திப்பு சுல்தானையே அசத்திய தீர்ப்பு என்ன தெரியுமா?

கோயில் தேரும் திப்பு சுல்தானும்
கோயில் தேரும் திப்பு சுல்தானும்
Published on

மைசூர் பகுதியை திப்பு சுல்தான் ஆட்சி செய்த காலம். ஒரு சமயம் அவரிடம் சிக்கலான வழக்கு ஒன்று வந்தது. ஒரு கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. சுவாமி விக்கிரகத்தை அழகாக அலங்கரித்து தேரில் அமர்த்தி பக்தகோடிகள்  வடம் பிடித்து இழுத்து வந்தனர். ஓரிடத்தில் பெரிய மரக் கிளை ஒன்று தேர் பவனிக்கு தடையாக இருந்தது. அந்த கிளையை வெட்டி விடலாம் என்று முடிவு செய்தனர். இதற்கு அந்தப் பகுதியில் வசித்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். “இந்த மரம் எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட மரம். இதில் எங்களின் குலதெய்வம் குடி கொண்டிருக்கிறது. கிளையை வெட்டினால் தெய்வ குற்றத்திற்கு ஆளாவீர்கள்” என்று தடுத்தனர்.

கோயில் தரப்பினரோ, தேரை திரும்பவும் வந்த வழியில் இழுத்துச் செல்வதை அபசகுனமாகக் கருதினர். தவிர, வேறு வழியில் தேரை கொண்டு செல்லவும் அவர்கள் தயாராக இல்லை. இந்த இக்கட்டான சூழலின் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு முற்றியது. வன்முறை வெடிக்கும் அபாயம் தெரிந்தது. ஊர் பெரியவர்கள் விஷயத்தை திப்பு சுல்தானிடம் கொண்டு சென்றனர். இரு தரப்பினரும் கூறிய விளக்கத்தை பொறுமையாகக் கேட்டறிந்த திப்பு சுல்தான் யோசித்தார். இந்த வழக்கில் நான் தீர்ப்பு செல்வது சரியல்ல என்று தயங்கினார். இறுதியில், இந்த வழக்குக்குத் தீர்ப்பு சொல்லும் தகுதி வாய்ந்தவர் அப்பாஜியே என்று முடிவுக்கு வந்தார். உடனடியாக அப்பாஜியை வரவழைத்து வழக்கை அவரிடம் ஒப்படைத்தார்.

அப்பாஜி சம்பவ இடத்துக்கு விரைந்தார். இவர் என்னதான் தீர்ப்பு சொல்லப்போகிறார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் திப்பு சுல்தானும் அங்கு மாறு வேடத்தில் சென்றார். தேர் தடைபட்டு நின்ற இடத்தை நன்கு சுற்றிப் பார்த்தார் அப்பாஜி. இரு தரப்பினரிடமும் மீண்டும் பேசிப் பார்த்தார். அவரவர்கள் தங்களது நிலையில் உறுதியாக இருந்தனர்.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகப்பெரிய 9 பூக்கள் தெரியுமா?
கோயில் தேரும் திப்பு சுல்தானும்

சற்று நேரம் யோசித்த அப்பாஜி, இந்தக் கிளை மட்டத்தைக் காட்டிலும் தேர் எவ்வளவு உயரம் அதிகமாக உள்ளது என்று கேட்டார்.

“ஐந்தடி இருக்கும் ஐயா” என்று பதில் வந்தது. உடனே, “அப்படியா? சரி இந்த பாதையில் ஐந்தடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி பாதை அமையுங்கள். தேர் அந்தப் பாதை வழியே செல்லட்டும். மரக்கிளையும் தடையாக இருக்காது. தேரும் இந்த வழியாகவே பயணிக்கும்” என்றார். மறுகணம் அங்கிருந்த இளைஞர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட, பள்ளமான பாதை அமைக்கப்பட்டு தேர் பவனி தொடர்ந்தது. அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

சிக்கலான வழக்கை சாதுர்யமாக சமாளித்த அப்பாஜியின்அறிவு கூர்மையை பாராட்டி அவருக்குப் பொன்னும் பொருளும் பரிசளித்து கௌரவித்தார் திப்பு சுல்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com