வெளிநாட்டு வேலை அருளும் திருமால்பாடி ரங்கநாதர்!

வெளிநாட்டு வேலை அருளும் திருமால்பாடி ரங்கநாதர்!
Published on

ர்ச்சாரூபராய் பார் முழுதும் அருள்புரிந்துவரும் திருவரங்கப் பெருமாள் திருமால்பாடி திருத்தலத்தில் அனந்தசயனத் திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.

ஸ்ரீ வேதவியாசரின் மகனான, கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம மகரிஷி விரஜாபுரி என்னும் (ஸ்ரீவைகுண்டத்தில் பிரவாகிக்கும் புண்ணிய நதியின் பெயர் விரஜை} திருமால்பாடி குன்றின் மீது திருமாலை நோக்கி தவமிருந்தார். அவரது தவத்துக்கு இரங்கிய திருமால், தேவர்களுடன் கூடிய அரங்கநாதனாக தரிசனம் தந்து, ‘வேண்டும் வரம் யாது?’ எனக் கேட்டார். சுகரோ, தனக்கு முக்திப் பேறு வேண்டுமென வேண்டினார். அதற்கு ரங்கநாதரோ, ‘அருகில் உள்ள தீர்க்காசலம் என்னும் நெடுமலையில் தவம் புரிந்தால், ஸ்ரீராம அவதாரத்தின்போது இளவல் லட்சுமணன், அன்னை சீதா பிராட்டி மற்றும் அனுமன் புடைசூழ காட்சி தந்து முத்திப்பேறு கிடைக்கும்’ என வாக்களித்து மறைந்தார்.

அதன்படி, இக்குன்றில் தவத்தை முடித்து அரங்கனின் கட்டளைப்படி நெடுமலையை அடைந்து, அங்கு மீண்டும் திருமாலைக் குறித்துத் தவமிருந்தார். பின்னர்
ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவைக் கண்டு வணங்கி, முக்தி நிலையை எய்தினார் சுகப்பிரம்ம மகரிஷி.

இந்தப் புராண பின்னணியை மனதில் கொண்டு கி.பி.1136ம் ஆண்டு பராந்தக சோழனின் மகன் விக்கிரம சோழனால் இக்குன்றில் அரங்கநாதருக்கு ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டது. அதுமுதல் அடியார்களின் குறைகளை நீக்கி அருள்பாலித்து வருகின்றார் ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள்.

எழில்மிகு சிறு குன்றின் மீது கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீ ரங்கநாத பெருமாள். 108 திவ்ய தேசங்களை நினைவூட்டும் விதமாக 108 படிகள் கடந்து மேலே செல்ல, முதலில் மேற்குப்புறமாக வசந்த மண்டபம் காணப்படுகின்றது. அடுத்ததாக, மூன்று நிலைகள், ஏழு கலசங்களைக் கொண்ட இராஜகோபுரம் வரவேற்கிறது. உள்ளே, மகா மண்டபத்தில் தென்திசையை பார்த்தபடி ஸ்ரீ வீர ஆஞ்சனேயர் தரிசனமளிக்கின்றார். சற்று இடதுபுறம் திரும்பினால், ஸ்ரீ ரங்கநாயகி தாயார் அலங்கார ரூபத்தில், சர்வ மங்கலங்களையும் அருளும் கடாக்ஷியாக திருவருள் பொழிகின்றாள். அருகில்
ஸ்ரீ நரசிம்மர் தரிசனம். மகாமண்டபம் கடந்து பெரிய அந்தராளத்தை அடைந்தால், எழில் சுரக்கும் ஸ்ரீரங்கநாதப் பெருமாளை கண்குளிரக் கண்டு தரிசிக்கலாம்.

பதினைந்து அடி நீளமுள்ள ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது மரக்காலை தலைக்கு வைத்தபடி, அனந்த சயனத்தில் பெருமாள் சயனித்திருக்க, ஸ்ரீதேவியும் பூதேவியும் அரங்கனுக்கு சேவை புரிகின்றனர். திருப்பாதங்களின் அருகே பிரகலாதனும், சுகபிரம்ம மகரிஷியும் தவமிருக்க, பரந்தாமனின் திருமுகமோ பக்தர்களை நோக்கி இருக்கிறது. இந்த பூலோக வைகுண்டத்தின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. நேரில் வந்து தரிசித்தால்தான் இந்த பேரானந்தத்தை அனுபவிக்கலாம். உத்ஸவ மூர்த்தங்களாக ஸ்ரீதேவி, பூதேவியுடனான ஸ்ரீமஹாவிஷ்ணு நின்றபடி சேவை சாதிக்கின்றார்.

அரங்கனின் அதியற்புத தரிசனம் முடித்து, ஆலய வலம் வருகையில் ஆண்டாளை  தரிசிக்கின்றோம். சன்னிதிக்கு வெளியே தனியாக சன்னிதி கொண்டுள்ளார் பெரிய திருவடியான கருடாழ்வார். மலையின் வடக்குப் பகுதியில் சுனை வடிவில் தல தீர்த்தமான நாரத தீர்த்தத்தைக் காணலாம். இங்கு சொர்க்கவாசலும் அமைந்துள்ளது.

இக்கோயிலில் சோழர் காலக் கல்வெட்டுகள் பெருமளவில் காணப்படுகின்றன. கி.பி.1140ல் முதலாம் குலோத்துங்கன், கி.பி. 1135ல் சகலலோகச் சக்கரவர்த்தி இராஜநாராயண சம்புவராயர், கி.பி. 1529ல் வீரசிங்கதேவரின் மகனான அச்சுத தேவமகாராயர் ஆகியோரால் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட அநேக வைஷ்ணவ சம்பிரதாயங்களும் இங்கு விசேஷமாக அனுசரிக்கப்படுகின்றன.

திருமண பாக்கியம் மற்றும் குழந்தைப் பேறு வேண்டுவோர் இக்கோயில் அரங்கனுக்குத் திருமஞ்சனம் செய்வித்து, நற்பலன் அடைகின்றனர். அரசு வேலை மற்றும் வேலையில் இடமாற்றம் வேண்டுவோர் பலர் இங்கு வழிபட்டு பலன் அடைந்துள்ளனர். அயல்நாட்டு வேலை வாய்ப்பும் இத்தல அரங்கனின் அருளால் பலருக்கும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைவிடம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இவ்வூர், வந்தவாசி - சேத்பட் வழியில் தேசூருக்கு அருகே அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com