
சொரிமுத்தையனார் கோவில் நெல்லை மாவட்டம் பாபநாசத்துக்கும் காரையார் நீர் தேக்கத்துக்கும் இடையே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இங்கே மகாலிங்க சுவாமி, பூரண புஷ்கலா சமேத சாஸ்தா, சொரிமுத்து அய்யனார், அகத்தியர் சங்கிலி பூதத்தார் ஆகியோருக்கு தனி சன்னதி உள்ளது.
இங்குள்ள தலவிருட்சம் இலுப்பை மரம் என்ற மணி முழுங்கி மரம். முற்காலத்தில் இமயமலையில் நடைபெற்ற அம்மையப்பர் திருமணத்தை காண முப்பத்து முக்கோடி தேவர்களும் ரிஷிகளும் கூடியதால் வட திசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது.
இதனை கண்ட சிவபெருமான் அகஸ்தியரை அழைத்து, "தென்திசையை நீங்கள் தான் சமன்படுத்த வேண்டும்" என்று கூறினார். அதன்படியே அகஸ்தியர் பொதிகை மலை வந்து தாமிரபரணி நீராடி ஓர் இடத்தில் அமர்ந்து நிஷ்டையில் வழிபட்டார்.
அவரது நிஷ்டையில் அவரது கண் முன்னே ஒரு ஜோதி தோன்றி மறைந்தது. அந்த ஜோதி தேவர்கள், சாஸ்தாவான மகாலிங்க சாமியை பூஜை செய்த காட்சியாகவும், மகாலிங்க பெருமானை வழிபடும் காட்சியாகவும் அமைந்தது.
இதனை கண்ட அகஸ்தியர் ஆனந்தம் அடைந்து இங்குள்ள மும்மூர்த்திகளை வழிபட்டு இங்கு வருவோருக்கு கஷ்டங்கள் நெருப்பிலிட்ட பஞ்சு போல விலகி விடுமென வேண்டிக் கொண்டார்.
அப்போது சாஸ்தாவை தேவர்கள் பூமாரி சொரிந்து வழிபட்ட காரணத்தால் சொரிமுத்து அய்யனார் என அழைக்கப்பட்டார். அகஸ்தியர் காட்சியளித்த வரலாறும் உண்டு. வேறு ஒரு கதையும் உண்டு.
முக்காலத்தில் சுமார் 12 ஆண்டுகள் இந்தப் பகுதியில் மழை பெய்யாமல் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அகஸ்தியர் ஒரு ஆடி அமாவாசை அன்று புனித நீராலும் மலர்களாலும் சாஸ்தாவுக்கு அபிஷேகம் செய்தால் வறட்சி நீங்கும் என்று கூறியதாக வரலாறு உண்டு. காலப்போக்கில் இந்த இடம் தூந்து போனது.
அக்காலத்தில் பொதிகை மலை பகுதிகளில் வணிக வியாபாரம் நடந்து வந்தது. பல ஊர்களில் இருந்தும் மாட்டு வண்டிகளில் வியாபாரிகள் இங்கு ஒன்று கூடி வியாபாரம் செய்து வந்தனர். அப்படி வருகையில் மாட்டின் காலடி பட்டு ஒரு இடத்தில் ரத்தம் கொட்டியது. அந்த இடத்தை தோண்டிப் பார்க்கையில் சொரிமுத்து அய்யனார் மகாலிங்க சுவாமி தென்பட்டதாக வரலாறு உண்டு. அதன் பின்னர் இந்தப் பகுதி சிங்கம்பட்டி ஜமீன்தார் வசம் சென்றது.
இக்கோயில் சுமார் 800 ஆண்டுகள் பழமையானது. முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது போல் இங்கு உள்ள சாஸ்தாவுக்கும் அறுபடை வீடுகள் உள்ளது.
சொரிமுத்து அய்யனார் கோவில், குளத்துப்புழை, அச்சங்கோவில், பந்தளம், ஆரியங்காவு, சபரிமலை என அறுபடை வீடுகள் உள்ளதாக வரலாறு கூறுகிறது. சபரிமலை சாஸ்தா தோன்றுவதற்கு முன்பாகவே சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளது.
எல்லாவற்றுக்கும் இக்கோவில் தலைமை பீடமாகும். ஆடி அமாவாசை அன்று இங்கு லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். பங்குனி உத்திரம் இங்கு கோலாலமாக நடைபெறும். தற்போது இந்த இடம் முண்டந்துறை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
நெல்லையில் இருந்து 45 கிலோமீட்டர், பாபநாசத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடைதிறந்து இருக்கும்.
இங்கு பொம்மக்கா திம்மக்கா, பட்டவராயர், பெரிய தளவாய் மாடசாமி, கரடி மாடசாமி, தூசி மாடசாமி, கச மாடன், மாடத்தி அம்மாள், பிரம்மராட்சி அம்மாள், பேச்சியம்மாள், சுடலை மாடசாமி ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன.
இங்கு வந்து வழிபடுபவருக்கு கஷ்டங்கள் எல்லாம் நீங்கி நிம்மதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. தென் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்குகிறது இந்த சொரிமுத்து அய்யனார் கோவில் என்று சொன்னால் மிகையாகாது.