திருஞானசம்பந்தர் கூறும் மனையியல் மாண்பு!

திருஞானசம்பந்தர் கூறும் மனையியல் மாண்பு!

டவுளர்களை தம்பதியராக சித்தரிப்பது நமது கலாச்சாரப் பண்பு. தேவாரப் பதிகங்களில் மனையியல் மற்றும் பெண்மையின் மாண்புகள் விரவி இருக்கின்றன. மனை வாழ்க்கையில் பெண்ணின் முக்கியத்துவம் அளப்பரியது. அவள் பெயரே ‘இல்லாள்.’ இல்லத்தை ஆள்பவள் என்று பொருள். இல்லத்தை என்பது வீட்டையும் வீட்டிலுள்ள மனிதர்களையும் குறிக்கும். ஆள்பவள் என்றால் இணக்கமாக இருந்து, அன்பால் பாதுகாப்பவள் என்றும் உட்பொருள் புதைந்துள்ளது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருக்கிறாள். அவளிடம் அவன் தனது திறமைகளையும், பாசத்தையும், வீரத்தையும், இணக்கத்தையும் வெளிப்படுத்த வேண்டும். அதற்கும் அவளே ஊக்கம் அளிக்க வேண்டும்.

இறைத் தம்பதிகளான கயிலைநாதனும் உமா தேவியும் இந்த சீரிய மனையியல் பாங்குக்கு ஏற்ப இருந்திருக்கிறார்கள். சமயக் குரவருள் இளையவரான திருஞானசம்பந்தர் யாழினும் நன்மொழியாள் பார்வதியிடம் ஞானப்பால் உண்டவர். ‘தோடுடைய செவியன்’ என்று தொடங்கிய தனது முதல் பாடல் தொட்டு பல பாடல்களில் சிவபிரானையும் அன்னை பார்வதியையும் சேர்த்தே பாடி இருக்கிறார். அவர் பாடல்களில் காணப்படும் மனையியல் பற்றிய தகவல்களில் தற்கால மனையியல் மற்றும் உளவியல் கோட்பாடுகள் பொதிந்துக் கிடக்கின்றன.

தலைவனுக்கு நல்லவள், தலைவனுக்கு உதவி செய்பவள், அவன் நினைவாக இருப்பவள் என்றெல்லாம் சொற்றொடர்கள் இருக்கின்றன. இவை எல்லாமே மனையியல் மாண்புகள்தானே! அகத்தின் அழகு முகத்தில் தெரியும். தன்னைப் பற்றியும், கணவன் குடும்பத்தை பற்றியும், நல்ல எண்ணம் இருந்தால் முகம் ஒளிரும் அல்லவா! மலர்ந்த முகம்  கொண்ட மாதர்கள் என்ற சொற்றொடர் இதையே குறிக்கிறது.

கணவன் மனைவியரிடையே நல்ல இனிமையான மொழிகளும், ஆக்கப்பூர்வமான பேச்சுகளும் நீண்ட கால திருமண வாழ்வுக்கு அடிகோலும். இதை ஒட்டியே பாலொத்தனைய மொழியாள், தேனை வென்ற மொழியாள், மனதுக்கு தூய அழகிய சொல் உடையவள் என்றெல்லாம் உமையம்மை உருவகப்படுத்தப்படுகிறாள்.  அன்பிற் பிரியாத உமையவள் என்ற சொல் எத்தனை இதமான இணக்கத்தைச் சுட்டுகிறது! தம்பதியராகச் சித்தரிக்கப்படும் கடவுளர்களிடம் சிறந்த காதலும் இருந்திருக்கிறது. ‘முயங்கு மடலாளைப்  பாகமாக  வைத்த’ என்ற பாடல் வரி இதனைப் புலப்படுத்துகிறது.

தலைவி காணத் தலைவன் தன் தோள் வலிமையைக் காட்டும் மனிதருக்கேயுண்டான அகப்பொருள் கூறு கடவுளர்களிடமும் ஏற்றிக் கூறப்பட்டுள்ளது. ‘காரிகை காணத் தனஞ்செயன்றன்னைக் கறுத்தவற்களித்துடன் காதல் செய் பெருமான்’ என்ற வரி மனையாள் பார்க்க சிவனார் வீரத்தை வெளிப்படுத்தியதைக் குறிக்கின்றன.

ஒருவர் குணங்களை மற்றவரும் ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு அசைவிலும் இணைந்திருப்பது தம்பதியர் கடமையல்லவா? புலித்தோல் ஆடையாக பூதக்கணங்கள் புடைசூழ ஏற்றுப்பாடும் ஈசனை ஏற்றுத் தானும் பாடுகிறாள். ஊழிக் காலத்தில் நடனமாடும் சிவனுடன் தானும் இணைந்து ஆடுகிறாள். தனது உடலின் பாதியை உமைக்கு அளித்தார் தென்னாடுடைய சிவன்! இதனால், ‘வேயுறு தோளி பங்கன்’ என்று அழைக்கப்படுகிறார். உமையொரு பாகன் தன் மனையாளோடு உடலாலும் ஒன்றியிருக்கிறார். ‘இரு வேறு உருவுடைய ஓர் உருவாய் திகழ்கிறார் சிவபெருமான்’ போன்ற வரிகள் கணவன் மனைவியர் உணர்வாலும் ஒன்றியிருப்பது புலப்படுத்தப்பட்டுள்ளது.

பல இடங்களில் உமையம்மையை முன்னிறுத்தியே சிவனைப் பாடுகிறார் ஞானசம்பந்தர். ‘மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன்’ போன்ற வரிகளால் இதை அறியலாம். கணவன் சொல்லை மீறி, தட்சனின் வேள்விக்குச் சென்றாள் தாட்சாயிணி. அங்கே கணவனுக்கு இழி சொல் என்றதும் தன் இன்னுயிரையே ஈந்தாள். அந்தத் தக்கனையே அழித்தார் சிவபெருமான். இக்கருத்தின் வழி கணவன் மனைவியிடையே இருக்க வேண்டிய ஒற்றுமை புலப்படுகிறது.

இதனால் பெண் அடங்கிப் போக வேண்டும். கணவனுடைய பேச்சுக்கு கீழ்படிய வேண்டும் என்றெல்லாம் பொருள் அல்ல. ஒருவர் கருத்தை மற்றவர் மதித்து விட்டுக்கொடுத்து நற்செயலுக்கு துணை நின்று பாராட்டி வாழ்க்கை வண்டியை இழுத்தால் அது ஒரு மகிழ்ச்சியான அமைதியாக பயணமாக இருக்கும். குடும்ப வன்முறையாலும் கருத்து வேறுபாடுகளாலும் நீதிமன்றத்தின் படியேறும் இன்றைய தம்பதியினருக்கான மனையியல் கோட்பாடுகளை அன்றே செம்மொழியாம் தமிழில் தேன்சுவைப் பதிகங்கள் மூலம் கூறி வைத்துவிட்டார் ஞானசம்பந்தர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com