சந்திர தோஷ நிவர்த்தி தரும் திருவோண விரதம்!

Sri Perumal
Sri Perumal
Published on

திருவோண விரதம் என்பது, திருவோண நட்சத்திரத்தோடுகூடிய நன்னாளில் நோற்கும் நோன்பாகும். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்தது. ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே, 'திரு’ என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள், மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று நிகழ்ந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.

தோஷங்களில் பல வகை உள்ளன. அவற்றில் சந்திர தோஷம் முக்கியமான ஒன்றாகும். ஜாதகத்தில் சந்திர தோஷம் இருந்தால், அவர்கள் அமாவாசைக்குப் பிறகு வரக்கூடிய துவிதியை திதியில் விரதம் இருக்க வேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும். அதேபோல், தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபடுவதுடன், திருவோண நட்சத்திரத்தன்று திருவோண விரதம் இருந்தால் சந்திர தோஷம் விலகுவதுடன், சந்தோஷமான வாழ்வு அமையும் என்பது ஐதீகம். அனைத்து மாதங்களிலும் வரும் திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளை வேண்டி விரதம் இருக்கலாம்.

ஒவ்வொரு மாதமும் வரும் திருவோண நட்சத்திரத்தன்று அதிகாலையில் நீராடி, பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை அணிவித்தோ அல்லது வீட்டில் உள்ள பெருமாள் படத்துக்கு துளசி மாலையே அல்லது பெருமாளுக்கு உகந்த வேறு பூமாலையே அணிவித்தோ வழிபட வேண்டும். பின்னர், அன்று உண்ணப்போகும் உணவு எதுவாக இருப்பினும், அதில் உப்பு சேர்க்காமல் உண்ண வேண்டும். அன்று ஒருவேளை அரிசி உணவும், மற்ற நேரங்களுக்கு சிற்றுண்டி, பால், பழம் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். பக்தி சிரத்தையுடன் இந்த விரதத்தைக் கடைபிடித்தால் வேண்டியது வேண்டியபடி நிறைவேறும் என்பது திண்ணம்.

இதையும் படியுங்கள்:
நவகுஞ்சரம் என்றால் என்னவென்று தெரியுமா?
Sri Perumal

இனி, திருவோண நட்சத்திர தினத்தன்று எந்தெந்த வேளைகளில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம். காலையில் வழிபட, நோய்கள் குணமாகும். நண்பகலில் வழிபட, செல்வம் பெருகும். மாலை வேளையில் வழிபட, பாவங்கள் நீங்கும். அர்த்த யாமத்தில் வழிபட, முக்தி கிடைக்கும்.

திருவோண தினத்தன்று பெருமாளை வழிபட்டால் கல்வித்தடை, திருமணத்தடை, பணப்பிரச்னை போன்ற அனைத்துவிதப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com