திருச்செந்தூர் தல புராணம் அரங்கேறிய கதை தெரியுமா?

திருச்செந்தூர் முருகன் கோயில்
திருச்செந்தூர் முருகன் கோயில்
Published on

திருச்செந்தூர் முருகன் கோயில் மடைப்பள்ளியில் பணியாற்றிய பக்தர் ஒருவர் முருகப்பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். முதுமையின் காரணமாக நெய்வேத்தியத்திற்கு உண்டானதை அவரால் நேரத்துக்குத் தயாரித்துக் கொடுக்க முடியவில்லை. அதனால் ஆலய அர்ச்சகர்கள் பல முறை அவரிடம் கோபம் கொண்டு திட்டுவது வழக்கமாக இருந்தது.

அந்த முதியவரோ, முருகனிடம் தனது இயலாமை குறித்து புலம்பி அழுவது வழக்கம். ஒரு நாள் அவர் மிகவும் தாமதமாக உணவு சமைத்துக் கொடுக்கவே, அர்ச்சகர் கோபத்தில் அவரை கடுமையாகத் திட்டிவிட்டார். இதனால் மனம் வருந்திய முதியவர் தனது உயிரை மாய்த்துக்கொள்வது என முடிவு செய்து கடலுக்குள் இறங்கினார். அப்போது, ‘‘நில்லுங்கள்’’ என குரல் கேட்க, சமுத்திரத்தில் நின்றவாறு திரும்பிப் பார்த்தார். கரையில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அவன் முதியவரிடம், ‘‘உடனே கரைக்குத் திரும்பி வாருங்கள்’’ என அழைத்தான். அதோடு முதியவரிடம், ‘‘கடலில் மூழ்கி உயிரை விடும் அளவிற்கு உங்களுக்கு அப்படி என்ன கஷ்டம் வந்துவிட்டது’’ என்று அச்சிறுவன் முதியவரிடம் கேட்க, முதியவர் அவனிடம் தனது கவலைகள் அனைத்தையும் சொல்லி அழுதார். ‘‘இதற்காக யாராவது உயிர் துறப்பார்களா?’ என்று சிறுவன் சிரித்தான்.

“உங்களுக்கு வேறு பணி இருக்கும்போது எதற்காக மடைப்பள்ளியில் வேலை பார்க்கிறீர்கள்” என்றான் சிறுவன். அதற்கு முதியவர், “எனக்கு சமையலைத் தவிர வேறு பணி எதுவும் தெரியாது குழந்தாய்” என வருத்தத்துடன் சொன்னார். “நீங்கள் திருச்செந்தூரில் பல காலங்களாக இருக்கிறீர்களே, இந்தத் தலத்தின் தல புராணத்தை எழுதினால் என்ன?” என்றான் சிறுவன். அதற்கு முதியவர், “பள்ளிக்கூடம் கூட போகாத எனக்கு கல்வியறிவு கொஞ்சமும் இல்லை. என்னால் எப்படி இது சாத்தியமாகும்” என்றார் முதியவர். “மனத்தால் நினைத்தால் இதெல்லாம் சாத்தியமே. நீங்கள்தான் இந்த தல புராணத்தை எழுத வேண்டும் என்று செந்தில் ஆண்டவனும் விரும்புகிறான். இதோ அதற்கான ஊதியத்தைப் பிடியுங்கள்” என்று ஒரு பண முடிப்பை அவர் கையில் வைத்தான் சிறுவன்.

“இனி, நீங்கள் சமையல் பணியாளர் இல்லை. இன்று முதல், ‘வெற்றிமாலை கவிராசர்’ என்று அழைக்கப்படுவீர்கள்” என்று சொல்லி விட்டு அச்சிறுவன் மறைந்தான். ‘வந்த சிறுவன் முருகனோ? உயிர் மாய்வதை நிறுத்தவே முருகன் வந்து மறைந்தானோ? என்று முதியவர் ஒன்றும் புரியாமல் குழம்பினார். பிறகு மனத் தெளிவு அடைந்த முதியவர் கிருஷ்ண சாஸ்திரி என்பவரை போய் பார்த்தார். அவரிடம் செந்தில் ஆண்டவன் திருத்தல தல புராணத்தை சொல்லும்படி கேட்டு அதை நூலாகவும் எழுதினார். அந்நூலை அரங்கேற்றம் செய்ய அர்ச்சகர்களை நாடினார். முருகன் தனக்குக் காட்சி தந்ததையும், அவர் சொல்லியபடி தாம் இந்த நூல் இயற்றியதையும் அர்ச்சகர்களிடம் கூறினார்.

இதையும் படியுங்கள்:
இயற்கை எழில் கொஞ்சும் பூமி தேனி மாவட்டம்!
திருச்செந்தூர் முருகன் கோயில்

அங்கிருந்த அர்ச்சகர்கள் யாரும் இதை நம்பவில்லை. மாறாக, அவரை கேலி செய்து கோயிலில் இருந்து விரட்டி விட்டனர். கோயிலை விட்டு வெளியேறிய கவிராசர், மனம் நொந்து, தாம் இயற்றிய நூலை குமரிக் கடலில் வீசிவிட்டார். கடலில் விழுந்த கவிராசர் நூல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு திருச்செந்தூருக்கு அடுத்த கிராமத்து கடற்கரையில் கரை ஒதுங்கிக் கிடந்தது. அந்த ஊரில் வசித்து வந்த அறிஞர் ஒருவர் காலார கடற்கரையில் நடந்து வந்தபோது அவரது கண்களில் அந்நூல் பட்டது. அதை எடுத்துப் பிரித்துப் பார்த்த அவர், வியந்துபோனார். ‘எவ்வளவு சிறப்பான நூல். இது கடலில் கிடந்து கசங்குகிறதே’ என்று நூலை செந்தில் ஆண்டவர் கோயிலுக்குள் கொண்டு சென்று அர்ச்சகர் முன்பு படித்துக் காட்டினார். நூலின் முடிவில், அந்நூலை எழுதியது வெற்றிமாலை கவிராயர் எனக் குறிப்பு இருந்ததைப் பார்த்து அச்சகர்கள் அனைவரும் வியந்து போயினர்.

அதன் பிறகு கவிராயரை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வந்த அச்சகர்கள், “உங்களிடம் அவமதிப்புடன் நடந்து கொண்டதற்கு முதலில் எங்களை பெருந்தன்மையுடன் மன்னிக்க வேண்டும்” எனக் கேட்டு  தகுந்த மரியாதை செய்தனர். பிறகு செந்தில் ஆண்டவர் முன்னிலையில்  திருச்செந்தூர் தல புராணம் அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இப்படித்தான் திருச்செந்தூர் தல புராணம் அரங்கேறியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com