ஒவ்வொரு நாட்டிலும் அவரவர்களுக்கு ஏற்ப மதங்களை தொடங்கி காலம்காலமாக பின்பற்றி வருகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை இந்து மதம்தான். அந்தவகையில் இந்து மதத்திற்கும் பெர்சிய நாட்டின் மதத்திற்கும் இடையே உள்ள சுவாரஸ்யமான தகவல் பற்றித்தான் பார்க்கவுள்ளோம்.
மதங்கள் ஏராளம், இறைவன் ஒருவனே. என்பது சிலரின் நம்பிக்கையாகும். மனிதர்களுக்கு மேல் ஒரு சக்தி உள்ளது. அந்த சக்திக்கு உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்களுக்கேற்றவாரு உருவங்களை உருவாக்கிக்கொண்டார்கள் என்பது அந்த நம்பிக்கையின் அடிப்படை கருத்தாகும்.
அந்தவகையில் மிகவும் பழமையான மதங்களில் ஒன்று ஹிந்து மதம். இம்மதத்தில் ஏராளமான புராணக்கதைகளும், நம்பிக்கைகளும், அந்த நம்பிக்கைகளுக்கான ஆதாரங்களும் உள்ளன. அப்படியிருக்க கடவுள்களின் கதைகள் அனைத்தும் உண்மை, ஆனால், அவர் ஒருவரே என்பதற்கான ஆதாரமாக இதனைப் பார்க்கலாம்.
ஹிந்து மதத்தில் மனிதர்களை படைப்பது பிரம்மா என்ற நம்பிக்கை உள்ளது. கடவுள் பிரம்மா, மனிதர்கள் மற்றும் சமுதாயத்தை பழக்க வழக்க ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் மேம்படுத்துவதற்கு 7 ரிஷிகளை படைத்தார். அந்த 7 ரிஷிகளை நாம் சப்தரிஷி என்று அழைக்கிறோம். அதாவது அத்திரி, பாரத்வாசர், ஜமதக்கினி, கௌதமர், காசியபர், வசிச்டர், விஷுவாமித்திரர். இது நாம் அறிந்ததே.
பல பழமைவாய்ந்த மதங்களுள் ஒன்றான பெர்சியா மக்களின் மதமான Zoroastrianism மதத்திலும் இதுபோன்ற ஒரு ஒற்றுமை உள்ளது. ஆம்! அஹுரா மாஸ்டா (Ahura Mazda) என்பவர் பெர்சிய மக்களின் படைக்கும் கடவுளாக நம்பப்படுபவர். அவர் 7 அமேஷா ஸ்பெண்டாக்களை உருவாக்கினார். அதாவது நம்முடைய சப்தரிஷிகள் போலவே. அவர்கள் ஸ்பென்டா மைன்யூ, ஆஷா, வோஹோ மன்னாஹ், க்ஷத்ரா, அர்மைடி, ஹௌர்வதத், அமெரடட் ஆகியோர் ஆவர். இவர்களும் மக்களின் கலாச்சாரம், பழக்கவழக்கம், தர்மம், அதர்மம் போன்றவற்றை எடுத்துரைத்து அவர்களை மேம்படுத்துவதற்காக படைக்கப்பட்டவர்கள்.
இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால், இந்த மனிதநேயம் மற்றும் கலாச்சாரத்தை எடுத்துரைக்க இந்த இரண்டு மதங்களில் மட்டுமல்ல, இதேபோல் ஸ்பென்டாஸ் போல கிறித்துவ மதத்திலும் ஜுடைஸம் மதத்திலும் ஆர்கேஞ்சல்ஸ் என்ற பெயரில் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இப்போது புரிகிறதா? அனைத்து மதங்களும், மத நம்பிக்கைகளும் ஏதோ ஒரு விதத்தில் ஒன்றுபட்டு இருக்கிறது என்பது. அப்படியென்றால், இறைவன் ஒருவனா?