கடலுக்குள் ஸ்ரீராமபிரான் ஸ்தாபித்த நவபாஷாண நவக்கிரகம்!

நவபாஷாண நவக்கிரகம்
நவபாஷாண நவக்கிரகம்

வக்கிரகங்களுக்கான சன்னிதி பொதுவாக சிவாலயங்களில் அமைந்திருக்கும். அரிதாக, சில வைணவத் தலங்களிலும் நவக்கிரக சன்னிதிகள் அமைந்திருப்பதைக் காணலாம். ஆனால், கடலுக்குள் பிரத்யேகமாக நவக்கிரகங்களுக்கென ஒரு கோயில், அதுவும் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது என்றால் ஆச்சரியமாக உள்ளது அல்லவா? ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் என்ற ஊரில் கடற்கரையை ஒட்டி இந்தத் தலம் அமைந்துள்ளது. புராண காலத்தில் இந்தத் தலம் தேவிபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராமபிரான், சீதையை மீட்க இலங்கைக்குச் செல்லும் வழியில் சனி தோஷத்திலிருந்து விடுபட தேவிபட்டினத்தில் கடலில் நவக்கிரகங்களை ஸ்தாபித்து வழிபட்டதாக ஐதீகம்.  ராமபிரான் நவக்கிரகங்களை ஸ்தாபித்த சமயத்தில் கடல் அலைகள் அதற்கு இடையூராக அமைந்தது. அந்த சமயத்தில், ‘அலை பொங்கித் ததும்பும் இந்த கடல் பகுதியில் எப்போதும் அலையடிக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும்’ எனப் பெருமாளிடம் வேண்டினாராம் ராமபிரான். இதனால் பெருமாள் கடல் அலைகளை நிறுத்தினார். அன்று முதல் ராமேஸ்வரம் கடலில் அலைகள் பெரிதாகப் பொங்கி வருவதில்லை என்பது ஆச்சரியம். கடல் அலைகளை நிறுத்திய, ‘கடலடைத்த ஆதி ஜெகந்நாதப் பெருமாள்’ நவபாஷாண நவக்கிரகக் கோயிலுக்கு மிக அருகில் எழுந்தருளி உள்ளார்.

நவபாஷாண நவக்கிரகம்
நவபாஷாண நவக்கிரகம்

ஸ்ரீராமபிரான் ஸ்தாபித்த நவக்கிரகங்களுக்கு நவபாஷாண சக்தி இருப்பதால் இவை நவபாஷாண நவக்கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இத்தலத்தில் ஸ்ரீராமபிரானுக்கு சனி தோஷம் விலகியதாகவும், அதனால் ராவணனுடன் நடைபெற்ற போரில் அவர் வெற்றி பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது.

இங்கு நவக்கிரகங்களுக்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே அபிஷேகம், ஆராதனை முதலானவற்றைச் செய்யலாம். இங்குள்ள கடலில் நீராடி நவக்கிரகங்களுக்கு நவதானியங்கள் சமர்ப்பித்து ஒன்பது முறை வலம் வந்து வழிபட்டு பிரம்மஹத்தி தோஷம், பித்ரு தோஷம் முதலான தோஷங்களிலிருந்து விடுபடலாம். முன்னோர்களுக்கு உரிய காலத்தில் ஸ்ராத்தம், தர்ப்பணம் முதலானவற்றைச் செய்யாத காரணத்தினால் ஏற்படுவது பித்ரு தோஷம். இந்த நவக்கிரக நாயகர்களை பக்தர்கள் வலம் வந்து தரிசிப்பதற்காக கடலுக்குள் ஒரு சிறிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை போன்ற தினங்களில் பித்ரு கடன்களைச் செலுத்த இத்தலத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

நவபாஷாண நவக்கிரகம்
நவபாஷாண நவக்கிரகம்

பக்தர்கள் அதிகாலை 4.30 முதல் மாலை 6.30 மணி வரை இந்த நவபாஷாண நவக்கிரக நாயகர்களை வழிபடலாம்.

அமைவிடம்: ராமநாதபுரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவிபட்டினம் என்ற ஊரின் கடற்கரையில் அமைந்துள்ளது நவபாஷாண நவக்கிரக ஆலயம்.  ராமநாதபுரத்திலிருந்து இங்கே செல்ல பேருந்து மற்றும் வேன் வசதிகள் உள்ளன. ராமேஸ்வரத்தில் இருந்த இத்தலம் 75 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com