பொதுவாகவே மலை மீது அமர்ந்திருக்கும் முருகன் கோவிலை பற்றி தான் பார்த்திருக்கிறோம். ஆனால் ஆற்றின் நடுவே இருக்கும் முருகன் கோவில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
திருநெல்வேலியில் மிக முக்கிய கோவில்களில் ஒன்று குறுக்குத்துறை முருகன் கோவில். இந்த கோவில் தாமிரபரணி ஆற்றின் நடுவே அமைந்துள்ளது. ஆனால் கட்டுக்கடங்காத வெள்ளத்தையும் தாங்கியிபடி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கம்பீரமாக நிற்கிறது இந்த குறுக்குத்துறை முருகன் கோவில். இந்தக் கோவிலின் கட்டிடக்கலை இந்த வெள்ளப்பெருக்கை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளம் உள்ளே வரும்போதும் வெள்ளம் வடியும் போதும் எந்த சேதமும் ஏற்படக்கூடாது என்ற வகையில் மிகவும் நுட்பமாக கட்டப்பட்டுள்ளது. பொங்கி வரும் வெள்ளத்தைக் கிழித்து பிரிக்கும் வகையில் படகுகளின் முன் பகுதி கூர்முனையுடன் இருப்பது போல் இந்த கோவிலின் மேற்கு பகுதி மதிற்சுவர் கட்டப்பட்டிருக்கிறது.
வெள்ளம் மோதும் போது இந்த கூர்மையான சுவரில் பட்டு சிதறி ஓடிவிடும். கோவிலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மண்டபத்தினுள் புகும் வெள்ளம் மறுபுறம் வெளியேறும் வகையில் கற்சுவரில் ஜன்னல் வடிவிலான திறப்புகள் காணப்படுகின்றன. இதுபோன்ற நுட்பமான கட்டுமானத்தால் தான் இத்தனை ஆண்டுகளாக இந்த கோவில், வெள்ளத்தை எதிர்கொண்டு வருகிறது.
தாமிரபரணி நடுவே அமைந்துள்ள இந்த கோவில் மூழ்குவதும் வாடிக்கையாகும். அப்போது 40 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆற்றில் வருகிறது என நெல்லை மக்கள் புரிந்து கொள்வார்கள். வெள்ளப்பெருக்கு காலங்களில் இந்த கோவிலில் இருந்து உற்சவர் சப்பரங்கள் உண்டியல் போன்றவை அங்கிருந்து எடுத்துச் சென்று கரையில் அமைந்துள்ள மேல கோவிலில் வைத்து விடுவர். மூலவர் சிலை மட்டும் அப்படியே இருக்கும். வெள்ளம் வடிந்த பின் கோவிலை முழுமையாக சுத்தப்படுத்தி உற்சவரை மீண்டும் கோவிலுக்கு கொண்டு வருவார்கள்.
திருச்செந்தூர் மூலவர் சிலை இங்குதான் உருவாக்கப்பட்டது. அப்போது ஒரே மாதிரியான இரண்டு சிலைகளை உருவாக்கி, ஒன்றை திருச்செந்தூர் கருவறையிலும் மற்றொன்றை குறுக்குத்துறை மேல கோவில் கருவறையிலும் வைத்து வணங்கி வருகிறார்கள். குறுக்குத் துறையில் உள்ள பாறையில் முருகன் சிலை வடிக்கப்பட்டு திருச்செந்தூர் சென்றதால் இந்த கோவிலை திருச்செந்தூரின் தாய் வீடு என்று அழைக்கிறார்கள்.
ஆனாலும் இந்த சிலையை மக்கள் வழிபட்டு வந்தார்கள் இந்த சிலை வெயில் பட்டு மழை பட்டு பாதுகாப்பற்ற நிலையில் கிடந்தது. ஒரு சமயம் அந்த வழியாக வந்து ஒரு மூதாட்டி இந்த திருவுருவை கண்டார் முருகனின் திருவுருவை கண்டதும் உள்ளம் மகிழ்ந்த அந்த மூதாட்டி முருகன் திருவுருவுக்கு ஆட்பட்டு அங்கேயே தங்கியிருந்தேன் இறை பணி செய்ய தொடங்கினார் தினமும் முருகன் திருவுருவை நீராட்டி மலரிட்டி வழிபட்டு வந்தார்.
அவரை தொடர்ந்து பலரும் வழிபட தொடங்கினர் பக்தர்கள் கூட்டம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக பெருகியது இதனை தொடர்ந்து அந்த இடத்தில் முருக பெருமானுக்கு ஒரு நிழலிடம் அமைக்கப்பட்டது வழிபாடு தொடர்ந்து சிறப்புடன் நடைபெற்றது பின்னர் இந்த திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீன ஆளுகைக்கு வந்தது. இந்த ஆலயத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று பொலிவுடன் காணப்படுகிறது.
இங்கு கருவறையில் பாறையில் குடையப்பட்ட திருமேனியாக வள்ளி தெய்வானையுடன் நான்கு கரங்கள் கொண்டு நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் சுப்பிரமணியசுவாமி. வலது மேல்கரத்தில் வஜ்ராயுதம் தாங்கி, வலது கீழ்கரத்தில் மலர் ஏந்தி, இடது மேல் கரத்தில் ஜெபமாலை கொண்டு, இடது கீழ்கரத்தை தொடையில் வைத்த நிலையிலும் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார் சுப்பிரமணியசாமி.
செந்தில் ஆண்டவரையும் பழனி ஆண்டவரையும் ஒரே நாளில் தரிசிப்பது கடினம் ஆனால் குறுக்குத்துறை உள்ள முருகப்பெருமானின் கோவிலும் மேல கோவிலையும் தரிசித்தால் ஒரே நாளில் செந்தில் ஆண்டவரையும் பழனி ஆண்டவரையும் தரிசித்த பலன் கிடைக்கும்.
தாமிரபரணி ஆற்றின் நடுவே கம்பீரமாக இருந்து அருள் பாலிக்கிறார் குறுக்குத்துறை முருகன்.