
அழகர்மலை திருத்தலம் மதுரைக்கு வடக்கே 21 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இது கிழக்கு மேற்காக 18 கி.மீ. நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது. அதிலிருந்து பல சிறிய மலைகள், நாலா பக்கமும் பிரிந்து போகின்றன. இதன் தென்புறத்தின் அடிவாரத்தில்தான் அழகர்கோயில் இருக்கிறது. இதில் அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் அருள்பாலிக்கிறார். இதற்கு திருமாலிருஞ்சோலை, உத்யான சைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி, விருஷபாத்ரி அல்லது இடபகரி முதலிய பல பெயர்கள் உண்டு. அழகர்கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்று. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும். இந்த மலையில் முதலில் காவல்தெய்வமாகப் பதினெட்டாம்படி கருப்பண சுவாமியும், மலையடிவாரத்தில் கள்ளழகரும், மலைமேல் பழமுதிர்சோலையும், மலையின் உச்சியில் நூபுர கங்கை தீர்த்தமும், ராக்காயி அம்மன் கோயிலும் அமைந்துள்ளன.
மூலவர் தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்துகொண்டே இருக்கும். மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் இங்கு அமர்ந்தக் கோலத்தில் காட்சித் தருகிறார். பஞ்சாயுதம் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள்) தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மூலவர் சுந்தரராஜபெருமாளுக்கு தைலப் பிரதிஷ்டை எனும் தைலக்காப்பு நடப்பது மிகவும் சிறப்பானதாகும். இது தை அமாவாசை முதல் ஆடி அமாவாசை வரையிலான 6 மாத காலத்துக்கு நடைபெறும். இந்த தைலப் பிரதிஷ்டை நடைபெறும் காலங்களில் பக்தர்கள் உத்ஸவரை மட்டுமே வழிபட அனுமதிக்கப்படுவார்கள்.
பொதுவாக, பெருமாள் கோயிலில் பெரிய திருவிழாவிற்கு முன்பாக கொடியேற்றம் செய்வது வழக்கம். கோயிலில் ஆடி மாத பிரம்மோத்ஸவம் சமயத்தில் கொடியேற்றம் நடைபெறும். ஆனால், மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்ற ஒன்று. ஆனால், அதற்கு கொடியேற்றம் கிடையாது. சுவாமிக்கு நூலால் ஆன காப்பு கட்டி விழா துவங்குகிறது.
பெருமாள் கோயில்களில் பெரும்பாலும் குங்குமம் பிரசாதம் தரப்படும். ஆனால், இங்கு மூலவர் கள்ளழகரின் வலது புறம் தனிச் சன்னிதியில் கல்யாண சுந்தரவள்ளி தாயார் அருள்பாலிக்கிறார். திருமணத்தடை நீக்கும் இத்தாயரை வேண்டினால் திருமணத் தடை நீங்கும், திருமணமான பெண்கள் வேண்டினால் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பது நம்பிக்கை. இத்தாயார் சன்னிதியில் இதற்காக கஸ்தூரி மஞ்சள் பிரசாதம் தரப்படுகிறது. வருடத்தில் இரண்டு முறை மட்டுமே சுந்தரவள்ளி தாயார் அவரது சன்னிதியை விட்டு வெளியே செல்கிறார். திருக்கல்யாண தினமான பங்குனி உத்திரத்தன்று, கனு உத்ஸவ தினமான மாட்டுப்பொங்கலன்று நாராயண வாவி தீர்த்ததிற்கு வெளியே வருகிறார்.
இக்கோயிலில் இரண்டரை அடி உயரத்தில் அபரஞ்சி எனும் அரிய தங்கத்தாலான திருமால் சிலையொன்று, ‘ஏறுதிருவுடையான்’ என்ற பெயரோடு இன்றும் உள்ளது. அழகருடைய திருமஞ்சனத்துக்கு மட்டும் தினந்தோறும், 2 மைல் தூரத்தில் உள்ள நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது. சைத்ரோத்ஸவ காலத்தில் அழகர் மதுரைக்கும், வண்டியூருக்கும் போய்த் தங்கி இருப்பார். அப்போதும் கூட நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வந்துதான் அவருக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. வேறு தீர்த்தத்தில் அழகரை நீராட்டினால், அவர் உருவம் கருத்து விடுகிறது என்பதாலேயே இப்படிச் செய்யப்படுவதாக கூறுகிறார்கள்.
அழகர் கோயிலில் ‘அக்கார அடிசில் ' எனும் நைவேத்தியம் வருடத்தில் ஒரு நாள் படைக்கப்படுகிறது. இது, ஸ்ரீ ரங்கம் ரங்கநாதரை தான் திருமணம் செய்தால் அழகர்மலை சுந்தரராஜப் பெருமாளுக்கு அக்கார அடிசல் படைப்பாக ஆண்டாள் வேண்டிக்கொண்டார். அவர் அதை நிறைவேற்றத் தவறியதை அவரது அண்ணன் ஸ்தானத்தில் இருந்து இராமானுஜர் 100 அண்டா அக்கார அடிசல் படைத்தை நினைவு கொண்டு ஒரு அண்டா அக்கார அடிசல் செய்து அதை 100 பாகமாக தற்போது பிரித்து படைக்கப்படுகிறது. இது பால், பச்சரிசி, கற்கண்டு, முந்திரி, பாதாம், பிஸ்தா, சாரைப் பருப்பு, நெய் ,குங்குமப்பூ பயன்படுத்தி பக்குவமாகக் காய்ச்சிப்படுகிறது. இதன் அடிப்படையில் தற்போது பல்வேறு பெருமாள் கோயிலில் மார்கழி மாதத்தில் அக்கார அடிசல் பெருமாளுக்குப் படைக்கப்படுகிறது.
அழகர்கோயில் புத்தம், சமணம், இஸ்லாம் என எல்லா மதத்தவர்களாலும் வணங்கி வந்த தலம். வைணவம், சைவம் வித்தியாசமின்றி ஆராதனைகள் நடைபெறும் கோயில். பெருமாள் கோயிலான இங்கே விபூதியும் வழங்கப்படுவதே இதற்கு உதாரணம்.