வாஸ்து தோஷம் தீர்க்கும் ஸ்ரீ வாஸ்து லட்சுமித் தாயார்!

வாஸ்து தோஷம் தீர்க்கும்
ஸ்ரீ வாஸ்து லட்சுமித் தாயார்!
Published on

செங்கற்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் நத்தம் பரமேஸ்வரமங்கலம்.  பல்லவப் பேரரசரான பரமேஸ்வரவர்ம பல்லவனின் பெயரால் இவ்வூர் பரமேஸ்வரமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் மகாவிஷ்ணு ஸ்ரீசௌமிய தாமோதரப் பெருமாள் என்ற திருநாமம் தாங்கி ஸ்ரீதேவி, பூமாதேவி எனும் வாஸ்து லட்சுமியோடு எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

பல்லவர் காலத்தில் கற்றளியாக அமைக்கப்பட்ட இத்தலம், சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.  கி.பி.869 - கி.பி.880ம் ஆட்சியாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மன் இக்கோயிலை எழுப்பிதாகக் கூறப்படுகிறது.

மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள இத்திருக்கோயிலின் நுழைவாயிலில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த இரண்டு சிங்கத்தூண்கள் கலை நயத்தோடு காட்சியளிக்கின்றன. கோயிலுக்குள் நுழைந்ததும் பலிபீடம் காட்சி தருகிறது.  அதை அடுத்து கருட பகவான் சன்னிதி அமைந்துள்ளது.  முன்மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்போடு திகழும் இத்தலத்தில் கருவறையில் ஸ்ரீசௌமிய தாமோதரப் பெருமாள் சுமார் ஆறு அடி உயரத்தில் ஸ்ரீதேவி பூமாதேவி எனும் ஸ்ரீவாஸ்து லட்சுமியோடு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். கருவறையில் உத்ஸவர்களாகவும்  ஸ்ரீதேவி பூமாதேவி சமேத சௌமிய தாமோதரப் பெருமாள் அமைந்துள்ளனர்.

ஆலயத்தினுள் இடதுபுறத்தில் சக்கரத்தாழ்வார் அபூர்வமான வடிவத்தில் எழுந்தருளியுள்ளார்.  வலது பக்கத்தில் ஆழ்வார்கள் ஒரு சன்னிதியிலும் மற்றுமொரு சன்னிதியில் ஆஞ்சனேயர் அமைந்துள்ளனர்.  அருகில் அமைந்த மற்றொரு சன்னிதியில் ஆண்டாள் அமைந்து அருள்பாலிக்கிறார்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்தத் தலத்தில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.  2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 தேதி இத்தலத்தின் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவாஸ்து லட்சுமித் தாயாரை வழிபட்டால் வாஸ்து தொடர்பான பிரச்னைகளும் வீடு, மனை தொடர்பான பிரச்னைகளும் அகலுகின்றன என்று கூறப்படுகிறது.

தினமும் காலை ஒரு வேளை பூஜை மட்டுமே இக்கோயிலில் நடைபெறுகிறது.  காலை 9 முதல் 10 மணி வரை இக்கோயில் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கல்பாக்கத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.  கல்பாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ வசதி உண்டு

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com