திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 5ம் நாளில், கருட வாகன சேவையில் மலையப்பசுவாமி எழுந்தருளினார். பணக்கார கடவுள் என அழைக்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடம் முழுவதும் கூட்டம் அலைமோதும். அதுவும் புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் திணறுவார்கள். புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் ஆண்டுதோறும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும்.
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. முதல் பிரம்மோற்சவமான வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில் இரண்டாவது பிரம்மோற்சவமான நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது.
9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தை காண தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 5ஆம் நாள் காலை மோகினி அலங்கார புறப்பாடு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் மலையப்ப சாமிக்கு தங்க, வைர ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, மலையப்ப சாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். இதனை நான்கு மாட வீதிகளில் காத்திருந்த சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு தரிசித்தனர். முன்னதாக, கருட வாகன புறப்பாட்டை தரிசிக்க காலை முதலே காத்திருந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் உணவு, குடிநீர், பால் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.