துலா காவிரி ஸ்நான மகிமை!

துலா ஸ்நான ஆரம்பம் (18.10.2023)
துலா காவிரி ஸ்நான மகிமை!
Published on

‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என தீபாவளி சமயம் ஒருவருக்கொருவர் கேட்பது போல. ஐப்பசி மாதத்தில், ’துலா காவிரி ஸ்நானம் ஆயிற்றா?’ எனக் கேட்பது வழக்கம். கங்கைக்கு நிகரான காவிரி நதியில் நீராடினாலும், தரிசித்தாலும், அதைத் தொட்டு சிரசில் வைத்தாலும் நற்பலன்கள் பல கிடைக்குமெனக் கூறப்படுகிறது. மேலும், காவிரி நதிக் கரைகளில் தர்ப்பணம் செய்து, தானங்கள் கொடுப்பதும் மிகவும் விசேஷமாகும்.

'கவேர கன்யே காவேரி, சமுத்ர மகிஷிப் பிரியே

தேகிமே பக்தி முக்தி தவம் சர்வ தீர்த்த ஸ்வரூபிணி'

அன்னை உமா தேவிக்கு ஸ்ரீ பரமேச்வரன் கூறிய காவிரி மகாத்மியம் மிக உயர்ந்ததாகும். காவிரி மகாத்மியம் குறித்துக் கூறப்படும் புராணக் கதைகளில் ஒரு சிலவற்றைப் பார்ப்போமா?

வேரன் என்கிற அரசன் தனக்குப் புத்திர பாக்கியமில்லாததால், பிரம்ம தேவரைக் குறித்து தவம் புரிய பிரம்ம தேவர், “உனக்குப் புத்திர பாக்கியம் இல்லாவிடினும் ஒரு குழந்தையை அளிக்கிறேன்” என்று கூறினார்.

அதன்படியே, பிரம்ம தேவன் அத்திரி மகரிஷியின் மகனாகப் பிறந்து ஊர்வசியை மணமுடித்தார். தங்களுக்குப் பிறந்த புத்திரியை, கவேர ராஜனுக்கு அளித்தார். காவிரியும் தகுந்த கணவனை வேண்டித் தவம் செய்கையில், அகஸ்திய முனிவரைக் காண, லோபமுத்ரா என்கிற பெயருடன் அவரைத் திருமணம் செய்தாள். பின்னர், அவள் விரும்பியவாறே நதி ரூபமாகி, பிற நதிகளுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படும் பாவங்களை நீக்கவும், மோட்சத்தை அளிக்கவும் அகஸ்தியர் அருள்புரிந்தார்.

ரு சமயம் அகஸ்திய முனிவரிடம் காவிரி எடுத்தெறிந்து பேசியதால், அவர் அவளைத் தனது கமண்டலத்தினுள் அடைத்து வைத்தார். இதைக் கண்ட தேவர்கள், விநாயகரிடம் சென்று முறையிட, விநாயகரும் காகம் ரூபத்தில் வந்து அகஸ்திய முனிவரின் கமண்டலத்தைத் தட்டிவிட, காவிரித் தாய் வெளிப்பட்டு பிரவாகமாக ஓடினாள்.

ரகாசுரனை மகாவிஷ்ணு சம்ஹாரம் செய்தவுடன், அவருக்கு வீரஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதைப் போக்கும் வழியை சிவபெருமானிடம் கேட்கையில் சிவபெருமான், மகாவிஷ்ணுவை காவிரியில் ஸ்நானம் செய்யக் கூறினார். அவரும் அவ்வாறே செய்ய, அவரது தோஷம் நீங்கிற்று.

காவிரியின் வேறு பெயர்கள்: லோபமுத்ரா, பொன்னி, கல்யாணி, சாமதாயினி, விண்டு மாயை, கோனி மாதா எனப் பல பெயர்கள் உள்ளன.

‘காவிரி புண்ணிய நதி’ எனக் கூறப்படுகிறது. மக்கள் தங்களுடைய பாவங்கள் நீங்க கங்கை நதியில் நீராடுகையில், கங்கையின் பாவம் அதிகமாக அதற்கு தோஷம் ஏற்பட்டது. பாவம் தீர பரிகாரத்தை மகாவிஷ்ணுவிடம் கங்கை கேட்க, காவிரி நதியில் நீராடக் கூறினார். இதனால் துலா காவிரி ஸ்நானம் செய்ய இந்நாளில் கங்கையும் வருகிறாள் என்பது ஐதீகம்.

காவிரியில் ஸ்நானம்: கிருஷ்ணபட்ச சதுர்த்தி தினம் அதிகாலையில் தலையில் நல்லெண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளிப்பது என்பது வழக்கத்தில் உள்ளது. இன்று சிவ பூஜை செய்து, விரதமிருக்க வேண்டும். மூன்றரை கோடி தீர்த்தங்கள் துலா மாதத்தில் காவிரியில் வந்து சேருவதால், அதை வணங்கி ஸ்நானம் செய்கையில் மனித வாழ்வில் நினைத்தது எல்லாம் ஸித்திக்கும். தீராத தலைவலி மற்றும் உடல் உபாதைகள் நீங்குமென நம்பப்படுகிறது. அதனால் ஜன்மத்தில் ஒரு முறையாவது துலா காவிரி ஸ்நானம் செய்வது அவசியம்.

காவிரி ஸ்நானம் மகிமை குறித்து வேதம் கூறுவது…

‘அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி|

புண்ய க்ஷேத்ரே கிருதம் பாபம் வாரனாச்யாம் விநச்யதி|

வாரனாச்யாம் க்ருதம் பாபம் கும்பகோனே விநச்யதி|

கும்பகோனே க்ருதம் பாபம் காவேரி ஸ்நானே விநச்யதி|’

(கங்கையை விட காவிரி உயர்ந்தவள் என பிரம்ம தேவரே ஒரு சமயம் கூறியிருக்கிறார்.)

ஐப்பசி (துலா) மாதத்தில் காவிரி நதியைக் குறித்து பாராயணம் செய்வதும், மகாத்மியத்தைப் படிப்பதும், கேட்பதும் அது பற்றிக் கூறுவதும் நல்ல பலன்களை அளிக்கும். நாமும் காவிரி அன்னையை மனதார வணங்கி வழிபடுவோமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com