உரிய வயதாகியும் ஆண், பெண் சிலருக்குத் திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இன்னும் சிலருக்கு பணக்கஷ்டம், சொத்துக்களில் வில்லங்கம், சிறைவாச பயம், நீண்ட நாட்களாக நோயால் அவதிப்படுவது, கேளிக்கை மற்றும் சூதாட்ட பழக்கம், போதைக்கு அடிமையாகிக் கிடப்பது போன்றவற்றிலிருந்து விடபட முடியாமல் அவதிப்படுவர். அதுபோன்றவர்கள் தங்களின் பிரச்னைகளில் இருந்து விடுபட ஓர் எளிய வழிபாட்டுப் பரிகாரம் உள்ளது.
மேற்கண்ட பிரச்னைகளைத் தீர்க்கும் அபூர்வத் தலமாக தஞ்சை மாவட்டம், திருநாகேஸ்வரம் விளங்குகிறது. இந்தக் கோயிலில் உள்ள சூரிய புஷ்கரிணியில் நீராடி, இந்தப் பரிகாரம் செய்பவர் அணிந்திருக்கும் உடைகளை அந்தப் புஷ்கரிணியிலேயே விட்டுவிட்டு புதிய ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகு அந்தப் புஷ்கரிணியை தேங்காய், வாழைப்பழம் வைத்து கற்பூர ஆரத்தி காட்டி வழிபட வேண்டும். அதன் பிறகு இக்கோயில் ராகு பகவான், நாகவள்ளி மற்றும் நாகக்கன்னி மூவருக்கும் வஸ்திரம் சமர்ப்பித்து (ராகு பகவானுக்கு 2 மீட்டர் நீல நிற வஸ்திரம், நாகவள்ளி மற்றும் நாகக்கன்னி ஆகியோருக்கு 2 மீட்டர் மஞ்சள் நிற வஸ்திரம்), செவ்வரளி மாலை சூட்டி, ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் செய்த பாலை இந்தப் பரிகாரம் செய்பவர் அருந்த வேண்டும். ராகு பகவான், நாகவள்ளி, நாகக்கன்னி மற்றும் பரிகாரம் செய்பவரின் பெயர், ராசி, நட்சத்திரம் கூறி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் ராகு காலத்தில் இந்த வழிபாட்டை மேற்கொண்டு வர, அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் விடுபடலாம்.
மேலும், மூலவர் நாகநாதருக்கு (சிவபெருமான்) வில்வ மாலை, பத்து முழும் வெள்ளை வேட்டி, அங்க வஸ்திரம், இரண்டு நெய் தீபம், அர்ச்சனை, பிறையணிந்த அம்மனுக்கு ஆறு கெஜம் மஞ்சள் வண்ணப் புடைவை (சிவப்பு பார்டர் வைத்தது), செவ்வரளி மாலை சூட்டி அர்ச்சனை செய்ய வேண்டும். கார்த்திகை மாத பௌர்ணமியன்று இந்த அம்பிகையின் சிரசில் நிலவொளி படும். அப்போது இந்த அம்பிகையை தரிசித்தால் மனக்கோளாறுகள் நீங்கும்.
அதுமட்டுமின்றி, இந்த ஆலய கிரிகுஜாம்பாள் அன்னைக்கு மஞ்சள் வண்ண ஒன்பது கஜம் புடைவை (சிவப்பு பார்டர் வைத்தது), சரஸ்வதி தேவிக்கு வெண்மை நிற ஆறு கஜம் புடைவை (பச்சை அல்லது சிவப்பு பார்டர் வைத்தது), மகாலட்சுமி தாயாருக்கு மஞ்சள் வண்ண ஆறு கஜம் புடைவை (பச்சை பார்டர் வைத்தது) சமர்ப்பித்து மூவருக்கும் மாலை சூட்டி அர்ச்சனை செய்து, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வழிபடுவது நல்லது. தவிர, அன்றைய தினம் குறைந்தது 11 பேருக்கு அன்னதானம் செய்வது மிகப் பெரிய பலன்களைப் பெற்றுத் தரும்.