திருப்பதி லட்டுக்கு வயது 308!

திருப்பதி லட்டுக்கு வயது 308!

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் மகா பிரசாதமாக விளங்கும் லட்டுக்கு 308 வயதாகிறது. திருப்பதி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தவறாமல் வாங்கி வருவது லட்டு பிரசாதம் ஆகும். ஸ்ரீவாரி லட்டு என்று அழைக்கப்படும் இந்த லட்டு பிரசாதம் பகவானின் பரிபூரண அருள் நிறைந்ததாக பக்தர்களால் கருதப்படுகிறது. திருமலை கோவிலில் சம்பங்கி பிரதக்ஷணம் என்னும் இடத்தில் உள்ள பொட்டு என்ற மடப்பள்ளியில் கார் மீகலு என பிரத்தியேகப் பெயர் கொண்ட பணியாளர்களால் இந்த லட்டு தயாரிக்கப்படுகிறது.

திருமலையில் பெருமாளுக்கு பொங்கல், போளி, அப்பம், பாயாசம், தயிர் சாதம், புளி சாதம், சித்ரான்னங்கள், வடை உள்பட பல பதார்த்தங்கள் நெய்வேத்தியம் செய்யப் பட்டாலும் அனைத்திலும் பிரதானமான பிரசாதமாக லட்டு விளங்குகிறது. இந்த லட்டுவில் கடலை மாவு கல்கண்டு சர்க்கரை ஏலக்காய் பசு நெய் முந்திரி உலர் திராட்சை குங்குமப்பூ ஆகியவை சரியான விகிதத்தில் சேர்க்கப்படுவதுடன் பக்தியும் கலந்து தூய்மையாக தயாரிக்கப்படுகிறது.

 திருமலை வேங்கடவனுக்கு முதல் முறையாக 1715 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் நாள் லட்டு நிவேதனம் செய்யப்பட்டது 1940 ஆம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு லட்டு மகா பிரசாதமாக வழங்கப்பட்டது. தற்போது விற்கப்படுகிறது. அக்கால கட்டத்தில் எட்டணாவுக்கு விற்கப்பட்ட ஒரு லட்டு தற்போது ரூபாய் 50க்கு விற்கப்படுகிறது.

திருமலையில் மூன்று வகையான லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. 750 கிராம் வரை எடை கொண்ட ஆஸ்தான லட்டு முதன்மையான விழா நாட்களில் மட்டும் தயாரிக்கப்படுகிறது. அடுத்தபடியாக கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு கல்யாண உற்சவ லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. 175 கிராம் எடை கொண்ட புரோகித லட்டு பொதுவாக அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு திருமலை லட்டு பிரசாதத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

மூன்று நூற்றாண்டுகளைக் கடந்து வேங்கடவனுக்கு பிரசாதமாக படைக்கப்படும் திருப்பதி லட்டு பவித்திரமானது.

திருப்பதியில் லட்டு ஏன் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது என்பதற்கு ஒரு வரலாறு உண்டு

பெருமாளை தரிசித்த பின்பும் சில நாட்கள் மலையில் தங்கி ஓய்வு எடுத்து பிறகு ஊர் திரும்புவது மக்களின் வழக்கம். அவர்கள் திரும்பி வீடுகளுக்கு செல்லும் வரை தேவையான உணவு அவர்களுக்கு கோவில் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனால் முதலில் திருப்பொங்கல் என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது . சரித்திர காலம் முதல் பெருமாளுக்கு பலவகையான நெய்வேத்தியங்கள் படைக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் தேவராயர் காலத்தில் நைவேத்தியர்களின் எண்ணிக்கை பலவாக பெருகியது. சேகர மல்லாண்ணன் என்கிற அமைச்சர் பலவகையான தானங்களை வழங்கினார். அப்போதுதான் ஸ்ரீவாரி நெய்வேத்திய சமயம் எனும் முறை ஏற்படுத்தப்பட்டது. அந்த காலத்தில் திருமலையில் உணவகங்கள் அவ்வளவாக இல்லை. பிரசாதங்கள் தான் பக்தர்களின் பசியை போக்கும் அருமருந்தாக இருந்தன. பக்தர்களுக்கு அளிக்கப்படும் பிரசாதம் திருப்பொங்கல் என்று முன்பு அழைக்கப்பட்டது. பின்னரே அதிரசம் அப்பம் வடை சுய்யம் மனோகரம் பொடி பிரசாதங்கள் தயார் செய்யப்பட்டன. வேறு எதுவும் வெகு நாட்கள் தாங்காது 1803 ஆம் ஆண்டிலிருந்து லட்டு பிடிப்பதற்கு முன்னர் உதிரியாக இருக்கும் பூந்தி இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏழுமலையானுக்கு பிரசாதங்களை தயாரித்து பூஜைக்கு வழங்கியவர் கல்யாண அய்யங்கார் குடும்பத்தினர். லட்டைஅன்றாட பிரசாதம் ஆக்கியவரும் இவர் தான் என சொல்லப்படுகிறது. கல்யாணம் அய்யங்கார் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படும் இவர் இயற்பெயர் ஸ்ரீமான் பூதேரி பத்தங்கி சீனிவாச ராகவன். இவர் பூதேரி என்ற கிராமத்தில் இருந்து தமது உறவினர்களுடன் திருப்பதியில் தங்கி திருமலை ஏழுமலையானுக்கு கைங்கரியம் செய்ய தம்மையும் தன் குடும்பத்தையும் ஈடுபடுத்திக் கொண்டவர். ஒருநாள் பெரும் செல்வம் படைத்த வியாபாரி ஒருவர் தனது கோரிக்கையை நிறைவேற்றினால் மலை போன்ற பிரம்மாண்டமான லட்டை தயாரித்து பெருமாளின் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அளிப்பதாக வேண்டிக் கொண்டாராம். பெருமாளும் அவருடைய வேண்டுதலின் நிறைவேற்றினார். அப்போது உருவானது தான் லட்டு பிரசாதம். முன்னர் மிராசுதாரர்கள் லட்டு செய்யும் பணியை மேற்கொண்டனர் அவர்களுக்கு ஊதியமாக லட்டுகளே தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com