

திருவனந்தபுரத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள கரமணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருவல்லம் பரசுராமர் கோவில் (Thiruvallam Parasurama Temple), கேரளாவில் பரசுராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே பழமையான கோவிலாகும். இது பித்ரு தர்ப்பணம் (முன்னோர் வழிபாடு) செய்யப்படும் மிக முக்கியமான "தட்சிண கயை" என அழைக்கப்படும் புனிதத் தலமாகும்.
பரசுராமர், விஷ்ணு பகவானின் ஆறாவது அவதாரம் ஆவார். பரசுராமர் சகல கலைகளையும் கற்றவர். அஸ்திரம் பிரயோகிப்பதில் இவருக்கு நிகர் யாருமில்லை. இவரது ஆயுதம் "பரசு' என்பதால் "பரசுராமர்' ஆனார். அதை வைத்துதான் கேரளாவை தோற்றுவித்ததாகவும் கூறப்படுவண்டு.
ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமர் தன் தாய் ஒரு கந்தர்வனை நதியின் நீரில் நிழலாக பார்த்துவிட்டாள் என்பதற்காக, தந்தையின் ஆணைப்படி தாயின் கழுத்தை துண்டித்தார். தன் தாய் கற்பு நெறி பிறழாதவள் என்று தெரிந்தும் தந்தை சொல் தட்டாமல் நிறைவேற்றிய தனயன், அதற்கு பிரதி உபகாரமாக தந்தையிடம் பெற்ற வரத்தின் காரணமாக தாயை உயிர்ப்பித்தார்.
பரசுராமர் தன் தாய் ரேணுகாதேவியைக் கொன்ற தோஷம் நீங்க பலதலங்கள் சென்று வழிபாடு செய்தார். ஒருமுறை அவர் சிவனின் கட்டளைப்படி திருவல்லம் வந்து இங்குள்ள கரமனை ஆற்றில் நீராடினார். அப்போது அவருக்குக் கிடைத்த லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து தவமிருந்து தோஷம் நீங்கப்பெற்றார். பின் தன் தாய்க்கு தர்ப்பணம் கொடுத்தார்.
பரசுராமருக்கு பிறகு, மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோர் பரசுராமர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தைப் பூஜை செய்துள்ளனர். வல்லம் என்றால் ‘தலை‘ என்று பொருள். முற்காலத்தில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியின் தலைப்பகுதி இத்தலம்வரை நீண்டு கொண்டிருந்ததால் இத்தலம் “திருவல்லம்“ எனப்பட்டது.
இந்த புராதன கோயில் சீறிபாயும் கரமனை ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கிறது. திருக்கோவிலின் முன்பு 9 பலிப்பீடங்கள் இருக்கிறது. தர்ப்பணம் முடிந்ததும் நம் முன்னோர்களுக்கு பலிகர்மம் இந்த பீடங்களில் தான் இடப்படும்.
பரசுராமர் வழிபட்ட இந்த இடத்தில் அவரது பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பீடத்திற்கு தினமும் பூஜை செய்யப்படுகிறது. இந்த பீடத்தை பரசுராமரின் சீடரும், சிரஞ்சீவிகளில் ஒருவருமான அஸ்வத்தாமன் வழிபட்டிருக்கிறார். முக்கிய சன்னிதியில் பரசுராமர் முகம் சந்தனத்தில் வரையப்பட்டிருக்கிறது. பரசுராமர் வடக்கு பார்த்து இருக்கிறார். பீடத்தின் அருகே பரசுராமர் கோடரியுடன் நிற்கும் சிலை உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.
பரசுராமர் ஆலய சுற்றுப் பிரகாரத்தில் வடக்கு மூலையில் திலஹோமம் நடக்கும். ஒரு மேடையின் மீது பலவித வண்ணங்களில் ஏராளமான சோப்புப் பெட்டிகள் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் ஒரு தகடு இருக்கும். அதன் அருகே ஓடும் கரமனையாற்றின் கரையில், அகால மரணமடைந்தவர்களுக்கு 13 மாதங்கள் திலஹோமம் செய்து 13 வது மாதம் அந்த சோப்புப் பெட்டியை பரசுராமரின் பாதங்களில் வைத்து ஆற்றில் விட்டு விடுகின்றனர்.
பரசுராமர் தன் தாய்க்கு பிதுர் தர்ப்பணம் கொடுத்த தலமாதலால் இத்தலம் "தட்சிண கயை' என்று அழைக்கப்படுகிறது. ஆதிசங்கரர் தன் தாய் ஆரியாம்பாளுக்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்துள்ளார். அப்பொழுது பரசுராமர் அவருக்கு காட்சி கொடுத்துள்ளார். இங்கு அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் பலி தர்ப்பணம் செய்ய கூடுகின்றனர். அமாவாசை நாளன்று நடுநிசியில் நடக்கும் ஹோமங்களில் மிளகாய், சுக்கு, வசம்பு போடப்படுகிறது.
முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக செய்விக்கப்படும் ‘பலிதர்ப்பமன்’ என்னும் சடங்கை செய்வதற்காக பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகின்றனர். கோவிலின் அலுவலகம் காலை 4:30 மணிக்கு திறந்து விடுகிறார்கள். பலி, திலஹோமம், அர்ச்சனை, பிரசாதம் என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி டோக்கன் வழங்கப்படுகிறது.
டோக்கன் வாங்கும்போதே இறந்தவரின் இறந்த திதி (நட்சத்திரம்) கேட்கிறார்கள். தெரியாவிட்டால் பகவானின் நட்சத்திரமான திருவோணம் நட்சத்திரம் வைத்து தர்பணம் செய்கின்றனர். கேரள முறைப்படி பலிகர்ம பூஜை செய்யவேண்டும். இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்கு அவர்களின் பெயர் சொல்லி ஹோமத்தில் எள்ளு கலந்து தெளிக்கப்படுகிறது. இந்த திலஹோமம் விஷேசமாக செய்யப்படுகிறது.
பித்ரு தர்ப்பணம் காலை 6.30 முதல் 10.00 வரையும், திலஹோமம் 6.30 முதல் 10.30 வரையும் செய்கிறார்கள். ஆடி, தை, மற்றும் மகாளய அமாவாசை நாட்களிலும், மாத அமாவாசை நாட்களிலும் பக்தர்கள் பிதுர் தர்ப்பணம் கொடுக்க பெருமளவில் இங்கு கூடுகின்றனர். பரசுராமர் ஜெயந்தியும் விசேஷமா கொண்டாடப்படுகிறது. காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திருக்கோவில் நடை திறந்திருக்கும்.