ரோக விமோசனப் பெருமானாக அருளும் தில்லை விடங்கேஸ்வரர்!

ரோக விமோசனப் பெருமானாக அருளும் தில்லை விடங்கேஸ்வரர்!

பூலோகக் கயிலாயம், இதயக் கமலம், ஆகாய ஸ்தலம், தரிசிக்க முக்தி தரும் ஸ்தலம் என பல்வேறு சிறப்புப் பெயர் பெற்ற ஆடலரசன் எம்பெருமான் ஸ்ரீ நடராஜர் அருளும் தில்லைப் பதியின் ஈசான திசையிலும், புகழ் பெற்ற தில்லைக் காளியின் கடைக்கண் பார்வையிலும் அமைந்துள்ளது தில்லை விடங்கேஸ்வரர் திருக்கோயில்.

தில்லை விடங்கேஸ்வரர் பற்றி நான்கு வருணத்தார்கள் இசை பாடியதால் வான் வழியே சென்ற வருண பகவான் கீழே இறங்கி வந்து வணங்கியதால், ‘வருணாபுரி’ என்றும், விடங்க முனிவருக்கு மோட்சம் கொடுத்ததால், ‘தில்லை விடங்கன்’ என்ற பெருமைக்குரிய அந்த கிராமத்தில் சிவனுக்கு சிறிய கோயில் கட்டி, ‘விடங்கேஸ்வரர்’ எனப் பெயர் சூட்டி வழிபாடு நடத்தியுள்ளார்.

கிழக்கு நோக்கிய வாயில், நுழைவு வாயில் முன் இடப்பக்கம் தல விருட்சம் வில்வ மரம் உள்ளது. அதன் அருகில் நவக்கிரக மண்டபம் ஒரு கலசத்துடன் காட்சி தருகிறது. மகா மண்டபம் நுழைவு வாயில் முன் அமர்ந்த நிலையில் நந்தியும், அருகில் பலி பீடமும் உள்ளன. மகா மண்டபத்தில் 100 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். தெற்கு நோக்கி அம்பாள் பர்வதாம்பாள் அருள்பாலிக்கிறார்.

வலதுபுறம் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியரும், இடதுபுறம் வினாயகரும் அருள்பாலிக்கின்றனர். வடக்கு திசை பார்த்து ஒரே நேர்க்கோட்டில் சமயக் குரவர்களும், மேற்கு திசை நோக்கி சனி பகவான் மற்றும் சூரியன், சந்திரன், பைரவர் ஆகியோர் ஒரே நேர்க்கோட்டில் அருள்பாலிக்கின்றனர். உள் பிராகாரத்தில் ருத்ராட்ச பந்தலுக்கும் கீழ் மூலவர் விடங்கேஸ்வரர் அருளே வடிவாய் காட்சி தருகிறார். வெளி பிராகாரத்தில் தெற்கு நோக்கிய வண்ணம் தட்சிணாமூர்த்தியும், மேற்கு திசை நோக்கி லிங்கோத்பவரும், வடக்கு திசை பார்த்து துர்கையும், தெற்கு நோக்கி சண்டிகேஸ்வரரும் அரும்பாலிக்கின்றனர்.

சகலவிதமான ரோக விமோசனப் பெருமானாக விளங்கும் பர்வதாம்பிகை சமேத விடங்கேஸ்வரர், கல்வி, குழந்தைப்பேறு அருளுவதோடு, திருமணத் தடையையும் நீக்கி அருள்கிறார்.

அமைவிடம்: சிதம்பரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள கிள்ளை அருகே இந்தக் கோயில் அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com