ராஜஸ்தான் மாநிலம், உதய்பூருக்கு வடக்கே 50 கி.மீ. தொலைவில் பனஸ் நதி கரையில் உள்ளது ஸ்ரீநாத் திருக்கோயில். ஸ்ரீநாத் என்பதற்கு, நாதன் இருக்கும் இடத்தின் வாயில் அல்லது நாதனிடம் அழைத்துச் செல்லும் வாயில் எனப் பொருள். பொதுவாக, கோயில் கோபுரத்தில் கலசங்கள்தான் இருக்கும். ஆனால், இந்தக் கோயிலிலோ சுதர்சன சக்கரம் பொருத்தப்பட்டு மணிக்கு ஒரு முறை அதற்கு வாசனை திரவியத்தால் துடைத்து விடுகிறார்கள்.
பிருந்தாவனத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீநாத்ஜியை வைணவ ஆச்சாரியர்களில் முக்கியமானவரான ஸ்ரீமந் நாதமுனிகள் தான் யோக நிலையில் இருந்தபோது பூஜித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஸ்ரீ நாதமுனிகள் நேரில் வந்து தரிசிக்க எண்ணிய கோயில் இது. அவர் வர இயலாத காரணத்தால் அவர் பெயரில், ‘ஸ்ரீநாத் துவாரகை’ என அழைக்கப்படுகிறது.
1665ல் ஔரங்கசீப் மதுராவை தாக்கியபோது1672ல் இங்கு கொண்டுவரப்பட்டது. அந்நிய படையெடுப்பின்போது கோஸ்வாமி தாவோஜி என்பவர் ராணாராஜ் சிங்கின் உதவியுடன் பெருமாளின் விக்கிரகத்தை மாட்டு வண்டியில் எடுத்துக்கொண்டு இந்த ஊருக்கு வந்தாராம். அப்போது சக்கரம் மண்ணில் புதைந்து வண்டி நகர மறுக்கவே, இந்த இடமே இறைவனுக்கு விருப்பம் போலும் என உணர்ந்த தாவோஜி அங்கேயே பெருமாளின் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது.
ஏழு வயது குழந்தையாக இங்கு ஸ்ரீ கிருஷ்ணர் காட்சி தருகிறார். வல்லபாச்சாரியாரின் புஷ்டி மார்க்கம் என்ற சம்பிரதாயத்தில் இக்கோயில் வழிபாட்டு முறை உள்ளது. வல்லபாச்சாரியாரின் மகன் விட்டல் நாத்ஜி இந்த வழிபாட்டு முறையை ஸ்தாபித்தார்.
கோவர்தன மலையை தூக்க இடது கையை தூக்கியதால் விக்ரகம் அவ்வாறே காணப்படுகிறது. இடது கையால் கோவர்தனகிரியை சுமந்தபடியும், வலது கையை இடுப்பில் வைத்தபடியும் தரிசனம் தரும் ஸ்ரீநாத்ஜி கருப்பு சலவை கல்லில் வடிக்கப்பட்ட விக்ரகம் ஆகும். இந்த விக்ரகத்தில் இரண்டு பசுக்கள், இரண்டு மயில்கள், பாம்பு மற்றும் கிளி ஆகியவையும் உள்ளன. இங்கே எம்பெருமாளை குழந்தை கண்ணனாகவே பாவித்து வணங்குகின்றனர். குழந்தையால் நீண்ட நேரம் நிற்க முடியாது என்பதால் ஒவ்வொரு முறையும் 30 நிமிடங்களுக்கு மட்டுமே தரிசனம் தருகிறார். பக்த மீராவுக்கு ஸ்ரீ கண்ணன் அடைக்கலம் அளித்த தலமும் இதுதான்.
காலையிலிருந்து இரவு வரை ஸ்ரீ கிருஷ்ணர் விக்ரகம் பலவாறு அலங்கரிக்கப்படுகிறது. ஆரத்தி இங்கு மிகவும் விசேஷமாகக் காட்டப்படுகிறது. இங்கு தரப்படும் பிரசாதங்கள் மிகவும் பெரியதாக உள்ளன. விலையும் அதிகம்தான். ஸ்ரீநாத்ஜிக்கு அணிவிக்கப்படும் ஆடைகள் தைக்கும் இடம் மாடியில் உள்ளது. வாயில் துணி கட்டிக்கொண்டு (எச்சில் தெறிக்காமல் இருக்க) ஸ்ரீநாத்திற்கு ஆடை தைக்கிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை விதவிதமாக அழகாக உடை மாற்றி விடுகிறார்கள். அதேபோல், பகவானுக்கு மாலையில் அணிவிக்கக்கூடிய மலர் மாலையை தொடுத்து மிக அழகாக வாழை இலையை சுற்றி மூடி வைக்கிறார்கள். பூத்தொடுக்கும் இடம், மாலை கட்டும் இடம், உடைகள் தைக்கும் இடம், பிரசாதம் செய்யும் இடம் ஆகியவற்றை நம்மால் நேரில் சென்று பார்க்க முடிகிறது.
மிக மிக அழகான சுதர்சன சக்கரம் கோபுரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வாசனை திரவியத்தை கொண்டு பஞ்சால் துடைத்து விடுகிறார்கள். சுதர்சன சக்கரம் உஷ்ணம் ஆகிவிடும் எனவும் அதனால் அரை மணிக்கு ஒரு முறை வாசனை திரவியங்களை பஞ்சில் நினைத்து ஒத்தி எடுப்பதாகவும் கூறுகிறார்கள்.