தமிழ் கடவுளாம் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டு, அவர் திருவருளைப் பெறுவதற்கு ஏற்ற நாட்களில் மிக முக்கியமானது தைப்பூச திருநாளாகும். இந்தத் திருநாள் அனைத்து முருகன் கோயில்களிலும் கொண்டாடப்பட்டாலும், அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில்தான் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூச திருநாளன்று முருகனை வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். தைப்பூசத் திருவிழாவின்போது மட்டும் பழனியில் 5 லட்சம் பக்தர்கள் வரை கூடுவார்கள். அதுவும் எப்படி? லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் ஊர்களிலிருந்து ஒரு மண்டலம் விரதமிருந்து பழனிக்கு பாதயாத்திரையாக வருவார்கள். சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் கறுப்பு உடை தரித்து செல்வதுபோல பழனிக்கு பக்தர்கள் பச்சை உடை தரித்து வருவார்கள்.
தைப்பூசம் என்பது முருகப்பெருமான் தீமையை வென்றதை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படும் ஒரு பிரம்மாண்டமான வண்ணமயமான திருவிழா.
தைப்பூச திருநாள் பழனி முருகனுக்கே உரிய விழாவாகக் கருதப்பட்டாலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்று உலகம் முழுவதிலும் உள்ள முருகன் கோயில்களிலும் தைப்பூச திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி உள்ளிட்டவற்றை ஏந்தி வந்து முருகனை இந்த நாளில் வழிபடுவார்கள். தை மாதத்தில் வரும் பௌர்ணமியுடன் பூசம் நட்சத்திரம் இணையும் நாளை தைப்பூசம் நாளாகக் கொண்டாடுகிறோம்.
இந்தத் திருநாளின் சிறப்பம்சங்களாக, முனிவர்களுக்கு பலவிதமான துன்பங்களைக் கொடுத்து வந்த தாரகாசுரனை முருகன் வதம் செய்ததும், முருகப்பெருமான் தனது தந்தைக்கே பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் செய்ததும் புராணங்களில் கூறப்படுகிறது. வள்ளியை மணமுடித்ததால் தெய்வானையுடன் ஏற்பட்ட ஊடலை சமாதானம் செய்து வள்ளி தெய்வானை சமேதராகக் காட்சியளித்ததும் தைப்பூச திருநாளில்தான் என்றும் சொல்லப்படுகிறது.
தைப்பூச திருநாள் சிவன் மற்றும் பார்வதி தேவிக்கும் விசேஷமான நாளாகக் கொண்டாடப்படுகிறது. மார்கழி திருவாதிரையில் சிதம்பரத்தில் சிவபெருமான் தனித்து நடனம் ஆடியதைக் கண்ட பார்வதிக்கு தானும் இதேபோல ஆனந்த தாண்டவம் நிகழ்த்த வேண்டும் என்னும் அவா ஏற்பட்டதாம். பராசக்தி தனியாக தாண்டவம் ஆடியதும் ஒரு தைப்பூச திருநாளன்றுதான். அதேபோல சிதம்பரத்தில் சிவன் பார்வதி இருவரும் இணைந்து தெய்வீக ஆனந்தத் தாண்டவம் ஆடியதும் ஒரு தைப்பூச திருநாளில்தானாம்.
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டில் உள்ள முருகப்பெருமான் படத்திற்கு பூமாலை அணிவித்து வெறும் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும். திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம் போன்ற சிறப்பான துதிகளால் முருகப்பெருமானை வழிபட வேண்டும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தைப்பூச திருநாளில் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபடுவர்களுக்கு தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். பிரிந்த தம்பதி ஒன்று சேர்வார்கள். இத்தினத்தில் விரதம் இருப்பதால் குழந்தை வரம், திருமணம், குடும்ப ஒற்றுமை ஆகியவை கிடைக்கும். தைப்பூசத்தன்று முருகனுக்கு நடைபெறும் பூஜை, அபிஷேகங்களைக் கண்டாலே சகல பாவங்களும் நீங்கும். தோஷங்கள் நிவர்த்தியாகும். நினைத்த காரியங்கள் கைகூடும்.
அளவில்லாத பலன்களை அள்ளித் தரும் தைப்பூச திருநாள் இந்த வருடம் நாளை, வியாழக்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது. நாமும் முருகப்பெருமானை வழிபட்டு வாழ்வில் சகல வளங்களையும் அடைவோம்.