திருவண்ணாமலை கிரிவலம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சென்னையில் பச்சைப் பசேலென்ற இயற்கைச்சூழல் நிறைந்து காணப்படுகின்ற புதுப்பாக்கத்தில் அழகிய கஜகிரி மீது 108 படிகளைக் கொண்ட வீர ஆஞ்சனேயர் கோவில் உள்ளது. இது மிக முக்கியமான தலமாகக் கருதப்படுகிறது. இங்கு வந்து அனுமனை வழிபட்டால் நம் கர்ம வினைகள் தீரும் என்று சொல்லப் படுகிறது.
இக்கோவில் வரலாறு:
ராமாயணத்தில் இலட்சுமணனின் உயிரைக் காப்பாற்ற சஞ்சீவி மலையைத் தூக்கிச் சென்றபோது மாலை வேளை நெருங்கியது. மாலைநேர சந்தியாவந்தனம் செய்வதற்காக ஆஞ்சநேயர் இந்த மலையில் இறங்கி பூஜை செய்த பிறகே மீண்டும் புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. பிறகு வியாசதீசர் அனுமனுக்காக 108 கோவில்களைக் கட்டி வழிப்பட்ட தாகவும் இங்கும் அவர் அனுமனுக்குச் சிறிய கோவில் கட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
அவர் கட்டிய 108 அனுமன் கோவில்களை நினைவுபடுத்தும் விதமாக இங்கு 108 படிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படும் திருவிடத்தை ஶ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள் கோவில் பாரி வேட்டையின்போது இங்குள்ள ஆஞ்சநேயர் அங்கு கொண்டு செல்லப்பட்டு, உத்சவங்கள் நடப்பது வழக்கமாக உள்ளது. இந்த மலைக் கோவிலில் கையில் சஞ்சீவி மலையை ஏந்தியபடி வடக்கு நோக்கி நாபிக்கமலத்தில் தாமரையுடன் அனுமன் வலது காலை பூமியில் ஊன்றியும் இடது காலை பறப்பதற்குத் தயாராக இருப்பது போலவும் இருக்கும் நிலையில் அபய முத்திரை காட்டிய நிலையில் அருள் பாலிக்கிறார். அதேபோல் வாலில் மணிகட்டி வாலைப் பின்புறமாக தலைக்குமேல் உயர்த்தி பக்தர்களுக்கும் காட்சி தருகிறார். ஆஞ்சநேயர் சன்னதிக்கு எதிரில் ராமர் சீதை லட்சுமணன் சன்னதி உள்ளது அங்கு ராமரின் பாதத்தில் அமர்ந்தபடி அனுமன் காட்சி தருகிறார்.
இங்கு பக்தர்கள் வெண்ணெய் காப்பு மாற்றியும், வெற்றிலை மாலை அணிவித்தும் பக்தர்கள் வழிபடுகிறார்கள். இவரை வழிபடுவதால் தொல்லைகள், கவலைகள், மன அழுத்தம், பயம் போன்றவை நீங்கும் என நம்பப்படுகிறது. அமாவாசை நாளில் புதிய செங்கல் வாங்கி அதில் ராமநாமம் எழுதி அதை தலைமேல் வைத்தபடி படி ஏறினால் விரைவில் வீடு கட்டும் யோகம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இவரை வழிபட்டால் பல நன்மைகள் நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
பௌர்ணமி தோறும் ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாகவும், அந்த சமயத்தில் நாமும் கிரிவலம் வந்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும் என்பது நம்பிக்கை. மூல நட்சத்திர நாளில் வடைமாலை, வெற்றிலைமாலை சாற்றி வழிபட காரியத்தடைகள், திருமணத்தடைகள் நீங்கும்.
இக்கோவில் அடிவாரத்தில் விநாயகர் மற்றும் நவக்கிரக சன்னதி உள்ளது. மலை அடிவாரத்தில் ஏறே உயரமான அனுமன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாம் வீர ஆஞ்சநேயரை வழிபட்டு அவர் அருளைப் பெறுவோம்.