
அரங்கனுக்காக தன்னுடைய உயிரையே விட்ட இஸ்லாமிய இளவரசியை இன்றும் துளுக்க நாச்சியாராக வழிப்படும் கதை தெரியுமா? அரங்கனின் மீது அளவுக் கடந்த பக்தியை வைத்திருந்த இஸ்லாமிய இளவரசியின் கதையைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பாண்டியர்களை வீழ்த்தி திருவரங்க கோவிலில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆலய உற்சவ மூர்த்தியின் ஐம்பொன் சிலையை கைப்பற்றி டெல்லிக்கு கொண்டு சென்ற மாலிக் கஃபூர் அனைத்தையும் சுல்தானுக்கு பரிசளித்தான். அவற்றில் இருந்த அரங்கனின் சிலை சுல்தானின் மகளான சுரதானியை ஈர்க்க, அவள் அச்சிலையை எடுத்து அதை குளிப்பாட்டி, அலங்கரித்து, உணவளித்து அதனுடன் நேரம் செலவிட ஆரம்பித்தாள். இதுவே மெல்ல நாளடைவில் தன்னையும் அறியாமல் அரங்கனின் மீது காதல் கொள்ள காரணமாகி விடுகிறது.
அந்த நேரத்தில் அரங்கனை மீட்க திருவரங்கத்தில் இருந்து தலைமை பட்டருடன் நாட்டியக் குழு ஒன்று டெல்லியை அடைகிறது. அவர்கள் இசை, நடனம் ஆகியவற்றால் சுல்தானை மகிழ்விக்க, அவர்கள் விரும்பிய பரிசைக் கேட்க சொல்கிறார் சுல்தான். அவர்கள் அரங்கனின் சிலையைக் கேட்க, சுல்தானும் அதை ஏற்றுக் கொண்டு மகள் உறங்கியப் பின்னர் சிலையை எடுத்துக் கொடுத்து விடுகிறார்.
காலையில் கண் விழித்த இளவரசியால் அரண்மனை போர்க்களமாக மாறுகிறது. சிலையை மீண்டும் மீட்டுத் தருமாறு சுரதானி சுல்தானிடம் கேட்கிறார். ஆனால் அவர் அதை மறுத்து விடவே சுரதானி பித்து பிடித்ததுப் போல ஆகிறாள். இதனால் வேறு வழியின்றி சுரதானியுடன் படைகளை அனுப்பி திருவரங்கத்தில் இருந்து சிலையை எடுத்துவர அனுப்பி வைக்கிறார் சுல்தான்.
இந்த தகவலை அறிந்த தலைமை பட்டர் திருவரங்கன் சிலையோடு தலைமறைவாகி விடுகிறார். கோவிலுக்கு வந்த சுரதானி, சிலை இல்லாததால் அரங்கனை நினைத்தவாறே கோவில் வாசலில் உயிர் துறக்கிறார். அப்போது அவளின் உடலில் இருந்து ஒளி கிளம்பி கோவிலின் உள்ளே சென்றது. முகமதியர்களுக்கு உருவ வழிப்பாடு கிடையாது என்பதால், சுரதானியின் நினைவாக, சிலையாக இல்லாமல் சித்திரமாக வரைந்து இன்றும் அவரை வழிப்படுகிறார்கள்.
இன்றும் மார்கழி மாதம் ஏகாதசியை ஒட்டிக் கொண்டாடப்படும் பகல் பத்து நாட்களில் அரங்கனுக்கு காலையில் இஸ்லாமியர்களைப் போல லுங்கி வஸ்திரமாக அணிவிக்கப்பட்டு ரொட்டியும், வெண்ணெய்யும் முதலில் துளுக்க நாச்சியாருக்கு படைக்கப்பட்ட பின்பு அரங்கனுக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.