

தைப்பூசத் திருநாளில் முருகனின் அறுபடை வீடுகளான பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி, திருப்பரங்குன்றம் மற்றும் பழமுதிர்சோலை ஆகியவற்றை தரிசிப்பது சிறப்பு. முடியாதவர்கள் சென்னையில் உள்ள வடபழனி ஆண்டவர் கோவில், சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் கோவில் மற்றும் பெசன்ட் நகரில் அமைந்துள்ள அறுபடை முருகன் கோவில்களுக்கு சென்று வரலாம்.
சென்னை பாரிஸ் கார்னரில் உள்ள கந்தகோட்டம் முத்துக்குமாரசுவாமி கோவில் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான மற்றும் புகழ்பெற்ற முருகன் தலமாகும். இங்கு கந்தசாமி கஜவல்லி, வனவள்ளி சமேதராக காட்சி தருகிறார். தைப்பூசத்தன்று 16 வகையான திரவிய அபிஷேகங்கள் நடைபெறும் சிறப்பு பெற்ற தலமாகும். உற்சவர் திருமேனி முத்தினால் உருவானது போன்ற தோற்றம் கொண்டிருப்பதால் முத்துக்குமாரசுவாமி என அழைக்கப்படுகிறார்.
தைப்பூச நன்னாளில்தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரினங்களும் தோன்றியதாக புராணங்கள் சொல்கின்றன. தைப்பூச தினத்தன்று சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்கு சிறப்பாக தேன் அபிஷேகம் செய்யப்படும்.
தைப்பூச நன்னாளில்தான் திருஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்துபோன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அவளை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி உயிர்பித்தார். இந்த நிகழ்வு மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் தான் நடைபெற்றது. இதை மயிலை புராணம் கூறுகிறது. திருஞானசம்பந்தர் மற்றும் பூம்பாவையின் சன்னதி கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடிமரத்துக்கு அருகில் உள்ளது.
சுருளிமலை, கயிலாய குகை, தடைகளை விலக்கும் தாண்டிக்குடி போன்ற முருகன் தலங்கள் தைப்பூசத்தில் தரிசிக்க வேண்டிய முக்கிய தலங்களாகும். தைப்பூசத்தன்று சிவாலயங்களிலும் முருகனின் கோவில்களிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். இந்த வைபவங்களில் கலந்துகொண்டு வழிபடுவதால் நம் கவலைகள் நீங்கி, பாவங்கள் தொலைந்து, புண்ணியம் பெருகும் என்றும், வேண்டியது கிட்டும் என்பதும் நம்பிக்கை.
திருவிடைக்கழி முருகன் கோவிலில் முருகப்பெருமானும், லிங்க வடிவ சிவபெருமானும் ஒரே கருவறையில் வீற்றிருந்து அருள்கிறார்கள். இத்தலம் சோழ நாட்டு திருச்செந்தூர் என்று போற்றப்படுகிறது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம் இது. இங்கு முருகன் ஒரு கையில் வில்லுடனும் மறு கையில் வேலுடனும் காட்சி தருகிறார்.
மலைகளில் மட்டுமே வளரக்கூடிய குரா மரம் இக்கோவிலின் சமதளமான மண்ணிலும் வளர்ந்து தலவிருட்சமாக உள்ளதும் என்பது அதிசயமான நிகழ்வாகும். இக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்றவை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தின் பொழுது சுவாமிமலையில் இருந்து பக்தர்கள் நடைபயணமாக வருவது பெரிய திருவிழாவாக நடைபெறுகிறது.
மலேசியாவில் தைப்பூசம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அன்று பத்து மலை முருகன் வெள்ளி ரதத்தில் பவனி வருவதும், தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடுவதும் மலேசியாவில் மட்டுமே நடைபெறும் நிகழ்வாகும்.