சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில், காரியாபந்த் மாவட்டத்தின், மரோடா என்ற கிராமத்தில் உள்ள காட்டில் அமைந்துள்ளது பூதேஸ்வர் மகாதேவ் சிவலிங்கம். உலக அளவில் மிகப்பெரிய சுயம்பு லிங்கமாக இது கருதப்படுகிறது.
மிகப் பிரபலமான இந்த சிவலிங்கம் அதன் வளரும் சக்திக்காக பக்தர்கள் அனைவராலும் வணங்கப்படுகிறது. சுற்றுவட்டார மக்களிடையே இந்த சிவலிங்கம் ‘பாகுரா மகாதேவ்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து இந்த சிவலிங்கத்தை வழிபட்டுச் செல்வதாகக் கூறுகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் இந்த சிவலிங்கம் குறிப்பிட்ட அளவுக்கு வளர்ச்சி அடைகிறது என்பது ஒரு அதிசய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அதாவது, உயரம் மற்றும் அகலம் ஆகிய இரண்டு பரிமாணங்களிலும் அதன் வளர்ச்சி அதிகமாகிக்கொண்டே உள்ளது. தற்போதைய நிலவரப்படி அதன் உயரம் 18 அடியாகவும், சுற்றளவு 20 அடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த சிவலிங்கத்தின் அளவு ஒவ்வொரு வருடமும் மகாசிவராத்திரி அன்று வருவாய்த் துறை அதிகாரிகளால் அளவீடு செய்யப்படுவதாக இந்தக் கோயிலில் பூஜை செய்பவர்கள் தெரிவிக்கின்றனர். அதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் 6 அங்குலம் முதல் 8 அங்குலம் வரையிலும் இந்த சிவலிங்கம் வளர்ச்சி பெற்று வருவதாக அறியப்பட்டுள்ளது என்று இந்த கிராம மக்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், சுற்றுவட்டார 17 கிராமத்தைச் சேர்ந்தவர்கள், ‘மக்கள் சபை’ அமைத்து இந்த கோயில் நிர்வாகத்தை கவனித்து வருகிறார்கள்.
பூதேஸ்வர் மகாதேவ் சிவலிங்கத்தின் அளவு 1952ம் ஆண்டு முதல் அளவிடப்பட்டு வருகிறது. அன்று முதல் இன்று வரை அதன் உயரமும், அகலமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கல்லால் தாமாக உருவான சுயம்பு சிவலிங்கம் ஒவ்வொரு வருடமும் எவ்வாறு வளர்கிறது என்பதற்கான விடை மட்டும் அறியப்படாத ரகசியமாகவே உள்ளது.