
உமா தேவியாரின் தவத்துக்கு அருள மனம் கனிந்த இறைவன் ஜோதி லிங்கமாக வெளிப்பட்டார். ஜோதி லிங்கத்தை அனைவரும் காண அவரே பூஜித்தார். பூஜித்தது மட்டுமல்ல ஜோதி லிங்கத்தை பூஜிக்க நினைத்தாலே போதும், 'பல கோடி ஜென்மங்களில் செய்த பாவங்கள் தீரும் பேரின்ப வாழ்வு கிடைக்கும்' என்றும் அருளினார். அந்த அருள் ஒளி விளங்கும் ஜோதி லிங்க திருக்கோவில் அமைந்துள்ள இடம் தான் திருவிடைமருதூர் திருத்தலம். மற்ற கோவில்கள் மன்னர்கள் கட்டியவை. ஆனால், இந்த திருத்தலமோ அகஸ்தியர், இந்திரன் மற்றும் உள்ள தேவர்கள் விருப்பத்துக்கு இணங்க தேவ தச்சன் மயன் நிர்மாணித்தது.
பிறக்க முக்தி அளிக்கும் தலம் தில்லை, நினைக்க முக்தியளிக்கும் தலம் திருவண்ணாமலை, இறக்க முக்தி அளிக்கும் தலம் காசி என்பார்கள். ஆனால் பிறந்தாலும், இறந்தாலும், நொடி நேரம் நினைத்தாலும், இங்கே வசித்தாலும், இந்த ஊர் வழி செல்ல நேர்ந்தாலும் புரிந்த பல கோடி பாவங்கள் நீங்கி புண்ணியம் சித்திக்கும் திருத்தலம் இது. இத்தகுப் பெருமையும், புகழும், புனிதமும் மிக்க திருவிடைமருதூர் திருத்தலம் சோழ நாட்டில் காவிரி கரையின் தென்பகுதியில் கும்பகோணம்-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ளது.
இந்த கோவிலின் தல விருட்சம் மருத மரம். இறைவன் மருதீசரர் மகா லிங்கேஸ்வரர் என்று போற்றப்படுபவர். இறைவி ஸ்ரீ பிருகத் சுந்தர குஜாம்பாள் என்பது வடமொழி திருநாமம். தமிழில் பெருநல மாமுலையம்மை. மருத மரங்கள் நிறைந்த ஊர் என்பதால், மருதூர் என்றும் சிறப்பு பெயர் பெற்றது. வடக்கே மல்லிகார்ஜுனம், தெற்கே திருப்புடார்சுனமும் அரணாக அமைய இது இடைப்பட்ட ஊர் இடைமருதூர் எனப்பட்டது.
இந்த திருத்தலத்தில் முப்பத்திரண்டு புனித தீர்த்தங்கள் உள்ளன. இதில் புனிதத்துக்கும் புனிதம் சேர்க்கும் புண்ணிய தீர்த்தம் காருண்யா மிருத தீர்த்தம்.
முதல் பிரகாரம் அசுவமேத பிரதட்சண பிரகாரம். இதை வலம் வந்து தொழுவோர் அசுவமேத யாகம் செய்த பலனை பெறுவர். அடுத்துள்ள பிரகாரம் கொடுமுடி பிரகாரம். இது வரகுண தேவரால் கட்டப்பட்டது. இதை வலம் வந்து பணிவோர், திருக்கயிலாய மலையை வலம் வந்தால் அடையும் பயனும் புண்ணியமும் பெறுவர். இதனை அடுத்து உள்ள பிரகாரம் பிரணவ பிரகாரம். இந்த பிரகாரச் சுற்றில் எப்போதும் பிரணவ ஒலி கேட்டுக் கொண்டிருக்கும்.
இந்த மூன்று பிரகாரங்களையும் நாள்தோறும் முறைப்படி வலம் வருவோர் புத்திர பேரும், பெரும் செல்வமும் பெறுவார்கள். மேலும் இத்தலத்தில் இறைவனை நோக்கி தவம் இருந்து உமாதேவி நீராடி திருநீர் அணிந்து ஐந்து எழுத்து ஓதி பூஜையை செய்தார். அக்கினியிலும் பூஜித்தார். இவ்வாறு அம்பிகை இறைவனை தியானித்து மோனத்தில் சிவயோக நிலையில் அமர்ந்திருந்தார்.
இந்த திருக்கோலமே 'ஸ்ரீ மூகாம்பிகை மூர்த்தம்' என்பது இந்த திருக்கோவிலில் தனி சன்னதியில் உள்ளது. லலிதா சகஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதிய பாஸ்கர ராயர் பூஜித்த ஸ்ரீ மகாமேரு இந்த தலத்தில் உள்ளது. இன்னும் ஒரு பெருஞ்சிறப்பு தண்டகாருண்யத்தில் வசிக்க நேரிட்ட ராமபிரான் இங்கே வந்து ஜோதிலிங்கத்தை தரிசித்தார் என்றும் அவர் பாணம் எறிந்து உண்டாகிய தீர்த்தமே 'பாண தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. இதில் நீராடி தானம் செய்வோர் விரும்பியன பெறுவர்.
பெயரும் மருதவன ஈசருக்கு தென்திசையில் உள்ள தீர்த்தம் 'ருத்ர தீர்த்தம்' என்பது இதில் நீராடினால் தீராத நோய்கள் தீரும் என்பது வரலாறு. இதே போல் பதும தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், இந்திர தீர்த்தம், வருண தீர்த்தம், வாயுதீர்த்தம், இமய தீர்த்தம், அக்னி தீர்த்தம் என்று பல தீர்த்தங்கள் உள்ளன என்றாலும், இந்த தீர்த்தங்களை விசேஷமானது காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள கல்யாண தீர்த்தம் ஆகும்.
உமா மகேஸ்வரி இந்த தீர்த்தத்தில் மூழ்கி தான் இறைவனை மணந்து தேவர்களுக்கு உமா மகேஸ்வரராக காட்சி தந்தார். இதில் நீராடுவோர் எல்லா மங்களங்களையும் பெறுவார் என்பதால் தான் இது 'கல்யாண தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீ ஆதிசங்கரர் அத்வைத சித்தாந்த்தை ஸ்தாபிக்க தலயாத்திரை மேற்கொண்டார். அப்போது இந்த மத்தியார்ஜுனம் தலத்திற்கு விஜயம் செய்து ஸ்ரீ மகாலிங்க பெருமானை தரிசித்தார். அந்த சமயம் கர்பகிரகத்திலிருந்து 'அத்வைதம் ஸத்யம்' என்ற அசரீரி குரல் மும்முறை கேட்டது. இந்த சம்பவத்தை விளக்கும் மகாலிங்க மூர்த்தியின் சிலை ஒன்று மருதூர்சங்கர மடத்தில் உள்ளது. இது மூர்த்தத்தின் கைகள் அபயஹஸ்தமாக சங்கரரை ஆசீர்வதிப்பது போல் உள்ளது.