இவரைப் போல் கொடுப்பாருமில்லை; கெடுப்பாருமில்லை!

Shani bhagavan
Shani bhagavan

யிலாடுதுறையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் காரைக்காலுக்கு அருகில் உள்ளது திருநள்ளாறு. ‘சனியை போல் கொடுப்பாருமில்லை; கெடுப்பாருமில்லை’ என்பார்கள். ஒருவரது வாழ்வில் நன்மை, தீமைகளுக்கு முக்கியக் காரணமாக சனி பகவான் விளங்குகிறார். சனி தோஷம் இருப்பவர்களும், சனி தசை நடப்பவர்களும் இங்கு வந்து வழிபட்டு நன்மை அடைகிறார்கள்.

நவ கோள்களில் மிகவும் சக்தி வாய்ந்தவர் ஸ்ரீ சனி பகவான். தனக்கென்று தனி ஆதிக்கமும் பெற்றவர். தனது பார்வையினாலேயே நன்மை, தீமைகளுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் வல்லமை பெற்றவர். ஸ்ரீ சனி பகவானுக்கு காக்கையே வாகனமாக சொல்வது வழக்கத்தில் இருக்கிறது. கோயில்களில் உள்ள விக்கிரகங்களிலும் காகத்தையே வாகனமாக அமைத்திருக்கிறார்கள்.

சனி தாமத குணம் உடையவர். மேற்கு திசைக்கு உரியவர். இவருக்கு பிரியமான உலோகம் இரும்பு, தானியம் எள். மலர் கருங்குவளை. சுவை கசப்பு. இவருக்கு 'ஜடாதரன்' என்ற பெயர் இருப்பதால் சடை உடையவர் என்று தெரிகிறது. எள் கலந்த உணவிலும், நல்லெண்ணெய் விளக்கிலும் மிக்க விருப்பம் உடையவர். இவரை வழிபட்டு இவருடைய அருளுக்கு உரியவர்களானால் நீண்ட ஆயுளுடன் வாழலாம். சனி பகவானை பற்றி பெரும்பாலோர் தவறான கருத்துக்களுடன் உள்ளனர்.

சனி பகவானால் கஷ்டம் வரும்போதுதான் அவரை வணங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மற்ற நேரங்களில் இவரைப் பற்றி நினைப்பது கூடாது என்றும் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். நித்ய ஆராதனைகளில் இவரை சேர்ப்பதும் இல்லை.

ஒருசிலருக்கு கோபம் ஏற்படும்போது இவர் பெயரை உச்சரித்து, ‘சனியனே’ என்று ஏளனமாக முகம் சுழித்துக் கடிவதும் உண்டு. இது மாதிரியான கருத்துக்களை இனி மாற்றிக்கொண்டு தினமும் ஸ்ரீ சனி பகவானை வழிபாடு செய்து வந்தால் இவரால் ஏற்படும் துன்பங்கள் விலகி மங்கலம் உண்டாகும். மாறாக, அவரை அவமதித்தால் ஏற்படும் துன்பங்களைப் பற்றிய கதையை கீழே காணலாம்.

அதற்கு முன்பாக, ஸ்ரீ சனீஸ்வரர் அருள் பெற திருநள்ளாறு செல்லும் பக்தர்கள் அங்குள்ள நள தீர்த்தக் குளத்தில் குளிப்பதற்கு முகம் சுழிப்பதை பார்க்க முடிகிறது. ஏனென்றால் அங்கு பரிகாரம் செய்ய வருபவர்கள் குளித்துவிட்டு குளக்கரையில் உடைகளை அப்படியே அவிழ்த்து போட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். ஆதலால் குளக்கரை அசுத்தமாக இருப்பதால், அங்கு குளிக்காமல் நீரைத் தலையில் தெளித்து கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். இதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. மேலும், மக்கள் அங்கு குளிக்கும்போது அவர்களின் உடைமைகளை கொள்ளையடித்துச் செல்லும் திருடர்களும் அதிகம் இருப்பதைக் காண முடிந்தது. இதனாலும், பக்தர்கள் துணிகளை ஒரு ஓரமாகக் கூட ஒதுக்கி வைக்காமல் அவசரகதியில் உடையை அப்படியே விட்டு விட்டு வந்து விடுகிறார்கள். பரிகாரம் செய்பவர்கள் இதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருந்தால், குளக்கரையின் சுகாதாரம் மேம்படும். அனைவரும் அச்சமின்றி குளிக்கலாம். பரிகாரத்தையும் முழு மனதுடன் செய்த திருப்தி கிடைக்கும்.

இனி, ராவணன் சனி பகவானை அவமானப்படுத்தியதால் அவனுக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் காண்போமா?

தனது பராக்கிரமத்தை விளம்பரப்படுத்திக்கொள்வதில் ராவணனுக்கு எப்போதும் ஆசை உண்டு. அந்த வகையில் தான் வெற்றி கொண்ட பல தேவர்களை தனது அடிமைகளாக வைத்திருந்தான். அவர்களில் குறிப்பாக மிகவும் அவமானப்பட்டவர்கள் நவக்கிரகங்கள். ஆமாம், அவர்களை தன்னுடைய சிம்மாசனப்படிகளில் குப்புறப் படுக்க வைத்து, அவர்கள் மீது கால் வைத்து ஏறிப் போய்த்தான் தனது அரியணையில் அமர்வான். அவனது அராஜகத்தை அழிக்க வேண்டும். செய்யும் பாவங்களுக்கெல்லாம் அவன் உரிய தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று மனசுக்குள் பலரும் சபித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரான முக்காலமும் அறிந்த நாரதர் அவன் வதைபட வேண்டிய காலம் வந்துவிட்டதை செயலாக்கவும் துணிந்தார். ராவணனிடம் சென்று, "நீ மிகப்பெரிய வீரன் உனது எதிரியை நீ எளிதில் வென்று விடுவாய், அவ்வாறு உன்னால் தோற்கடிக்கப்பட்டவர்கள் உனக்கு அடிமையாக சேவகம் செய்கிறார்கள். ஆனால் நவக்கிரகங்களை குப்புறப் போட்டு அவர்களுடைய முதுகில் ஏறிச் செல்வது உண்மையான வீரமா என்ன? அவர்களுடைய நெஞ்சில் மிதித்து செல்வதுதானே சரியான வீரனுக்கு அழகு?" என்று கேட்டு அவனைச் சிந்தை தடுமாற வைத்தார்.

இதையும் படியுங்கள்:
பக்தி கதை: பர தத்துவம் என்றால் என்ன?
Shani bhagavan

'அதுவும் சரிதானே' என்று யோசித்த ராவணன், உடனே நவக்கிரகங்களை நெஞ்சைக் காட்டி படுக்கச் செய்தான். அவர்கள் நெஞ்சில் கால் பதித்து ஏறிச் சென்றான். அவ்வளவுதான். சனியின் பார்வை அவன் மீது பட்டது. விளைவு?

சிறிது நேரத்தில் அங்கே சூர்ப்பனகை வந்தாள். தான் கண்ட சீதையின் அழகை பலவாறாக வர்ணித்தாள். தான் ராம சகோதரர்களால் அவமானப்படுத்தப்பட்டதை கோபத்துடன் சொன்னாள். ராவணனின் அழிவு ஆரம்பம் ஆயிற்று.

ஆதலால் நவக்கிரகங்களை எப்பொழுதும் பயபக்தியுடனும், அவற்றை தொடாதவாறும், அவற்றின் கீழே விழுந்து வணங்காதபடியும் வழிபட்டு நன்மை அடைவோமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com