நல்ல ஆரோக்கியமும், பொருளாதார பாதுகாப்பும் மன அமைதிக்கு மிகவும் இன்றியமையாதவை என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால், இவை இரண்டும் இருப்பினும், பலரும் தொடர்ந்து மன அமைதியின்றி அல்லல்படுகின்றனர். நீங்கள் இந்த வகையை சேர்ந்தவர்களா? ஆமாம் என்றால் இந்தப் பதிவு உங்களுக்குத்தான். உங்களது தொல்லைகள் பெரும்பாலும் நீங்களாகவே உண்டாக்கிக் கொண்டது என்பதால், அவை தவிர்க்கப்படக் கூடியவையே. அது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
உங்கள் அமைதியைப் பாதுகாக்க நீங்கள் சொந்த வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதும் என்பது ஒரு நல்ல விதியாகும். நீங்கள் அடிக்கடி பிறர் விஷயங்களில் தலையிடுகிறீர்களா? அதை முன்னிட்டு நீங்கள் ஏன் அவதிப்பட வேண்டும்? யாரையும், எதற்கும் குறை கூறாதீர்கள். உங்கள் வேலையில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். மன அமைதிக்கு முக்கியத்துவம் தருபவர் எல்லாவற்றுக்கும் மேலாக்க கடைப்பிடிக்க வேண்டிய நியதி இது.
வாழ்க்கையில் நேரிடும் ஒவ்வொரு அனுபவத்தையும் அது வரும் விதத்திலேயே ஏற்றுக்கொள்ளுங்கள். முணுமுணுக்காதீர்கள். எரிச்சல் கொள்ளாதீர்கள், வருந்தாதீர்கள், மகிழ்ச்சி அடையவும் வேண்டாம். அமைதியாக இருங்கள். செயலும் வினையும் எப்போதும் அன்றாட வாழ்வில் உண்டு. சமமான பரப்பில் நீங்கள் ஒரு மண் மேட்டை உருவாக்க விரும்பினால் வேறு ஏதாவது ஒரு இடத்தில் நீங்கள் பூமியைத் தோண்ட வேண்டியதிருக்கும். பள்ளம் இன்றி மேடு இல்லை. கண்ணீர் இன்றி களிப்பு இல்லை. எனவே, எப்போதும் அடக்கமாக இருங்கள். எக்களிப்பையும், பெரும் சிரிப்பையும் தவிர்த்து விடுங்கள். தவிர, தற்காலிகமாக கவலையை மறைக்கும் மகிழ்ச்சியை விட அடக்கம் மேலானது.
பணிவு பலவீனம் அல்ல, அதுவே பலம். பணிவு அதிகமானால் சக்தியும் அதிகரிக்கும். எல்லோர் முன்னிலையிலும் பணிவுடன் இருங்கள். எந்த நிலையிலும் அடக்கமாக இருங்கள். நான் உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் என்ற எண்ணத்தை விடுத்து, அனைவரிடமும் சமமாக இருங்கள்.
உங்களைப் பற்றி எவருமே நாட்டம் கொள்வதில்லை. இந்த விஷயத்தை நன்கு நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு மோசமான நிலைமையிலும் உங்களது உதவிக்கு உலகம் ஓடிவரும் என்று எதிர்பார்க்காதீர்கள். கடவுளிடம் நம்பிக்கை கொண்டு தொடர்ந்து முயற்சியில் ஈடுபடுங்கள். உங்களுக்கு கடவுள் துணை இருந்தால் உலகமே எதிர்த்தாலும் நீங்கள் வெற்றி அடைவீர்கள்.
எதற்கும் விவாதம் செய்யாதீர்கள். ஒருபொழுதும் தர்க்கத்திவ் ஈடுபடாதீர்கள். விவாதத்தில் வெல்வதால் எந்த உருப்படியான விளைவும் ஏற்படப்போவதில்லை. அது உங்கள் ஆணவத்தைப் பெருக்கும், மற்றவர்கள் மனதை புண்படுத்தும். எதையும் எதிர்பார்க்காதீர்கள். ஏனெனில், எதிர்பார்ப்பு பரபரப்பையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது. எதிர்பார்ப்பு இல்லையென்றால் ஏமாற்றமும் இல்லை. நீங்கள் என்ன அனுபவிக்க வேண்டும் அல்லது துன்பப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டு இருக்கிறதோ அதை அனுபவித்து, அதில் துன்பப்பட்டே ஆக வேண்டும். உங்கள் துன்பம் அல்லது இன்பத்தின் அளவைக் குறைக்கவோ கூட்டவோ முடியாது. இதை அறிந்த பிறகு ஏன் உங்கள் காலத்தையும், சக்தியையும் கவலையில் அழிக்க வேண்டும்.
ஒரு முறையான லட்சியத்தை உங்கள் முன் வைத்து கொண்டு, அதன் பின்னர் உங்களுக்கு நீங்களே உண்மையாக இருக்க ஆரம்பியுங்கள். உங்கள் சிந்தனை, சொல், செயல்களுக்கிடையே ஒற்றுமையை கொண்டு வாருங்கள். நீங்கள் சொல்வதை செய்யுங்கள். எல்லா போலித்தனத்தையும் விடுங்கள். உங்கள் வாழ்விலிருந்து எல்லா போலித்தனத்தையும் அகற்றுங்கள். மன அமைதியின் முக்கியமான பகைவன் போலித்தனமேயாகும்.
யாராவது உங்களைத் திட்டினால் கண்களை மூடிக் கொண்டு பொறுமையாக இருங்கள். பிறர் அவர்கள் விருப்பம் போல் நினைக்கட்டும். அவர்கள் விரும்புவதைச் சொல்லட்டும். இந்த உலகம் முட்டாள்கள் நிறைந்தது. நீங்கள் அறிவுடையராக விளங்குங்கள். வாழ்க்கையில் மன அமைதியை விரும்பும் ஒருவன் ஒவ்வொரு நிலையிலும், நிகழ்விலும் விவேகத்துடன் செயல் பட வேண்டும். எது சரி, எது தவறு, எது முடியும், எது முடியாது என நம்மை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
உங்கள் தேவைகளை பெருக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் தேவைகளை குறைத்துக் கொண்டு ராஜாவைப் போல வாழுங்கள். மன அமைதியும், பொருட்களின் மீதான பேராசையும் ஒன்றுக்கொன்று முரணானவை. அவை இரண்டும் ஒத்துப்போகாது. உங்களுக்கு எது தேவையோ, அதைத் தேர்ந்தெடுங்கள்.