேந்தல் ஸ்ரீ ஷீரடி சாய் பாபா!

துரை மாவட்டம், கடச்சனேந்தலுக்கு அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ ஷீரடி சாயி பாபா திருக்கோயில். ஆதரவற்றோரை அரவணைத்துக் காக்கும் ஸ்ரீ சாயி பாபா, ஆதரவற்ற முதியோர் இல்லத்தின் அருகில் வீற்றிருந்து காட்சியளிக்கிறார். கண்களில் கருணை பொங்கும் பார்வையுடன், முகத்தில் புன்னகை பொலிய பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்.

வரம் வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை பாபா இங்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் இந்தக் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. கோயிலினுள் நுழைந்தவுடன் ஒரு தெய்வீக அதிர்வலையை அனைவராலும் உணர முடிகிறது. பாபாவின் புன்முறுவலுடன் கூடிய ஒளி பொருந்திய முகம் நம்மை அவர்பால் ஈர்ப்பது உண்மை. மாலை நேர ஆரத்தி நிகழ்வின்போது பாபாவின் திருவுருவ சிலைக்கும் அருகிலிருக்கும் சிறிய பாபாவின் விக்ரஹத்துக்கும் செய்யும் பால், சந்தனம் மற்றும் தேன் அபிஷேகங்களைக் காணக் கண் கோடி வேண்டும். பிறகு பாபாவின் விக்ரஹம் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைக்கப்பட்டு பக்தர்களால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்தக் கோயிலில் ஒவ்வொரு வியாழக்கிழமைதோறும் அன்னதானம் சிறப்பாக நடை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இந்தக் கோயில் உள்ள இடத்தில் ஸ்ரீ சத்ய சாயி பாபா பஜன் நடைபெற்று வந்ததாம். பிறகு ஷீரடி பாபாவின் திருவுருவச் சிலை, சென்னை மயிலாப்பூர் பாபா கோயில் நிர்வாகத்தினரால் கொண்டு வரப்பட்டு இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். மேலும், பாபா இங்கு வந்ததிலிருந்து ஏராளமான பக்தர்களின் குறைகள் நிவர்த்தியாவதைக் கண்கூடாகப் பார்க்க முடிவதாகவும், அவர்களின் வாழ்வில் அற்புதங்கள் பல நிகழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இக்கோயிலின் முகப்பில் விநாயகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் அருள்பொழிந்து கொண்டிருக்கிறார். கோயிலின் அருகிலேயே முதியோர் இல்லம் ஒன்றும் உள்ளது. மதுரை சாரிடபிள் டிரஸ்ட் ஆதரவற்றோர்களுக்கான இந்த முதியோர் இல்லத்தையும் மற்றும் பல சேவைகளையும் நடத்தி வருகின்றனர். இங்குள்ள முதியோர்களும் இக்கோயில் திருப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உற்சாகத்துடன் சேவைகள் செய்து வருகின்றனர்.

இக்கோயில் மதுரை கடச்சனேந்தலில் இலிருந்து 1 கி.மீ. தொலைவிலும், ஒத்தக்கடையிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. வரம் தரும் வரப்ரசாதியான ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவை பக்தர்கள்,

‘ஓம் ஷீரடி வாஸாய வித்மஹே
ஸச்சிதானந்தாய தீமஹி
தன்னோ ஸாயி ப்ரசோதயாத்’

எனும் ஸாயி காயத்ரி மந்திரத்தைக் கூறி வழிபட்டு அருள்பெற்றுச் செல்கின்றனர்.

ஜெய் சாயிராம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com