

வேதங்களும், சாஸ்திரங்களும் பசுவிற்குள் எல்லா தெய்வங்களும் உறைவதாகக் கூறுகின்றன. மகாலட்சுமியின் பூரண அம்சமும், உறைவிடமுமே பசுதான். பசுவின் குளம்படி தூசுக்கள் பாவத்தைப் போக்க வல்லது. ‘யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை’ என்று திருமூலர் கூறுகிறார். இறைவன் எடுக்கும் எல்லா அவதாரங்களும் பசுக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாகவே உள்ளது. மேலும் நாம் வணங்கும் தலங்களில் உறையும் தெய்வங்களை ஆதி நாட்களில் பசுக்கள்தான் கண்டறிந்தன.
பசுக்களே அனுதினமும் பூஜித்து மகிழ்ந்த கோயில்களும், பசுவின் பெயராலேயே ஈசன் விளங்கும் ஆலயங்களும் நிறைய உள்ளன. அவை பசுபதீஸ்வரர், தேனுபுரீஸ்வரர் என்றெல்லாம் வழங்கப்படுகின்றன. மாட்டுப் பொங்கலன்று நாம் ஆவினங்களை தொழுவது மட்டுமல்லாமல், மற்ற நாட்களிலும் கூட பசுக்கள் பூஜித்த தலங்களில் பக்தி செலுத்தி வருகிறோம். பசுவின் திருமுகமே தெய்வத்தன்மை பெற்றது. கண்களில் சூரிய, சந்திரர் அம்சமும், முன் உச்சியில் சிவபெருமானும் உறைகின்றனர்.
பெரிய வேள்விகளில் நெய் வெளியேறும் பகுதியை பசுவின் முகத்தை போன்றே அமைத்திருந்தனர். நாடெங்கும் கோமுகி, தேனு தீர்த்தம், பசுவின் குறிப்பால் உண்டான தீர்த்தம் என்று எண்ணற்ற தீர்த்தங்கள் உள்ளன. பசுவைக் கட்டுமிடம் கட்டுத்தறி எனவும், கன்றினை கட்டும் முளை ஆப்பு எனப்படும். ஒரு பெண் இந்த ஆப்பையே சிவபெருமானாக வழிபட்ட தலம் ஆப்பனூர் எனவும், இங்கு எழுந்தருளிய இறைவன் பெயர் நடுத்தறியப்பர் எனவும் அறியப்படுகிறது. இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
கோ என்பது பசுக்களுக்குப் பெயர். ஆதலால், பசுக்கள் சிவ வழிபாடு செய்த தலங்கள் கோவூர், கோமங்கலம், கோவந்தபுத்தூர் எனப் பெயர் பெற்றன. கருநீலம் அல்லது மயில் கழுத்து நிறம் கொண்ட பசு கபிலை எனப்படும். இத்தகைய கபிலையால் வழிபடப்பட்டதால் இறைவன் கபிலேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
தம் உடலிலிருந்து பாலைச் சுரந்து உயிர்களைக் காப்பதால் பசுக்களுக்கு சுரபி என்பது பெயராயிற்று. அமுதமாகிய பாலை சுரந்தளிப்பதால் இவற்றிற்கு அமுதசுரபி என்று பெயராயிற்று. பசுக்களுக்கு ‘ஆ’ அல்லது ஆன் என்பது சிறப்பான பெயர். எனவே, பசுக்கள் சிவனை வழிபட்ட தலங்கள் ஆவூர் எனவும், அங்குள்ள இறைவனின் பெயர் பசுபதீஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறது.
பசுக்களின் கூட்டம் கோகுலம் எனப்பட்டது. எனவே, பசு மந்தை நிறைந்த இடமும், கோகுலம் எனப்பட்டது. திருகோழம்பம் எனும் பாடல் பெற்ற தலத்தில் ,பசுக் கூட்டம் தங்கி இறைவனை வழிபட்டதால், அதற்கு கோகுலபுரம் என்று பெயராயிற்று. இவ்வாறு பசுக்கள் பூஜித்த தலங்களில் நாமும் வழிபட்டு பேறு பெறலாம்.