தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு அப்பெயர் வரக் காரணமாக இருந்ததாக இரண்டு கோயில்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை, சென்னகேசவப் பெருமாள் மற்றும் சென்னமல்லீசுவரர் கோயில்கள் ஆகும். தற்போது, சென்னை பூக்கடை,தேவராஜ முதலி தெருவில் அமைந்துள்ளது சென்னகேசவப் பெருமாள் கோயில். இக்கோயில் பட்டணம் கோயில் என்றும் பூக்கடை கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இந்தப் பகுதி, ‘சென்னிநகர்’ என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி சென்னை நகர் என்றானதாகவும் சொல்லப்படுகிறது.
ஆரம்பத்தில் சென்னகேசவப்பெருமாள் மற்றும் சென்னமல்லீஸ்வரர் கோயில்கள், தற்போது தலைமைச் செயலகம் உள்ள பகுதியில் இருந்ததாகவும், அப்போதைய ஆங்கிலேய அரசு தங்களின் வணிக வசதிக்காக அவற்றை இடிக்க முற்பட்டபோது, அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் மணலி முத்துக்கிருஷ்ண முதலியார் என்பவரிடம் கோயில் கட்ட இடமும் பொருளும் கொடுத்து கோயில் கட்டிக்கொள்ளும்படி கூறி இருக்கின்றனர். அதையடுத்து 1762ம் ஆண்டுதற்போது கோயில் உள்ள இடத்தில் உருவானதுதான் சென்ன கேசவப்பெருமாள் மற்றும் சென்ன மல்லீஸ்வரர் ஆலயங்கள். இந்த இருகோயில்களையும் சேர்த்தே பொதுமக்கள் இதை பட்டணம் கோயில் என்று அழைக்கலாயினர்.
கோயிலின் முன்பு நான்கு கால் மண்டபம் கம்பீரமாகக் காட்சி தருகிறது , அதையடுத்து மூன்று நிலை ராஜகோபுரம். அதையடுத்து, அழகிய பெரிய மண்டபம். அந்த மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் வடக்கு நோக்கிய கோலத்தில் எம்பார் தனிச்சன்னிதியில் வீற்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து சென்றால் கருவறையை அடையலாம். வாயிலில் ஜயன், விஜயன் காவலாக நிற்க, அவர்களைக் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் சென்னகேசவ பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் துன்பம் நீக்கி, இன்பம் அருள்பவராகக் காட்சி தருகிறார்.
இக்கோயில் தூண்கள் மற்றும் மண்டபங்களில் அழகிய வேலைபாடுகளுடன்கூடிய புடைப்பு சிற்பங்கள் காட்சி தருகின்றன. ராமர், சீதை, அனுமன், கண்ணன் மற்றும் கண்ணனின் லீலைகள், திருமால் சயனம், தசாவதார காட்சிகள், யோக நரசிம்மர், ஆழ்வார்கள், தும்புருநாதர், கோபியர்கள் போன்ற இன்னும் பல திருவுருவங்கள் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. ஒரு தூணில் விநாயகர், சிவலிங்கம், நந்தி ஆகிய சிற்பங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக செதுக்கப்பட்டுள்ளன.பெருமாள் சன்னிதி நுழைவு மண்டபத்தின் வலது புற மேற்கூரையில், கல்லைக் குடைந்து மீன் வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பு.