விநாயகப்பெருமான் ஞான வடிவானவர். பிரணவ சொரூபமான அவருடைய ஒவ்வொரு அங்கமும் அவர் தாங்கியுள்ள பொருட்களும் தத்துவப் பொருளுடன் கூடியன.
கணபதியின் திருவுருவம்: விநாயகரின் திருவுருவம் விலங்கு, மனிதன், பூதம், தேவர் என்கிற நான்கின் இணைப்பாக காட்சியளிக்கிறது. யானை தலை, செவி, தும்பிக்கை போன்றவை விலங்கின் வடிவமாகும். புருவமும் கண்களும் மனித வடிவமாகும். பேழை வயிறும் குறுகிய கால்களும் பூத வடிவாகும். இரண்டுக்கும் மேற்பட்ட கரங்கள் கொண்டிருத்தல் தேவ வடிவாகும்.
திருவடிகள்: விநாயகரின் திருவடிகள் ஞானத்தை கொடுக்க வல்லவை. முற்பிறவி வினைகளை அகற்றி இன்பம் தரவல்லவை.
பெருவயிறு: விநாயகரின் பெருவயிறு தன்னகத்தே எல்லா உலகங்களையும் உயிர்களையும் அடக்கி வைத்துள்ளது என்பது தத்துவமாகும்.
ஐந்து கரங்கள்: விநாயகரின் பாசம் ஏந்திய திருக்கரம் படைத்தலையும், அங்குசம் ஏந்திய கை அழித்தலையும், ஒடிந்த தந்தம் காத்தலையும், துதிக்கை மறைத்தலையும், மோதகம் ஏந்திய திருக்கை, அருளலையும் குறிக்கும்.
கொம்புகள்: ஒடிந்த கொம்பு அபர ஞானமாகிய விந்து, மற்றொரு கொம்பு பரஞான விந்து.
செவிகள்: கணபதியின் செவிகள் இரண்டும் உயிர்களுக்கு தீவினை பிரச்னைகள் தாக்காமல் காத்து வினை என்னும் வெப்பத்தை போக்கி அருள்வன.
முக்கண்கள்: சூரியன், சந்திரன், அக்னி, ஆகியவற்றை குறிப்பன. கணபதியின் முக்கண்கள் பெருக்குதல், வளர்ச்சி அடைதல், பதம் செய்தல் ஆகிய முத்தொழிலைச் செய்யும் சோம சூர்யா அக்னிகளகும்.
பிறை நிலவு: தேய்ந்து வளர்வது சந்திரனின் இயல்பாகும். அறியாமை தேய்ந்து, உண்மை ஞானம் வளர்ச்சி பெறுவதைக் குறிப்பது பிறை நிலவு.
நாகாபரணம்: விநாயகரின் வயிற்றை சுற்றியுள்ளது பாம்பு. பாம்பு குண்டலினி சக்தியின் வடிவமாகும். மூலாதாரத்தில் குண்டலினி விநாயகர் விளங்கும் இடம்.
யானை முகம்: விலங்குகளில் ஆற்றலும் கம்பீரமும் மிக்கது யானை. கடவுளரில் ஆற்றலும் அழகும் கொண்ட விநாயகப்பெருமானின் உருவம் எவரையும் கவரும்.
பஞ்ச ஸ்வரூபி: விநாயகர் நாபி பிரம்ம ஸ்வரூபத்தையும், முகம் விஷ்ணு ஸ்வரூபத்தையும், இடப்பாகம் சக்தி ஸ்வரூபத்தையும். வலப்பாகம் சூரிய ஸ்வரூபத்தையும், முகம், கண்கள் சிவ ஸ்வரூபத்தையும் குறிக்கின்றன.