ஊமையை பேசவைத்த ஸ்ரீஉத்தமராயப் பெருமாள்!

ஊமையை பேசவைத்த ஸ்ரீஉத்தமராயப் பெருமாள்!

றையருள் நிறைந்த ஓர் அற்புத மலைத்தலம் பெரிய அய்யம்பாளையம். இங்குதான் அமைந்துள்ளது ஊமையை பேசவைத்த ஸ்ரீ உத்தமராயப் பெருமாள் ஆலயம். ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்கிற ஆண்டாளின் வரிக்கேற்ப உத்தமனாய் வீற்றிருக்கும் திருமால், இங்கு ஊமையை பேச வைத்த காரணத்தால், ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயப் பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார்.

முன்பொரு சமயம் இந்த ஊரில் உள்ள மலை மீது ஆடுகளை மேய்த்து வந்தான் ஓர் ஊமைச் சிறுவன். ஆதியிலிருந்தே மலை உச்சியில், ‘உத்தமராயர்’ என்கிற பெயருடன் பெருமாள் சிலை ஒன்று இருந்தது. ஆடுகளை மேய்க்க வந்த சிறுவன் புதிய இடம் நாடி மலை உச்சிக்குச் செல்கின்றான். அப்போது அங்கிருந்த பெருமாளின் கற்சிலையைக் காண்கிறான். அங்கு தனது நிலையை எண்ணி கண்ணீர் மல்க வேண்டுகின்றான் அந்தச் சிறுவன். அப்போது அவன் தன்னையும் அறியாமல், ‘உத்தமராயா’ என்று அலறுகிறான். அவனுக்குப் பேசும் திறன் வந்துவிட்டது. ஆனந்தத்தில் துள்ளிக் குதித்த அந்தச் சிறுவன், இச்செய்தியை ஊர் முழுதும் பிரப்பினான். அதைத் தொடர்ந்து இப்பகுதி மக்களும் இந்தப் பெருமாளை வழிபடத் தொடங்கினர். அன்று முதல் உத்தமராயப் பெருமாள், ‘ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயப் பெருமாள்’ என்று போற்றலானார்.

விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட ஊரே அய்யர்பாளையம். அதுவே நாளடைவில் மருவி இன்று அய்யம்பாளையம் ஆகிவிட்டது. விஜயநகரப் பேரரசின் கலைப்பாணி இவ்வாலயத்தில் தெரிவதாலும், அய்யம்பாளையம் குன்றின் கீழ் உள்ள மண்டபம் ஒன்றில் விஜயநகரக் காலக் கல்வெட்டு ஒன்று உள்ளதாலும், இந்தக் கோயிலை விஜயநகர மன்னர் ஒருவர் கட்டியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

ஊரின் வடக்கே சிறு குன்றின் மீது உத்தமராய பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. மலையின் கீழ் திருக்குளமும், சுனை ஒன்றும் காணப்படுகின்றது. சுமார் 150 படிகளைக் கொண்ட இந்த ஆலயத்தின் கீழே விநாயகர், பாலமுருகன் மற்றும் நவக்கிரக சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்தக் குன்று மிகுந்த வனப்புடன் அற்புதமாகக் காட்சி அளிக்கின்றது. சிறுசிறு கற்களாலான 150 படிகளைக் கடந்தால், அழகிய ஆலயத்தை அடையலாம். ஆலயத்துக்கு வெளியே சிறிய திருவடியான ஆஞ்சனேயர் சன்னிதி அமைந்துள்ளது.

கருவறையில் ஸ்ரீ உத்தமராயப் பெருமாள் நின்ற கோலத்தில் பேரருள் பொழிகின்றார். தாயார் சன்னிதி கிடையாது. ஆழ்வார்கள் மகாமண்டபத்தில் வீற்றுள்ளனர். தனி விமானத்துடன் கூடிய பெருமாள் சன்னிதி காண்போரை கவர்ந்திழுக்கின்றது. தற்பொழுது வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இங்கு திரளான பக்தர்கள் கூடி பேச்சிழந்த தங்களது பிள்ளைகளுக்காக விரதமிருந்து, பெருமாளுக்கு அர்ச்சனை வழிபாடு செய்கின்றனர். பெருமாளுக்கு அபிஷேகம் செய்த தேன் திக்குவாய் உள்ள மற்றும் பேச முடியாமல் இருக்கும் குழந்தைகளின் நாக்கினில் வைக்கப்படுகின்றது. தொடர்ந்து ஏழு சனிக்கிழமைகளில் இக்கோயிலில் வழிபாடு செய்யும் பக்தர்களின் பேச்சு குறைகள் தீர்ந்து, பேச்சு வந்ததும் மீண்டும் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

சனிக்கிழமைகளில் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆலயம் திறந்திருக்கும். அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் இங்கு அலைமோதும். வருடாவருடம் காணும் பொங்கலுக்கு மறுநாள் இங்கு திருவிழா நடைபெறுகிறது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமானின் திருவருளைப் பெறுகின்றனர்.

அமைவிடம்: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில் உள்ளது பெரிய அய்யம்பாளையம். ஆரணியில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் கண்ணமங்கலத்துக்கு அருகில் அமைந்துள்ளது கோயில்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com