திருப்பாவையின் 30 பாசுரங்களில் கிளி பாசுரம் ஏன் முக்கியமானது?

Andal Nachiyar Kili Pasuram
Andal Nachiyar
Published on

திருப்பாவையின் 30 பாசுரங்களில் மிகவும் முக்கியமான பாசுரமாகக் கொண்டாடப்படுவது, ‘எல்லே இளங்கிளியே’ எனும் 15வது பாசுரம்தான். தனது இடது கையில் அழகாக கிளியை தாங்கிக் கொண்டிருக்கும் அந்த ஆண்டாள் பிராட்டி, ‘இதோ என்னை எப்படி கிளியோடு நான் நிற்கும் தோற்றத்தை உங்கள் மனதில் நிறுத்திக் கொள்வீர்களோ, அதைபோலவேதான் திருப்பாவையின் முப்பது பாசுரங்களில், இந்த கிளி பாசுரத்தை மட்டுமாவது நினைத்துக் கொள்ளுங்கள்’ என்கிறாள்.

தம் அடியார்களிடம் பிரியமாக இருப்பவர்களிடம்தான் பெருமாள் பிரியமாக இருப்பார். ‘பாகவத அபாச்சாரம்’ என்று தமது அடியார்களை யாராவது சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்தினால், அதைப் பொறுத்துக்கொள்ளவே மாட்டார் திருமால் என்பதைக் காட்ட பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
ஆண்டாள் நாச்சியார் மேற்கொண்ட மார்கழி மாத பாவை நோன்பின் ரகசியம்!
Andal Nachiyar Kili Pasuram

அப்படி, அப்பெருமாளின் அடியார்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நமக்கெல்லாம் காட்டித் தரும் பாசுரம்தான் திருப்பாவையின் 15வது பாசுரமான, ‘எல்லே இளங்கிளியே’ எனும் பாசுரம். பகவானின் அடியவர்களான பாகவதர்களைக் கொண்டாடும் பாசுரம் இதுவே. பாகவதர்கள்தானே பெருமாளுக்கு உயிரானவர்கள்? உயர்வானவர்கள்? அவர்களைக் கொண்டாடும், அவர்களை எப்படிக் கொண்டாட வேண்டும் என்று இப்பாசுரம் காட்டித்தருவதால், திருப்பாவையின் முக்கியமான பாசுரமாகவே இது போற்றப்படுகிறது, ‘கிளி பாசுரம்.’

‘எல்லே இளங்கிளியே! இன்ன முறங்குதியோ?
சில்லென் றழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதா னாயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை?
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்’

இதையும் படியுங்கள்:
நாளை (டிசம்பர் 17) ஆண்டின் கடைசி பிரதோஷம்: வழிபாடும்... கிடைக்கும் பலன்களும்...
Andal Nachiyar Kili Pasuram

நாடக வடிவில் (கேள்வி, பதில் பாணியில்) அமைந்திருக்கும் திருப்பாவை பாசுரம் இது. எப்பொழுதுமே திருமாலை சேவிக்கும்போது, அவன் அடியார்களோடு சேவிப்பதுதான் தனிச் சிறப்பு. இப்பாசுரத்தில், அடியார்களை, அடியார் குழாமை கண் குளிரக் காண வேண்டும் என்பதற்காகவே ஒரு பெண் படுத்துக்கொண்டு,  கண்ணனை தியானம் செய்து கொண்டிருக்க, அவளைப் பார்த்து ஆண்டாள், ‘எல்லே இளங்கிளியே’ என்று அழைக்கிறாள். ‘இதோ பார் பெண்ணே, அடியார்கள் அனைவருமே வந்திருக்கிறோம். நீ இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாயா? வா வா வெளியில் எழுந்து வந்து எங்களோடு சேர்ந்து கண்ணனை பற்றிப் பாட வா’ என்று அழைக்க அப்பெண்ணோ, ‘கிருஷ்ணானுபாவத்தில் திளைத்திருக்கும் என்னை இப்படிக் கூச்சல் போட்டு கலைக்காதீர்கள்’ என்று பொருள் படும்படி, ‘சில்லென்றழையோன் மின்’ என்கிறாள்.

பகவத் தியானத்தில் இருப்பவர்களை நடுவில் சென்று கலைக்கக் கூடாது என்று சொல்வார்கள். பகவானை குறித்து ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருக்கும்போதோ அல்லது அவனது கல்யாண குணங்களை, கதைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும்போதோ, நடுவில் வந்து பகவானே அழைத்தால் கூட கோபம் வந்து விடுமாம் அடியார்களுக்கு. பகவத் அனுபவத்திற்கு இடையூறு செய்யக் கூடாது அல்லது பகவத் அனுபவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒருவருக்கு அந்த அனுபவத்தைக் கெடுக்கும் விதத்தில் இடையூறு செய்யலாகாது என்றே தெரிவிக்கும் இப்பாசுரத்தின் இரண்டாம் வரி.

இதையும் படியுங்கள்:
புண்ணிய மாதம் மார்கழியின் இரட்டை நட்சத்திர திருவிழாக்கள்!
Andal Nachiyar Kili Pasuram

இந்தப் பாசுரத்தின் நான்காவது வரியில், ‘நானேதா னாயிடுக’ என்று வரக்கூடிய அந்த உயர்வான கருத்தை அனைவருமே பின்பற்ற வேண்டும் என்று சொல்லுவார்கள் பெரியோர்கள். நாம் ஒரு தவறை செய்யாமல் இருந்தால் கூட பகவானின் அடியார் நம்மைப் பார்த்து, ‘நீ அந்தத் தப்பை செய்து விட்டாய். அப்படிச் செய்திருக்கக் கூடாது’ என்று சொல்லும்போது, ‘நான் அப்படி எல்லாம் செய்யவே இல்லை’ என்று பதில் பேச்சு பேசாமல், ‘அப்படியா? தவறு செய்து விட்டேனா? என்னை தயவுகூர்ந்து மன்னித்து விடுங்கள். இனி, அப்படிச் செய்ய மாட்டேன்’ என்று கூறிவிட, வேண்டுமாம்.

பாகவதர்கள் வாழ்த்தினாலும் அது ஆசிதான். அவர்கள் நம்மை திட்டினாலும் அதுவும் ஆசியேதான் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, திருமாலின் அடியவர்களிடம், பெரியோர்களிடம் எதிர்த்துப் பேசுதல் கூடாது என்று  பெருமாளின் ஆசியை நாம் பெறுவதற்கு நாம் செய்யவேண்டிய முக்கியமான விஷயத்தைச் சொல்லி அருளுகிறாள் ஆண்டாள் இப்பாசுரத்தில்.

நளினி சம்பத்குமார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com