பெருமாளின் திவ்ய திருநாமங்கள் மூன்றும் அவற்றின் பொருளும்!

Thiruvallikeni Sri Parthasarathy
Thiruvallikeni Sri Parthasarathy
Published on

வைகுண்டவாசன் மகாவிஷ்ணுவின் திருநாமங்கள் ஏராளம். ‘பதம் அநுத்தமம்' என்றொரு சொல் உண்டு. ‘பதம்’ என்றால் இடம்; ‘அநுத்தமம்’ என்றால், அதை விட வேறில்லை என்று அர்த்தம். அதாவது, நாம் அடைக்கலம் அடைவதற்கு பரந்தாமன் குடிகொண்டிருக்கிற வைகுண்டத்தை விட  சிறந்த இடம் வேறில்லை என்று பொருள். இவ்வளவு சிறப்பு பெற்ற ஸ்ரீ பகவானின் திவ்யத் திருநாமங்கள் மூன்றின் பொருளை  இப்பதிவில் காண்போம்.

ஸ்வர்ண வர்ணஹா: தரிசிப்போரை சிலிர்த்துப்போகச் செய்யும் பொன்னான திருமேனி உடையவன் ஸ்ரீபகவான். கருமை நிற கண்ணனாக இருந்தாலும் அவனுடைய திருமேனி பொன்னின் நிறத்தைப் போல ஜொலிப்பதால், ‘ஸ்வர்ணம்’ என்றால் பொன், ‘ஸ்வர்ண வர்ணம்’ என்றால் பொன்னின் நிறம் என்ற அர்த்தத்தில்  அவனுக்கு 'ஸ்வர்ண வர்ணஹா' எனும் திருநாமம் அமைந்தது.

சாஸ்திரப்படி மீசை வைத்துக் கொள்ளக்கூடாது என்பார்கள். ஆனால், ஆயர் குலத்தில் பிறந்தவன் என்பதால் மீசை வைத்திருந்தானாம் ஸ்ரீ கண்ணபிரான். 108 திவ்ய தேசங்களில், எத்தனையோ திருக்கோலங்களில் பகவான் திருக்காட்சி தந்தாலும், பெரிய மீசையுடன் ஸ்ரீ வேங்கடகிருஷ்ணனாக, ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளாகக் காட்சி தருவது திருவல்லிக்கேணி திருத்தலத்தில்தான்! சென்னை, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதியின் திவ்யமான மேனியைத் தரிசித்தால், அவன் ‘ஸ்வர்ண வர்ணன்’ என்பதை அறிந்து சிலிர்ப்பீர்கள்.

வீரஹ: 'வீரஹ' எனும் திருநாமத்திற்கு வீரமானவன் என்று அர்த்தம். போஜனப் பாத்திரத்தில் மிச்சம் வைக்கவேண்டும்; தீர்த்தப் பாத்திரத்தில் மிச்சம் வைக்கக்கூடாது என்பார்கள். அதாவது, சாப்பிடுகிற இலையில் மிச்சம் வைத்தால், அவற்றை நாயோ பூனையோ சாப்பிடும். ஆகவே, மீதம் வைக்க வேண்டும். உணவு முடிந்ததும் பக்கத்தில் வைத்திருக்கிற சொம்புத் தண்ணீரை மீதம் வைக்காமல் குடித்தால்தான், அந்தத் தண்ணீரானது உணவைக் கரைக்கவும் செரிக்கவும் வைப்பதற்கு பேருதவி புரியும். சத்ருக்கள் எனப்படும் எதிரிகளை ஒருபோதும் மிச்சம் வைக்கவே கூடாது! எதிரிகளில் மிச்சசொச்சமாக ஒருவரேனும் இருந்துவிட்டால், அவரால் நமக்கு எப்போது வேண்டுமானாலும் தொல்லைகள் நேரலாம்.

ஸ்ரீராமருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கும் உள்ள முக்கியமான வித்தியாசமும் இதுதான்!அதாவது, ஒவ்வொரு முறையும் ஒருவரை மிச்சம் வைத்துக்கொண்டே வந்து, அவர்களால் தொல்லைகளையும் அனுபவித்து, பிறகு அழித்தொழித்தான் ஸ்ரீராமபிரான். எல்லோரையும் அழித்தபோது மாரீசனை மட்டும் விட்டுவிட்டான் ஸ்ரீராமன். பிறகு, அவனால் வந்த விளைவைச் சந்தித்தான். அதேபோல், சூர்ப்பணகையைக் கொல்லாமல், அவள் காது - மூக்கை மட்டும் சேதப்படுத்தி அனுப்பி வைத்தான். அவளும் அழுதுகொண்டே அண்ணனிடம் சென்று முறையிட்டாள்.

இதையும் படியுங்கள்:
கருவிலேயே உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா?
Thiruvallikeni Sri Parthasarathy

இப்படி, எதிரிகளை மிச்சம் வைத்து, அதனால் தொல்லைகளை அனுபவித்த பிறகுதான் அழித்தான் ஸ்ரீராமன். ஆனால் ஸ்ரீகண்ண பரமாத்மா, துரியோதனாதிகள் ஒருவரைக்கூட விடாமல் அழித்தொழித்தான். அதனால்தான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவுக்கு 'வீரஹ' எனும் திருநாமம் அமைந்தது. அப்படி வீரனாக, முறுக்கு மீசை கொண்ட சூரனாக இருந்தாலும், கண்ணனைப் போல கருணையாளன் வேறு எவருமில்லை.

ஹேமாங்கஹ: ஸ்ரீ கிருஷ்ணனுக்கு, 'ஹேமாங்கஹ' எனும் திருநாமம் உண்டு. ஹேமம் என்றால் சுத்தமான, சாத்விகமான திருமேனியைக் கொண்டவன் என்று அர்த்தம். சுத்தமான திருமேனி கொண்ட கிருஷ்ணரை தரிசிக்க  தரிசிக்க அவனையே அனுதினமும் நினைந்துருக உருக நம் மனமும் சுத்தமாகும். நமக்கு உள்ளேயும் சாத்விக குணம் பரவும்! அதனால்தான் 'கண்ணா கண்ணா...' என்றோ, 'கிருஷ்ணா கிருஷ்ணா...' என்றோ நாம் அடிக்கடி உச்சரிக்கிறோம். இதனுடைய பொருள் ‘ஹேமாங்கஹ’ ஆகும்.

அனுதினமும் பெருமாளின் திருநாமங்களை உச்சரித்து வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முயற்சிப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com