திருமாலை அறியாதார் திருமாலை அறியார்!

Thirumalai Ariyaathaar Thirumalai Ariyaathaar
Thirumalai Ariyaathaar Thirumalai Ariyaathaar
Published on

‘மாதங்களில் நான் மார்கழி’ என்று மார்கழியின் சிறப்பை உணர்த்தினார் கிருஷ்ண பரமாத்மா. ‘மன்னியசீர் மார்கழியில் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தார் தொண்டரடிப்பொடியாழ்வார். இறை பக்தியில் ஆழ்ந்து இருப்பவர்கள் ஆழ்வார் என்று போற்றப்படுகின்றனர். ஆழ்வார் என்பது பொதுப் பெயராக இருந்தாலும், வைஷ்ணவத்தை பாசுரங்களின் வழியாகப் பரப்பிய பன்னிருவரை ஆழ்வார்கள் என்று குறிப்பிடுகிறோம்.

தொண்டரடிப்பொடியாழ்வாரின் இயற்பெயர் விப்ரநாராயணர். 8ம் நூற்றாண்டில், கும்பகோணம் அருகில் மண்டங்குடி என்ற ஊரில், மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில், அந்தணர் மரபில் பிறந்தவர். செல்வக் குடும்பத்தில் பிறந்த விப்ரநாராயணர், திருவரங்கத்துப் பெருமாளினால் ஈர்க்கப்பட்டு, திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து, இறைவனுக்கு மாலை தொடுத்துத் தருவதையே இறைத் தொண்டாக ஏற்றுக் கொண்டார்.

‘இறைவன் பணியே எனது கடன்’  என்றிருந்த விப்ரநாராயணரைப் பார்த்த தேவதேவி என்ற தேவதாசிப் பெண் அவரது அழகில் மயங்கினாள். ‘இறைத் தொண்டில் இருக்கும் அவர், உன்னிடம் மயங்க மாட்டார்’ என்றாள் அவளது தமக்கை. தன்னுடைய அழகில் கர்வம் கொண்ட தேவதேவி, ‘அவரை மயக்கி என்னுடைய காலடியில் விழ வைக்கிறேன்’ என்று சபதம் செய்தாள். அரங்கனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும், பூப்பறித்து, மாலை தொடுத்து உதவுவதாகவும் விப்ரநாராயணனை அணுகினாள் தேவதேவி.

ஒரு நாள், தேவதேவி நந்தவனத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்தபோது, பெருமழை பெய்தது. மழை பெய்து கொண்டிருந்ததால் தன்னுடைய வீட்டில் இடமளித்து, மாற்று ஆடையை அவளிடம் கொடுக்க, அப்போது ஏற்பட்ட ஸ்பரிசத்தால் தன்னை இழக்கிறார் விப்ரநாராயணன். இறைவனுக்கு மாலை தொடுப்பதை மறந்து தேவதேவியின் வீட்டில் வசிக்கிறார். அவளுடைய அழகில் மயங்கி, தன்னுடைய சொத்தை இழக்கிறார். சொத்தைப் பறிகொடுத்த விப்ரநாராயணனை, தேவதேவியின் தாயார், வீட்டை விட்டுத் துரத்த, போகுமிடமின்றி தேவதேவியை மறக்க முடியாமல் தடுமாறுகிறார் விப்ரநாராயணன்.

தன்னுடைய பக்தனின் மாயையைக் கலைக்க அரங்கநாதர், வேலையாள் போன்று தேவதேவி வீட்டிற்குச் சென்று, “என்னுடைய பெயர் அழகிய மணவாளன். விப்ரநாராயணன் இந்த தங்கப் பாத்திரத்தை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்” என்று பெரிய தங்கப் பாத்திரத்தைக் கொடுத்துச் செல்கிறார். தேவதேவி, விப்ரநாராயணரைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துக் கொள்கிறாள். அரண்மனையில் தங்கப் பாத்திரத்தைக் காணவில்லை என்றதும், அது தேவதேவி வீட்டில் இருப்பது தெரிந்து, திருட்டுக் குற்றத்திற்காக தேவதேவியும், விப்ரநாராயணரும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அன்றிரவில், அரசனின் கனவில் தோன்றிய அரங்கநாதர், நடந்ததைக் கூற, இருவரும் விடுவிக்கப்படுகின்றனர்.

தன் பொருட்டு அரங்கன் செய்த திருவிளையாடலை அறிந்த விப்ரநாராயணர், மாயை நீங்கி, இறைத்தொண்டே என்னுடைய பணி என்று தன்னுடைய பெயரையும் ‘தொண்டரடிப்பொடி’ என்று மாற்றிக்கொள்கிறார். இந்தக் கதைக்கு சரித்திரச் சான்றுகள் இல்லை. ஆனால், திருவரங்கனைப் பற்றி இவர் எழுதிய, ‘திருமாலை’ என்ற தொகுப்பில், ‘பெண்டிரால் சுகங்களுய்ப்பான் பெரியதோரிடும்பை பூண்டு’ (876) ‘மாதரார் கயற்கணெண்னும் வலையுள் பட்டழுந்துவேனை’ (887) என்ற வரிகளின் அடிப்படையில் இந்தக் கதைகள் தோன்றியிருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீவில்லிபுத்தூர் மார்கழி நீராட்டு உத்ஸவம்!
Thirumalai Ariyaathaar Thirumalai Ariyaathaar

‘திருமாலை’ தொகுப்பில் மொத்தம் 45 பாடல்கள். புரிந்துகொள்ள எளிதான தமிழ் நடை.  ‘பச்சைமா மலைபோல் மேனி’ (873) பாடலில், ‘உன்னைத் துதிக்கும் பணியில் பெரும் இன்பம், அதை விடுத்து, இந்திரலோகம் ஆளுகின்ற பதவி கிடைத்தாலும் வேண்டேன்’ என்கிறார். எனக்கு அரங்கனைத் தவிர வேறு எவரும் இல்லை எனப் பொருள் தரும், ‘ஊரிலேன் காணியில்லை’ (900) மற்றொரு கருத்தாழம் கொண்ட பாசுரம். எனக்கு மறுபிறவி வேண்டாம் என்பதற்கு ஆழ்வார் சொல்லும் காரணம் வித்தியாசமானது. ‘வேதநூல் பிராயம் நூறு’ (874) என்று தொடங்கும் இந்த பாடலின் கருத்து. வேதங்கள் மனிதனுக்கு நூறு வயது என்று கூறுகின்றன. இதில் பாதியும் உறக்கத்தில் போய் விடும். மீதியில் 15 ஆண்டுகள் பால பருவம். மீதியுள்ள ஆண்டுகளில் நோய், பணி, மூப்பு, துன்பம். ஆகவே பிறவி வேண்டேன். திருமாலை தொகுப்பில் உள்ள பாசுரங்களின் கருத்தாழம், பக்தி, இறைவனிடம் சரணாகதி ஆகியவற்றால், ‘திருமாலை அறியாதோர் திருமாலை அறியார்’ என்ற சொல்லாடல் உருவானது.

திருவரங்கனைத் துயிலெழுப்ப பத்துப் பாடல்கள் அருளியுள்ளார் தொண்டரடிப்பொடியாழ்வார். ‘கதிரவன் குணதிசைச்சிகரம் வந்தணைந்தான்’ (917) என்று தொடங்கும் இந்த திருப்பள்ளியெழுச்சியில் எல்லாப் பாசுரங்களும் ‘அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே’ என்று முடிகின்றது. இவருடைய திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் அழகான சுப்ரபாதம்.

தொண்டரடிப்பொடியாழ்வார் எழுதியது மொத்தம் 55 பாடல்கள். ஆனால், ஒவ்வொன்றும் இரத்தினம் என்று சொல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com