திருப்பாவையும் அக்கார வடிசிலும்: நீங்கள் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள்!

Thirupavaiyum Akkara Adisilum
Sri Perumal, Akkara Adisil
Published on

ங்கலகரமான மார்கழி மாதத்தில் ஆண்டாள் நாச்சியாருக்குப் பிடித்த அக்கார வடிசில் பிரசாதத்தை படைப்பதனால் உண்டாகும் பலன்கள் மற்றும் அதைத் தயாரிக்கும் விதம் குறித்து இப்பதிவில் அறிந்து கொள்ளுவோம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தவனத்தில் துளசிச் செடியின் அருகில் குழந்தையாகத் தோன்றியவர் கோதை எனும் ஆண்டாள். ஆண்டாள் கோதை நாச்சியார், ஆழ்வார் திருமகள் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். அவர் அருளிச்செய்த ‘திருப்பாவை’ 30 பாசுரங்களையும் ‘நாச்சியார் திருமொழி’ 143 பாசுரங்களையும் கொண்டது.

அக்கார வடிசில் எனும் பிரசாதம் ஆடிப்பூரம் அன்று வைணவத் தலங்களில் தயாரிக்கப்படும் ஒரு பிரசாதமாகும். மேலும், மார்கழி மாதங்களில் இப்பிரசாதம் செய்யப்பட்டு ஆண்டாளுக்கு படைக்கப்படுகிறது. அக்கார வடிசில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் விசேஷ பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உங்கள் குலதெய்வம் வீட்டில் எங்கே குடியிருக்கிறது தெரியுமா? அதிர்ச்சியூட்டும் ரகசியம்!
Thirupavaiyum Akkara Adisilum

மார்கழி மாதத்தில் கடைபிடிக்கப்படும் பாவை நோன்பின்போது இருபத்தி ஏழாம் நாள் கூடாரவல்லி உத்ஸவம் நடைபெறும். ‘நெய்யுண்ணோம் பாலுண்ணோம்’ என்று மார்கழி முதல் நாளில் துவங்கும் பாவை நோன்பானது 27ம் நாள் அன்று தங்கள் விருப்பங்கள் நிறைவேறியதாக எண்ணி நெய்யும் பாலும் கலந்து அக்கார வடிசிலை செய்வது வழக்கம். பொதுவாக, சர்க்கரைப் பொங்கல் தண்ணீரில் வேகவைக்கப்படும். ஆனால், அக்கார வடிசில் பாலில் வேகவைக்கப்பட்டு தயாரிக்கப்படும் பிரசாதமாகும்.

பாவை நோன்பினைக் கடைபிடித்த ஆண்டாள் ஒரு சமயம் கள்ளழகர் பெருமாளிடம் தனக்கும் அரங்கநாதருக்கும் திருமணம் செய்து வைத்தால் 100 தடா அக்கார வடிசிலும் 100 தடா வெண்ணெயும் நைவேத்தியம் செய்து படைப்பதாக வேண்டிக் கொள்கிறாள்.

‘நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ’

- நாச்சியார் திருமொழி

இதையும் படியுங்கள்:
சந்திராஷ்டம பாதிப்பிலிருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்!
Thirupavaiyum Akkara Adisilum

ஸ்ரீரங்கத்தில் ஆண்டாள் ஸ்ரீரங்கநாதருடன் ஐக்கியமான பிறகு கள்ளழகருக்கு அக்கார வடிசிலும் வெண்ணெயும் சமர்ப்பிக்க முடியாமல் போனது. எம்பெருமானாராகிய ஸ்ரீராமானுஜர் பின்னாட்களில் இதுபற்றி அறிந்து ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்ற முடிவு செய்தார். ஆண்டாள் வேண்டிக்கொண்டபடியே ஆண்டாளுக்காக ஒரு கூடாரைவல்லி திருநாளில் கள்ளழகருக்கு 100 தடா அக்காரவடிசிலும் 100 தடா வெண்ணெயும் சமர்ப்பித்து ஆண்டாளின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.

ஆண்டாளின் நேர்த்திக்கடனை முடித்த உடையவர் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று ஆண்டாளை வணங்கி நின்றபோது இராமானுஜரின் செயலால் மகிழ்ந்த ஆண்டாள் அசரீரியாக, ‘வாரும் என் அண்ணலே’ என்று அழைத்தார்.

ஆண்டாளின் சார்பில் அவருடைய அண்ணா அக்கார வடிசில் சமர்ப்பிக்கும் சம்பிரதாயம் தற்போதும் திருமாலிருஞ்சோலை, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்பூதூர் தலங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை முப்பது பாசுரங்களைக் கொண்டது. இன்றும் இது தமிழ்நாட்டில் மார்கழி மாதத்தில் தினமும் காலை வேளைகளில் ஒரு நாளுக்கு ஒன்றாகப் பாடி பக்தர்களால் மகிழப்படுகிறது.

ஆர்.வி.பதி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com