
‘விண்ணாளும் தேவர்க்கும் மேலான வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார்கழல் காட்டி நாயேனையாட் கொண்ட
அண்ணாமலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்’
திருவெம்பாவை நூலுக்கும் திருவண்ணாமலை திருத்தலத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பல்வேறு சிவத் தலங்களையும் தரிசித்து வந்த மாணிக்கவாசகர், திருவண்ணாமலை திருத்தலத்தில் அடி முடி காண முடியாத அண்ணாமலையாக, ஆதியந்தமில்லா அருட்பெருஞ்ஜோதியாய் மாபெரும் மலை வடிவாய் நின்ற சிவபெருமானை தரிசித்து வியந்து நின்றார். அந்த வியப்பின் உச்சமாக எல்லாம்வல்ல சிவபெருமானை அடைவதற்கு என்ன வழி என சிந்தித்து பாவை நோன்பு நோற்றல் என்னும் வழிபாட்டைக் கைக்கொண்டார். திருவண்ணாமலை திருத்தலத்தில்தான் மாணிக்கவாசகர் முதன் முதலில் பாவை நோன்பு வழிபாட்டை தொடங்குகிறார். அந்தப் பாவை நோன்பின் வெளிப்பாடாக இருபது திருவெம்பாவை பாடல்களைப் பாடினார். இதுதான் திருவண்ணாமலை திருத்தலத்துக்கும் திருவெம்பாவை நூலுக்கும் உள்ள தொடர்பு.