
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 52-வது சிவத்தலம் இது.
காசியில் சிவபெருமானை வழிபட்ட பிறகு சனீஸ்வரன் இங்கு வந்து வழிபட்டதாக கருதப்படுகிறது. அதனால் இத்தலத்தில் உள்ள சனீஸ்வரன் புகழ்பெற்று விளங்குகிறார். திருநள்ளாறு கோவிலில் இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர், இறைவி பிராணேஸ்வரி என அழைக்கப்படுகிறார்கள். தர்ப்பை வனத்தில் தோன்றியதால், இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் எனப்படுகிறார். இவரை திருமால், பிரம்மன், இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், புலத்தியர், அர்ச்சுனன், நளன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
இத்தல சனீஸ்வரரை வணங்கினால் ஏழரை சனி, சனி தோஷம், அஷ்டம சனி உள்ளிட்ட பல சனிகளின் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். சனிக்கிழமைகளில் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் சனியின் பிடியில் இருந்து விடுபட வெள்ளிக்கிழமை இந்த கோவிக்கு வந்து இரவில் தங்கி மறுநாள் காலையில் நள தீர்த்த குளத்தில் நீராடிய பின்னர் சனீஸ்வரரை தரிசனம் செய்து, இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் வழிபாடு செய்தால் சனியின் தாக்கம் படிப்படியாக குறையும் என்பது ஐதீகம்.
இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி சனிபகவான் வரும் மார்ச் மாதம் 29-ம் தேதி, கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
இந்த கோவிலை பொறுத்தவரை வாக்கிய பஞ்சாங்க முறைப்படி தான் சனி பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த சில தினங்களாக வருகிற 29-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதாக தகவல் பரவியதால் பக்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
அதாவது திருக்கணி பஞ்சாங்கப்படி இந்த ஆண்டா அல்லது வாக்கிய பஞ்சாங்க முறைப்படி அடுத்த ஆண்டா என்ற குழப்பம் மக்கள் மனதில் எழுந்தது.
இதுகுறித்து திருநள்ளாறு கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் வாக்கிய பஞ்சாங்கம் முறையை பின்பற்றியே காலம்காலமாக சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்று வருகிறது. இந்த பாரம்பரிய கணிப்பு முறையின்படி அடுத்தாண்டு, அதாவது 2026-ம் ஆண்டு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று விளக்கம் அளித்துள்ளனர். அதுமட்டுமின்றி வருகிற 29-ந் தேதி அன்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவில்லை என்றும் அன்றைய தினம் வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் தெளிவுப்படுத்தி உள்ளனது. அதனால் பொதுமக்கள் சனிப்பெயர்ச்சி விழா குறித்து உலாவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
2026-ம் ஆண்டு நடைபெறும் சனிப்பெயர்ச்சி சம்பந்தமான விழா நடைபெறும் சரியான தேதி, நேரம் உள்ளிட்டவை பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொது மக்கள் திருநள்ளாறு கோவிலில் பின்பற்றப்படும் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க வழிபாட்டு மரபை கருத்தில் கொண்டு செயல்படுமாறு வதந்திகளுக்கு கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.