அம்மனுக்கு மாதவிடாய் நாட்களில் மூடப்படும் காமாக்யா கோயில்!

The Kamakya temple is closed on the days of the goddess' menstruation
The Kamakya temple is closed on the days of the goddess' menstruationhttps://kamakhyadevi.org/

சாமின் கவுகாத்தியில், உள்ள நீச்சல் மலையில் உள்ளது காமாக்யா கோயில். காமாக்யா என்றால் ‘பிரபஞ்சத்தின் தாய்’ என்று பொருள். இக்கோயில் 8 முதல் 9ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது. பின்னர் 11 முதல் 12, 13 மற்றும் 14ம் நூற்றாண்டுகளிலும் அதற்கு பின்னரும் பலமுறை மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.

16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில்தான் இன்னும் கம்பீரமாக இருந்து வருகிறது. 19ம் நூற்றாண்டு வரை பிரபலமடையாதிருந்தது இந்தக் கோயில். அதன் பின்னர்தான் வங்காளத்தில் உள்ளவர்களுக்கு ஒரு சிறப்பு வாய்ந்த தலம் இருப்பது தெரியவந்து, தற்போது முக்கியமான யாத்திரைத் தலமாக மாறியுள்ளது, காமாக்யா கோயில். இக்கோயிலில் மொத்தம் நான்கு அறைகள் உள்ளன. கர்ப்பகிரஹம் மற்றும் காலந்தா, பஞ்சரத்னம், நாதமந்திரம் என மூன்று மண்டபங்கள் உள்ளன.

கர்ப்பகிரஹம்: இக்கோயிலின் கருவறையில் யோனி (பெண் உறுப்பு) மட்டும்தான் இருக்கும். அதுவே கடவுளாக மதிக்கப்பட்டு, வழிபடப்பட்டு வருகிறது. காமாக்யா கோயிலில் செங்கற்களால் ஆன தேன் கூடுகள் போன்ற அமைப்புகளை கோயில் சுவரிலும் தூண்களிலும் அதிகம் காணலாம். காமாக்யா கோயிலில் காளி, திரிபுர சுந்தரி, புவனேஸ்வரி, பைரவி, தாரா, மாதங்கி, தூமாவதி, பகலாமுகி மற்றும் கமலாத்மிகா ஆகிய அம்பிகையருக்குத் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. கர்ப்பகிரஹம் சிறியதாகவும் குறுகியதாகவும் இருட்டாகவும்தான் இருக்கிறது. இங்கு எப்போதும் வற்றாத நிலத்தடி நீர் சுரந்துகொண்டே இருக்கிறது.

காமாக்யா கோயில்: இது காசி தெய்வமான, கா மீகா என்ற பெயரிலிருந்து வந்ததாகவும் காசி மக்கள் மற்றும் காரோ மக்களின் பூர்வீகத் தெய்வமாக இருக்கலாம் எனவும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 10ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காளிகா புராணம் மற்றும் யோகினி தந்த்ரத்தில் காமாக்யா தேவி கிராத வம்சத்தைச் சேர்ந்தவர் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Kamakya Temple
Kamakya Templehttps://www.adotrip.com

காமாக்யா என்றால் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுபவர் என காளிகா புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவர் முக்தி அளிக்கும் கடவுள் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் அம்புபாச்சி மேளா எனப்படும் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், மானுஷா பூஜை, நவராத்திரி காமாக்யா துர்கா பூஜை போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன.

காமாக்யா கோயில் வருடத்தில் மூன்று நாட்கள் மூடப்படுகிறது. அந்த மூன்று நாட்கள் காமாக்யாவின் மாதவிடாய் நாட்களாகக் கருதப்படுகிறது. அந்தக் காலங்களில் அம்மனுக்கு சிவப்பு புடைவையை மட்டும்தான் அணிவிப்பார்களாம். பின் நான்காவது நாளிலிருந்து வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும்.

திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பேறு இல்லாதவர்கள் காமாக்யா கோயிலுக்குச் செல்வது வழக்கம். ஏனெனில், காமாக்யா தேவி நம்பிக்கையைக் கொடுத்து வேண்டுதல்களை நிறைவேற்றுபவள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com