

ஒரு ஊரில் சாது ஒருவர் வசித்து வந்தார். அதிகம் பேசாத சாது; முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தினமும் காலையில், அருகிலிருந்த ஆற்றில் குளிப்பதற்குச் செல்வார். ஒருமுறை ஆற்றில் குளிக்கச் சென்றப் போது, தேள் ஒன்று ஆற்றுத் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தது. தேள் ஆற்றிலிருந்து அருகாமையில் இருந்த நிலப்பகுதிக்கு ஏற முயற்சி செய்து கொண்டிருந்தது. பல முறை முயற்சி செய்தும் அதனால் நிலத்தில் ஏற முடியவில்லை. நழுவி தண்ணீரில் விழுந்து கொண்டிருந்தது.
கருணை மனம் கொண்ட சாது, தேளின் நிலை கண்டு பரிதாபம் அடைந்தார். அதற்கு உதவ முடிவு செய்தார். தண்ணீரிலிருந்த தேளை நிலத்தில் விடுவதற்காக கைவிரலால் தேளை எடுத்தார். பயந்த தேள் தற்காப்பிற்காக அவரது கையைக் கொட்டியது. சாது, வலியால் கையை உதற, தேள் மறுபடியும் தண்ணீரில் விழுந்தது. விடா முயற்சியாக சாது பலமுறை தேளைத் தண்ணீரிலிருந்து எடுக்க முயற்சி செய்தார். ஆனால், ஒவ்வொரு முறையும், தேள் சாதுவின் கையைக் கடித்துத் தண்ணீரில் விழுந்தது.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவன் சாதுவிடம் கேட்டான். “ஏன் சாமி...தேள் தான் உங்க கையைக் கடிக்குதே. அப்புறமும் எதுக்கு மறுபடியும் மறுபடியும் எடுக்கிறீங்க”
“தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக் கடிப்பது தேளின் பிறவிக் குணம். துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுவது என்னுடைய பிறவிக் குணம்.
எப்படித் தேளினால் தன்னுடைய பிறவிக் குணத்தை மாற்றிக் கொள்ள முடியாதோ, என்னாலும் மற்றவர்க்கு உதவி செய்யும் குணத்தை மாற்றிக் கொள்ள முடியாது” என்று பதிலளித்தார் சாது.
நீதி : தம்மைத் துன்புறுத்துவோரிடமும் தாட்சண்யம் காட்டுவதே சிறந்த பண்பாகும்.