18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

ஸ்ரீ சோமநாதர்
sri Somanatharhttps://ta.quora.com
Published on

குஜராத் மாநிலம், ஜுனாகட் மாவட்டத்தின் பிரபாச பட்டின கடற்கரையில் சோமநாதபுரம் சிவன் கோயில் அமைந்துள்ளது. இது 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது. இதிகாச, புராண காலத்தில் சோம்நாத்தில் உள்ள கடற்கரை பகுதியை பிரபாச பட்டினம் என்று அழைப்பார்கள். பண்டைய சோம்நாத் நகரத்தின் காலம் கி.மு. 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அகழாய்வுகள் மூலம் கணிக்கப்பட்டுள்ளது.

இத்தல ஜோதிர்லிங்கத்தின் பின்புறம் உள்ள சக்தி அம்மன் 51 சக்தி பீடங்களில் தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த சக்தி பீடமாகும். சந்திரன் சாப விமோசனம் பெற்ற திருத்தலம் இது. இக்கோயிலின் தீர்த்தம் திருவேணி தீர்த்தம் மற்றும் கபில தீர்த்தமாகும். மூலவர் சோமநாதர், அம்மன் பெயர் பார்வதி, சந்திரபாகா.

ஸ்ரீ கிருஷ்ணர் தனது அவதார முடிவின்போது இங்குள்ள பிரபாச பட்டிணத்தில் தங்கியிருந்த காலத்தில் வேடுவனின் கணையால் காலில் தாக்கப்பட்டு இறந்தார் என்று பாகவத புராணம் கூறுகிறது. சோமநாதரின் பழைய கோயில் புதிய கோயிலின் இடதுபுற முகப்பில் உள்ளது.

சோமநாதர் ஆலயம் மிகவும் வரலாற்று சிறப்புமிக்கதாகும். உருவ வழிபாட்டினை எதிர்க்கும் இஸ்லாமிய மன்னர்கள் பல முறை இங்கு படையெடுத்து இக்கோயிலை ஆறு முறை அடியோடு இடித்து தரைமட்டம் ஆக்கினார்கள். கஜினி முகமது, அலாவுதீன் கில்ஜி போன்றவர்கள் இக்கோயிலை இடித்து தரைமட்டமாக்கியதுடன் கோயிலில் இருந்த செல்வங்களையும் அள்ளிச் சென்றதாக வரலாறு கூறுகிறது. ஒவ்வொரு முறையும் இக்கோயிலை இடித்து தரைமட்டம் ஆக்கியவுடன் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டது இக்கோயில்.

ஸ்ரீ சோமநாதர் கோயில்
Sri Somnath Templehttps://www.youtube.com

ஆறாவது முறையாக 1783ல் இந்தூர் நாட்டு அரசி அகல்யாபாய் ஹோல்கர், நாக்பூர் மன்னர், கோலாப்பூர் மன்னர் மற்றும் குவாலியர் மன்னர் ஆகியோர் ஒன்று சேர்ந்து சிதைந்துபோன பழைய சோமநாதபுரம் கோயில் அருகே புதிய சோமநாதபுரம் ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பினர். இன்றும் புதிய சோமநாதர் கோயில் அருகே அகல்யாபாய் போன்றோர் முயற்சி எடுத்து கட்டிய சோமநாதர் ஆலயம் உள்ளது. இங்குள்ள சிவலிங்கம்தான் இஸ்லாமியரிடமிருந்து காப்பாற்றப்பட்டு இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள இனிப்பான ஆரோக்கிய நன்மைகள்!
ஸ்ரீ சோமநாதர்

ஏழாவது முறையாக, அதாவது கடைசியாக துணை பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலும், அப்போதைய உணவு அமைச்சரான கே.எம்.முன்ஷியும் இணைந்து பொதுமக்களிடம் நிதி திரட்டி சோமநாதரின் ஆலயத்தை மீண்டும் கட்டினர். இந்த ஆலயம் 1995ம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா தலைமையில் பொதுமக்களின் வழிபாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

சாளுக்கியர் கட்டடக்கலை வடிவத்தில் புதிதாக கட்டப்பட்ட இக்கோயில் பிரமிடு வடிவத்தில் மிகவும் விசாலமாகக் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் காலை 6 முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும். இக்கோயிலில் அனுமன், விநாயகர், துர்கை, பைரவர், காளி போன்ற பரிவார தெய்வங்கள் உள்ளன. பாண்டவர்கள் காலத்தில் அவர்கள் பலமுறை இங்கு வந்து வாழ்ந்தும் தவம் செய்தும் உள்ளதாகக் குறிப்புகள் கூறுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com